Saturday, October 14, 2023
HomeAstrological Remediesஉறவில் பிரச்சனையும்- பரிகாரமும்

உறவில் பிரச்சனையும்- பரிகாரமும்

தந்தையால் மன விரக்தி கொண்டவர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் வரும் சனி ஓரையில் சிவ வழிபாடு செய்து வர வேண்டும்.

தந்தை-மகன் உறவில் பிரச்சனையும்- பரிகாரமும்
சிவன்
ஒரு மனிதன் பூமியில் பிறந்து வாழும் காலத்தில், சாதனை மனிதனாக வாழ வேண்டும். அதாவது எந்த வேலையை செய்தாலும் அதில் புகழ் வரும்படி செய்ய வேண்டும். இல்லை என்றால் அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது. இதைத்தான் திருவள்ளுவர், “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்று எடுத்துரைக்கிறார்.

ஒருவர் புகழுடன் வாழ வேண்டும் என்றால், 1, 5, 9 என்னும் பூர்வ ஜென்ம தொடர்புடைய பாவகங்களில் 9-ம் பாவகம் மிக முக்கியம். தந்தை என்ற 9-ம் பாவகம் இருந்தால் தான், 1-ம் பாவகம் என்ற ஜாதகர் ஜனனமாக முடியும். 1-ம் பாவகம் என்ற லக்ன பாவகம் சிறப்பாக இருந்தால்தான், 9-ம் பாவகம் என்ற பூர்வ புண்ணிய பலத்தால், 5-ம் பாவகம் என்ற குழந்தை பாக்கியம் கிடைக்கும். எனவே ஒரு ஜாதகரை வலிமை பெறச் செய்யும் திரிகோண ஸ்தானங்களான 1,5,9 ஆகியவற்றில் 9-ம் பாவகமானது வலிமையுடன் இருக்க வேண்டும்.

உன்னைப் பெற்ற தந்தை யார்?, உன் உடம்பில் உள்ள டி.என்.ஏ.வை யாரிடம் இருந்து நீ பெற்றாய் ?, உன் குலம் – கோத்திரம் என்ன?, பெற்றவர்கள் செய்த புண்ணிய பலத்தால் நீ பிறந்தாயா? அல்லது பெற்றவர்களின் பாவத்தை தீர்க்கப் பிறந்தாயா?, உன்னால் உன் தந்தை புகழப்படுவாரா? அல்லது உன் தந்தையால் உனக்கு புகழ் கிடைக்கப் போகிறாதா?, முன்னோர்களின் சொத்துக்கள் உழைப்பால் வந்ததா? அல்லது அநீதியாக வந்ததா?, நீ முன்னோர்களின் சொத்து, சுகத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவனா?, உன் பிறப்பின் நோக்கம் என்ன? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை தருவதுதான் 9-ம் பாவகம். மொத்தத்தத்தில் இந்த ஜென்மத்தில் உனக்கு என்ன கொடுப்பினை உள்ளது. நீ அனுபவிக்கப் போகும் நல்ல, தீய வினைப் பயன்கள் என்ன என்பதைப் பற்றி இதன் மூலம் அறிய முடியும்.

ஒரு தாய் தன் குழந்தையை பத்து மாதம் கருவில் சுமக்கிறாள். தந்தை என்பவரோ, தன் வாரிசுக்கு முன் மாதிரியாக வாழ்பவர். அவர்கள் சொல்லும் முன்பாகவே அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவர். வாழ்நாள் முழுவதும் பிள்ளையை தன் நெஞ்சில் சுமந்து, சமுதாயத்தில் தலைசிறந்த குடிமகனாக மாற்றும் பொறுப்பு கொண்டவர்.

இது ஒருபுறம் இருக்க பல குடும்பங்களில் தந்தையும் மகனும் பங்காளிகளைப் போல வாழ்கிறார்கள். பல இடங்களில் இன்னும் ஒரு படி மேலே போய் தந்தையும், மகனும் பேசிக் கொள்வதே கிடையாது. அல்லது கடும் பகைவர்களாக இருக்கிறார்கள்.

