நவக்கிரக பரிகார கோயில்களை எப்படி வழிபடுவது?
1.சூரியன்: சூரியனார் கோவில்:
இங்கு வந்து முதலில் நவக்கிரகங்களுக்கு அருள் புரிந்த திருமங்கலங்குடி ஸ்ரீ பிராண நாதேஸ்வரரை வழிபட்டு பின்பு சூரியனார் கோவில் சென்று கருவறையில் சூரிய சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சூரியனை வழிபடுவதாலும் இங்குள்ள நவக்கிரகங்கள் வழிபடுவதாலும் அனைத்து தோஷங்களும் நீங்கப் பெறுவர். ஞாயிறு வழிபாடு சிறப்பு.
வழித் தடம்:
கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.
திருவலஞ்சுழி:
தஞ்சாவூர் அருகிலுள்ள திருவலஞ்சுழியில் உள்ள சுபர்தீஸ்வரர் கோவிலில் சூரியன், சனி ஆகிய இரண்டு கிரகங்களும் நேருக்கு நேர் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இருவரும் நட்பு நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள் சூரியன் மற்றும் சனி பகவானால் ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இத்திருக்கோவில் சென்று அர்ச்சனை செய்தால் தோஷம் நிவர்த்தியாகும்.
சூரக்குடி:
சூரியனுக்கு சாபம் நீக்கி அருள் தந்த சுந்தரேசர் சன்னதி. சூரிய, சனி தோஷங்களை நீக்கும் ஸ்தலம். குன்றக்குடி கிழக்கே 12 கிமீ தொலைவிலுள்ளது.
2. சந்திரன்: திங்களுர்:
தாய்க்குப்பீடை நோய், மன நிலை பாதிப்பு, சந்திரன் ஜாதகத்தில் நீசம், மறைவு, பாப கிரக சேர்க்கை உள்ளவர் இங்குள்ள கைலாச நாதர் கோவிலில் உள்ள சந்திரனை வழிபடுவதால் தோச நிவர்த்தியாகும். இந்தக் கோயிலானது கும்பகோணம் – திருவையாறு சாலையில் அமைந்துள்ளது.
3.செவ்வாய்: வைத்தீஸ்வரன் கோவில்:
ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்பு, திருமணத்தடை, தொழில் சிக்கல், வீடு, மனை வாங்க, அடிக்கடி விபத்து போன்றவை ஏற்பட்டாலும், செவ்வாய் தெசை நடைபெறும் காலங்களிலும் இங்கு தனி சன்னதியில் உள்ள செவ்வாய்க்கு தீபம் ஏற்ரி தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோசமும் நீங்கும். மயிலாடுதுறையிலிருந்து 14 கிமீ தூரத்தில் இந்தக் கோயில் உள்ளது.
பழநி- திருவாவின்குடி:
செவ்வாய்க்கிழமை மதியம் உச்சிகால பூஜையில் முருகனுக்குப் பால் அபிசேகம் செய்து வழிபட தோசம் நீங்கும். திண்டுக்கல்லில் இருந்து 60 கிமீ தூரத்திலுள்ள பழநி அடிவாரத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
4. புதன்:
திருவெண்காடு; குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வமின்மை, தடங்கல்கள் ஏற்படும் போது இங்குள்ள புதன் வழிபட்ட ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரரையும் தரிசித்து பின்பு அங்கு எழுந்தருளியுள்ள புதனையும் வழிபட்டால் தோசங்கள் நீங்கும். மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் அமைந்துள்ளது.
5.குரு:
ஆலங்குடி; திருமணத்தடை, புத்ர தோஷம், குடும்ப ஒற்றுமை நிம்மதி குறைவு, ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர் வியாழக்கிழமை இங்குள்ள குரு பகவானை நெய் தீபம் ஏற்றி, வழிபடுவது சிறந்த பரிகாரமாகும். கும்பகோணம் மன்னார்குடி சாலையிலுள்ளது,
தென்குடி திட்டை:
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜ குருவாக நின்ற கோலத்தில் தனி சந்நிதியில் அருள் பாலித்து வருகிறார். எனவே, இத்தலமே குரு பரிகாரம் செய்வதற்கு சிறந்த தலம் என்பது பெரியோர் கருத்து. தஞ்சாவூர் திருக்காவூர் சாலையில் பள்ளி அக்ரஹாரம் வழியாக மெலட்டூர் செல்லும் பாதையிலுள்ளது.
தாருகாபுரம்:
இங்குள்ள சிவன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி பாதத்தில் சுற்றிலும் ஒன்பது நவகிரகங்கள் உள்ளன. இவரை வழிபட்டால் குரு எந்த ராசிக்கு மாறினாலும் நற்பலன் கிடைக்கும். ராஜபாளையம் அருகிலுள்ள வாசுதேவ நல்லூரிலிருந்து இந்தக் கோயிலுக்கு பேருந்து செல்கிறது.
