Saturday, October 14, 2023
HomeAstrological Remediesகுழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம்!

குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம்!

குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம்!

சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் கோயில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்பது வள்ளுவன் வாக்கு. அதாவது குழலின் இசையும், யாழின் இசையும் இனிது என்பவர்கள், அவர்தம் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவர்களே என்கிறார் திருவள்ளுவர். குழந்தை பாக்கியம் இல்லாமை என்பது தசரதர் காலத்திலேயே இருந்திருக்கிறது. தன்னுடைய குலகுரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி, தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் செய்ததாக ராமாயணம் கூறுகிறது.

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியம் மற்றும் புத்திர ஸ்தானத்தைக் குறிப்பதாகும். குழந்தைகளின் எதிர்காலம், தந்தை செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த பாவம், கல்வி, புத்திக்கூர்மை, சாஸ்திர ஞானம் முதலியவற்றையும் இந்த ஐந்தாம் இடத்தின் மூலமாகவே அறிந்துவிட முடியும்.

மனிதன் தன்னுடைய கர்ம வினைகளின் காரணமாகவே பிறக்கிறான். கர்மா தீர, புத்திரன் வேண்டும் என்று திருமணம் செய்து கொள்கிறான். நாம் முற்பிறப்பில் சேர்த்து வைத்த புண்ணியம் தான் குழந்தையாகப் பிறக்கும் என்பார்கள். தன் தகப்பனின் ஆத்மாவை ‘புத்’ எனும் நரகத்தில் இருந்து காப்பாற்றுபவன் என்பதால் ‘புத்திரன்’ என்கிறார்கள்.

அபிராமி பட்டர் பதினாறு வகைப் பேறுகளை திருக்கடையூர் அபிராமி அன்னையிடம் வேண்டும்போது, ‘தவறாத சந்தானம் வேண்டும்’ என்று கேட்கிறார். அதாவது மற்றப் பேறுகள் எல்லாம் தவறினாலும் பாதகமில்லை; குழந்தைப் பாக்கியம் எனும் சந்தானப் பிராப்தி தவறாமல் கிடைக்க அருள் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

குழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அவை சயன தோஷம், புத்திர தோஷம் என்பனவாகும். இந்த தோஷங்கள் இருப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உருவான கரு நிலையாக இல்லாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.

இப்படிப்பட்ட சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோயில். இங்கு கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படும் கிருஷ்ண ஜெயந்தி அன்று, கிருஷ்ணரின் திரு அவதார திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கண்ணன் தவழ்ந்து வரும் அழகைக் காண, அவனைப் பெற்ற தேவகிக்குக் கூட கொடுத்து வைக்கவில்லை. காரணம்… அவள் சிறையில் இருந்தாள். நள்ளிரவில் சிறையில் கண்ணன் பிறக்க, அங்கிருந்து அன்றே ஆயர்பாடியின் யசோதையிடம் இடம் பெயர்ந்து வளர்க்கப்பட்டான். அதனால்தான் சிறுவயதில் கண்ணன் தவழும் திருக்கோலத்தை யசோதையும், அங்கிருந்த ஆயர்பாடி மக்களுமே கண்டு தரிசித்து நற்பேறு பெறும் பாக்கியம் பெற்றனர்.

ஆயர்பாடியில் கண்ணன் சிறுகுழந்தை வடிவில் தவழும் அதே திருக்கோலத்தில் தொட்டமளூர் திருத்தலத்தில் தவழ்கிறான் கண்ணன். நான்காம் நூற்றாண்டில் ராஜேந்திர சிம்ம சோழன் எனும் மன்னன் இந்தக் கோயிலைக் கட்டி உள்ளார். ராஜ ராஜசோழன் காலத்துக் கல்வெட்டுகளும் இங்கு காணப்படுகின்றன. ராமானுஜர், ராகவேந்திரர், வியாசராஜரும் இங்கு வழிபட்டுள்ளனர்.

கிழக்குப் பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், மூலவர் தரிசனத்தைக் காணலாம். இங்கு மூலவராக மூன்றடி உயரத்தில் சாளக்கிராமக்கல்லில் வடிவமைக்கப்பட்ட ராம அப்ர மேயர் எழுந்தருளி உள்ளார். இந்தப் பெருமாளை ராமர் வழிபாடு செய்துள்ளாராம். அதனால் தான் ‘ராம அப்ர மேயர்’ என்று பெயர். ‘அப்ரமேயன்’ என்ற சொல்லுக்கு ‘எல்லையில்லாதவன்’ என்று பொருள்.

ஆலயத்தின் தென்மேற்கில் தனிச் சன்னிதியில் கிழக்குப் பார்த்த வண்ணம் அரவிந்தவல்லித் தாயார் அருள்பாலிக்கிறாள். ஆலயத்தின் வடமேற்கில் உள்ள விஷ்ணு தீர்த்தக் குளத்தில் சுயம்புவாய் தோன்றியவர் இத்தல தாயார் என்கிறார்கள். இவரை வெள்ளிக்கிழமை தோறும் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.

நவராத்திரி, வரலட்சுமி விரதம் முதலிய நாட்களில் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் அரவிந்தவல்லித் தாயாரை வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் தரித்திரம், பீடை, வறுமை அகலும்.

அடுத்து பிரகார வலம் வருகையில் வடமேற்கில் கிழக்குப் பார்த்தவண்ணம் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு குழந்தை கிருஷ்ணன் தலையை திருப்பி, தவழும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுருட்டைத் தலை முடி, கழுத்தில் முத்துமாலை, அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு அணிந்து, திருப்பாதங்களில் சங்கு, சக்கர ரேகைகளுடன் கருடபீடத்தில் இந்த நவநீத கிருஷ்ணன் அருள்கிறார்.

சாளக்கிராமக் கல்லில் உருவான இத்தல நவநீத கிருஷ்ணனை, மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். ராகவேந்திரர் இங்கு வந்து தங்கி வழிபாடுகள் செய்துள்ளாராம். மகான் புரந்தரதாசர் தொட்டமளூர் தவழும் குழந்தை கண்ணனை தரிசிக்க வந்தபோது, கோயில் மூடப்பட்டிருந்தது.

அதனால் அவர் வெளியில் இருந்தபடியே ‘ஜகத்தோதாரணா அடிசிதள யசோதா’ என்னும் கீர்த்தனையைப் பாடினார். என்ன ஆச்சரியம், கோயில் கதவு திறந்து கொண்டது. அப்போது நவநீத கிருஷ்ணன் சன்னிதியில் உள்ள கண்ணன், உள்ளிருந்து தமது தலையை திருப்பி புரந்தரதாசரை எட்டிப்பார்த்தான். அதனால்தான் இன்றும் இத்திருத்தல தவழும் கண்ணன் சன்னிதியில் கண்ணன் தவழும் நிலையில் தலையை திருப்பி பார்த்தவண்ணம் உள்ளாராம்.

நவநீத கிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கியத் தடை உள்ளவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் கோகுலாஷ்டமி, ராம நவமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசியில் விழாக்களும், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், தீபாவளி, சங்கராந்தி, மாதாந்திர ரோகிணி நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகளும், திருமஞ்சனமும் நடைபெறுகிறது. இன்றும் அர்த்தஜாமத்தில் இங்கு கபில மகரிஷியும், கண்வ மகரிஷியும் வழிபாடு நடத்துவதாக நம்பப்படுகிறது.

இந்தக் கோயிலானது, பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சென்னப்பட்டினா என்னும் ஊர். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் அமைந்து உள்ளது. இங்கு தான் நவநீத கிருஷ்ணன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =

Most Popular