தந்தை- மகன் உறவை மூன்றாக வகைப்படுத்தலாம். இதில் முதலாவது, தந்தையும் மகனும் ஒருமித்த கருத்துடன் வாழ்வது. இவர்களுடைய ஜாதகத்தில் தர்ம கர்மாதிபதி யோகம் இருக்கும். இல்லையெனில் 9-ம் இடத்திற்கு லக்ன சுபர் அல்லது குருவின் பார்வை இருக்கும். தா்ம கா்மாதிபதி யோகம் வரமாக செயல்படும். இவர்கள் பரம்பரை பரம்பரையாக தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற தாரக மந்திரத்துடன் வாழ்வார்கள்.

தந்தை- மகனுக்கு இடையே கருத்துவேறுபாடு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பது இரண்டாவது வகை. இவர்களுடைய ஜாதகத்திலும் தர்ம கர்மாதிபதி யோகம் இருக்கும். அந்த யோகமானது இவர்களுக்கு சாபமாக செயல்படும். இவா்கள் ஜாதகத்தில் குரு, சனி வக்ரமாகவோ, பலம் இழந்தோ இருக்கும். குரு அல்லது சனிக்கு, செவ்வாய் சம்பந்தம் இருக்கும்.

தந்தை மகன் கருத்துவேறுபாடு குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மன வருத்தத்தை தரும் விதத்தில் இருப்பது மூன்றாவது வகையாகும். இதனை தந்தையால் மகனுக்கு பாதிப்பு அல்லது மகனால் தந்தைக்கு மன வேததனை என்றும் வகைப்படுத்தலாம்.

ஜனன கால ஜாதகத்தில் கிரக நிலவரம் எப்படி இருந்தாலும், தந்தை – மகன் கருத்து ஒற்றுமை என்பது மிக அவசியம். இதற்கு தீர்வு கிடைக்குமா? உண்டா? என்பதே பலரின் ஆதங்கம். இதை ஜாதக ரீதியாக மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் கொஞ்சம் அணுகவேண்டியதிருக்கிறது.

உளவியல் ரீதியாக எந்த பிரச்சினைக்குமான தீா்வும், நம் கையில்தான் இருக்கிறது. ஒருவருடைய உணர்வை புரிந்து கொள்ளாமை, சிறிய பிரச்சினையை பெரிது படுத்துவது, சகிப்புத் தன்மை இன்மை போன்றவை கருத்து வேறுபாட்டிற்கு பிரதான காரணமாக இருக்கின்றன. நமது ஆழ்மனதில் நிலவும் மனக்குறையும் கூட பல பிரச்சினைக்கு மூலக் காரணமாக உள்ளது.

உதாரணமாக யாராவது உங்களை பார்த்து “அப்பா சவுக்கியமா?”ன்னு கேட்டா, நீங்க என்ன பதில்களை சொல்றீங்க..

“ஏதோ இருக்கிறார்”, “என்னமோ வண்டி ஓடுது”, “என்னத்த சொல்ல.. எல்லாம் என் தலையெழுத்து”, “ஏண்டா அவருக்கு பிள்ளையா பிறந்தோம்னு இருக்கு”, “எனக்கு மட்டும் நல்ல அப்பாவை தராமல் கடவுள் வஞ்சனை பண்ணிட்டாரு” -பலரிடம் இருந்து விரக்தியின் வெளிப்பாடாக இப்படியான பதில்கள்தான் பெரும்பாலும் வருகிறது.

இதெல்லாம் அவர்களுடைய ஆழ்மனதில் இருந்து வருகிற வார்த்தைகள். இந்த வார்த்தைகள்தான் உங்களோட வாழ்க்கையை தீர்மானம் பண்ணுகிறது. ஏனெனில், ஒரு வார்த்தையை பத்து தடவை சொல்லும் போது, அந்த வார்த்தைக்கு சக்தி கிடைத்து, அது உடனடியாக வேலை செய்ய ஆரம்பித்து விடும். உங்க சொல்படிதான் அனைத்தும் நடக்கும்.

எனவே “நாங்க சந்தோஷமாக இருக்கிறோம்”, “கடவுள் எங்களை நல்லபடியா வைத்து இருக்கிறார்” என்பது போன்ற நேர்மறை வார்த்தைகளை சொல்லிப் பழகுங்கள். அந்த வார்த்தைகள், உண்மையிலேயே உங்க வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வரும்.

