ஆரோக்கியம் மேம்பட பரிகாரம்!

150

ஆரோக்கியம் மேம்பட பரிகாரம்!

புதன்கிழமைகளில் பிரதோஷ வேளைகள் பெரும்பாலும் குரு மற்றும் செவ்வாய் ஓரையில் அமையும். எனவே குருவின் அருள் வேண்டுபவர்களும், செவ்வாய் தோஷம் உடையவர்களும் புதன் கிழமைகளில் வரும் பிரதோஷ வேளையில் நரசிம்ம மூர்த்தியை வணங்க குருவருளும் திருவருளும் வாய்க்கும்.

கடுந்தவங்கள் மேற்கொண்டு பிரம்மனிடம் வரங்கள் வேண்டிப் பெற்றான் இரண்யன். தன் மரணம், மனிதர்களாலோ, விலங்குகளாலோ, வானத்திலோ, பூமியிலோ, பகலிலோ, இரவிலோ நிகழக்கூடாது என்று வரம் வாங்கினான். அதனால் அவனை அழிக்க நாராயணர் நரசிம்மமாக பிரதோஷ வேளையில் அவதரித்து இரண்யனைத் தன் மடியினில் கிடத்தி வதம் செய்தார். அப்படி பகவான் நரசிம்மர் அவதரித்த அன்று சுவாதி நட்சத்திர தினம். பகவான் அவதரித்த சுவாதி நட்சத்திர தினத்தில் விரதமிருந்து வழிபடுவதும் நம் சங்கடங்கள் அனைத்தையும் நீக்கும் என்பது ஐதிகம்.

தினமும் வரும் மாலை வேளைக்குப் பிரதோஷ வேளை என்று பெயர். அவற்றை நித்திய பிரதோஷம் என்கிறோம். திரயோதசி திதி அன்று வரும் பிரதோஷ வேளை சிறப்புவாய்ந்தது என்பதால் அந்த தினத்தையே பிரதோஷ தினம் என்று கூறுவோம். பிரதோஷ வேளையில் சிவவழிபாடு செய்வதைப் போலவே நரசிம்ம வழிபாடும் செய்வது சிறப்புவாய்ந்தது. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து காப்பவர் நரசிம்மர். நாளை என்பதே நரசிம்மரிடம் இல்லை என்று கூறுவார்கள். அந்த அளவுக்குத் தன்னை சரணாகதி அடையும் பக்தர்களின் துயரை உடனடியாக நீக்கியருள்பவர் நரசிம்மர்.
நரசிம்மர்

பொதுவாகப் பெருமாள் கோயில்களில் நவகிரக சந்நிதிகள் இருப்பதில்லை. தசாவதாரத்தில் ஒவ்வோர் அவதாரமும் ஒவ்வொரு கிரகத்தின் அம்சம் கொண்டு அருள்பவை. இதன்படி நரசிம்ம அவதாரம் செவ்வாயின் அம்சத்தில் விளங்குவது. நரசிம்மரை தினமும் வணங்கி வந்தால் செவ்வாய் கிரகத்தால் உண்டாகும் கெடுபலன்கள் இல்லாமல் போகும்.

இன்று பிரதோஷ தினம். ஒவ்வொரு தினத்திலும் பிரதோஷ வேளை வரும் ஓரைகளைக்கொண்டு வழிபாட்டால் கிடைக்கும் சிறப்புப் பலன்களைச் சொல்வது உண்டு. இன்று புதன்கிழமை. புதன்கிழமைகளில் பிரதோஷ வேளைகள் பெரும்பாலும் குரு மற்றும் செவ்வாய் ஓரையில் அமையும். எனவே குருவின் அருள் வேண்டுபவர்களும், செவ்வாய் தோஷம் உடையவர்களும் புதன் கிழமைகளில் வரும் பிரதோஷ வேளையில் நரசிம்ம மூர்த்தியை வணங்க குருவருளும் திருவருளும் வாய்க்கும். மேலும் திருமண வரம் வேண்டுபவர்கள், உடல் ஆரோக்கியம் வேண்டுபவர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய பிரதோஷம் புதன்கிழமை வரும் பிரதோஷம்.