பிரபஞ்ச நியதிப்படி ஒரு மனிதன் தன் விருப்பத்திற்கு ஏற்ப, வீடு, வாகனம், தொழில், நண்பர்கள் போன்றவற்றை அமைத்துக்கொள்ள முயற்சிக்கலாம். தான் விரும்புவது போல் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் தாய்- தந்தை, முன்னோர்கள், உடன்பிறந்தவர்கள், நமக்கு பிறக்கும் பிள்ளைகள், உற்றார்- உறவினர்களை தேர்வு செய்யும் உரிமையை, இந்த பிரபஞ்சம் யாருக்கும் வழங்குவதில்லை. எத்தனை கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் இந்த பூர்வ ஜென்ம பந்த, ரத்த உறவுகளை உதறித் தள்ள முடியாது. “உறவுகளே வேண்டாம்” என்று ஒதுங்கி நின்றாலும், நம் முன்னோர்கள் மற்றும் தாய், தந்தை வழியாக நமக்குள் புகுந்த மரபணுக்களே நம்மை இயக்கும். எனவே வாழும் காலத்தில் அனுசரித்து வாழ்வதே அனைவருக்கும் நல்லது.

தந்தையால் மகனுக்கு பயனற்ற நிலை

9-ம் அதிபதி, 9-ல் நின்ற கிரகம் வக்ரம், நீச்சம், அஸ்தமனம் பெற்று இருந்தால் அல்லது 9-ல் சனி, ராகு-கேது இருந்தால் தந்தை – மகன் ஒற்றுமை இருக்காது.

9-ம் அதிபதி 6, 8, 12-ல் மறைந்திருந்தால், அந்த நபருக்கு தந்தையால் பயன் ஒன்றும் கிடைக்காது.

9-ல் சூரியன் இருந்தாலோ, சூரியன் மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ தந்தையின் ஆதரவு கிடைக்காது.

9-ம் அதிபதி 6-ல் இருந்தால், பூர்வீகச் சொத்துக்களால் கடன், பூர்வீகச் சொத்து இழப்பு, எதிரி தொல்லை, புகழுக்கு களங்கம், முன்னேற்ற குறைவு போன்ற காரணங்களால், தந்தை- மகனுக்கு இடையே கருத்துவேறுபாடு நிலவும்.

9-ம் அதிபதியானவர் 8, 12-ல் இருந்தால், அதிர்ஷ்ட குறைவு, அதிகச் செலவு, ஏழ்மை, பூர்வீக சொத்து பறிபோதல் போன்ற காரணங்களால் தந்தையின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காது.

சனி, ராகு- கேது அல்லது மாந்தியால் சூரியனுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தந்தையால் பயன் இருக்காது.

9-ம் இடத்தில் சந்திரன் – சனி சேர்க்கை அல்லது சந்திரன் சனியின் பார்வை இருந்தால், அந்த ஜாதகர் தந்தையால் பலவிதமான துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.

9-ல் தனித்த சனி அல்லது சூாியன் – சனி சம்பந்தம் இருந்தாலும், அந்த ஜாதகருக்கு தந்தையின் பாசம் கிடைக்காது.

மகனால் தந்தைக்கு மன வருத்தம்

5-ம் இடம் அல்லது 5-ம் அதிபதிக்கு செவ்வாய், சனி பார்வை அவ்வளவு நல்லதல்ல.

5-ம் அதிபதி, 5-ல் நின்ற கிரகம் ஆகியவை நீச்சம், பகை, அஸ்தமனம், வக்ரம் அடைந்தாலும், 5-ல் ராகு ,கேது, சனி போன்ற பாவ கிரகங்கள் இருந்தாலும், வாரிசுகளால் மனவருத்தம் உண்டாகும்.

5-ம் இடம் அல்லது 5-ம் அதிபதிக்கு 6, 8, 12 போன்ற மறைவு ஸ்தான சம்பந்தம் இருந்தால், பெற்றோர்களை பிரிந்து வாரிசுகள் வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலத்தில் வாழும் நிலையை ஏற்படுத்தும்.

பரிகாரம்

வாரிசுகளால் மன உளைச்சலை சந்திப்பவர்கள், சனிக்கிழமை காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள், சூரிய ஓரை நேரத்தில் சிவ வழிபாடு செய்து, எள் சாதம் தானம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தந்தையால் மன விரக்தி கொண்டவர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் வரும் சனி ஓரையில் சிவ வழிபாடு செய்து வர வேண்டும். அத்துடன் சிவன் கோவில் கருவறையில் எரியும் தீபத்திற்கு நல்லெண்ணெய் வாங்கிக் கொடுத்தால் விரைவில் மாற்றம் உண்டாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 16 =

Most Popular