கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்னென்ன?
கல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்று சொல்வார்கள். அதாவது, கண் திருஷ்டி ஏற்பட்டால் அதனால், ஏற்படும் பாதிப்புகள் அதிகம். ஆதலால், அவர்களது கால் மிதி மண்ணை எடுத்து ஒருவருக்கு சுற்றி போடுவார்கள். அப்படியில்லை என்றால் வீட்டில் இரவு தூங்குவதற்கு முன்னதாக கற்பூரம் சுற்றி வீட்டு வாசலில் கற்பூரம் ஏற்றுவார்கள்.
மிளகு, உப்பு, காய்ந்த மிளகாய் வைத்து மஞ்சள் துணியில் கட்டி அதனை வீட்டில் நிலகதவில் கட்டி வைப்பது உண்டு. இப்படி பல விதமான பரிகாரம் உண்டு. சரி, இந்தப் பதிவில் கண் திருஷ்டி தோஷம் நீங்க என்னென்ன பரிகாரம் செய்யலாம் என்பது குறித்து காண்போம்…
ஆரத்தி: பொதுவாக எந்த சுப நிகழ்ச்சி நட்த்தினாலும் ஆரத்தி சுற்றுவது வழக்கம். அப்படி செய்தால், மற்றவர்களின் கண் திருஷ்டியால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தப் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. ஆரத்தி எடுக்கும் போது குங்குமம் கலந்த தண்ணீர், வெற்றிலை மற்றும் கற்பூரம் கொண்டு ஆரத்தி எடுத்து அதனை வீட்டிற்கு வெளியில் கொண்டு சென்று கொட்டுவது வழக்கம். இதன் மூலம் தீய சக்திகள் விரட்டியடிக்கப்படும் என்பது ஐதீகம்.
வாழை மரம்: வீட்டில் சுப நிகழ்ச்சியின் போது குலை வாழை மரத்தை கட்டுவது வழக்கம். ஏனென்றால், வாழை மரத்திற்கு திருஷ்டி தோஷங்களை ஈர்க்கும் தன்மை உண்டு.
கண்ணாடி: பொதுவாக கண்ணாடிக்கு கெட்ட எண்ணங்களை விரட்டும் தன்மை உண்டு. ஆதலால், வீட்டில் வரவேற்பரையில் அனைவரும் பார்க்கும் வகையில் கண்ணாடி வைப்பது வழக்கம்.
மீன் தொட்டி: கண் திருஷ்டி நீங்க வீட்டில் மீன் தொட்டி வளர்க்கலாம். கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம்.
கண் திருஷ்டி கணபதி: வீட்டில் கண் திருஷ்டி கணபதி படத்தை வைக்கலாம்.
மஞ்சள் ரோஜா செடி, சப்பாத்தி கள்ளி, கற்றாழை, முள் அதிகமுள்ள செடிகள் வளர்க்கலாம். ஆகாச கருடன் என்ற ஒரு வகையான கிழங்கை வாங்கி வைத்து மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டு வாசலில் தொங்கவிடலாம்.
உப்பு குளியல்: வாரத்திற்கு ஒரு முறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வரலாம்.
எலுமிச்சம் பழம்: தொழில் செய்யும் இடங்களில் எலுமிச்சம் பழத்தை இரண்டாக அறுத்து அதில் ஒன்றில் குங்குமம் மற்றொன்றில் மஞ்சள் பொடி தடவி வைக்கலாம். இதனை ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் செய்வது நல்லது. ஒரு முறை வைத்த பழத்தை 3 முறை கடையை சுற்றி அதன் பிறகு தெருவில் வீசி விட வேண்டும்.
கடல் நீர் தீர்த்தம்: ஒவ்வொரு செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடல் நீர் எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து வீடு, தொழில் செய்யும் இடங்கள், அலுவலகம் ஆகிய இடங்களில் தெளிக்கலாம்.
ஒவ்வொரு அமாவாசை, அஷ்டமி, பௌர்ணமி, நவமி ஆகிய நாட்களில் வீட்டில் சாம்பிராணி பொடி மற்றும் கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத் தூள் கொண்டு புகை போட கண் திருஷ்டி நீங்குவதோடு தீய சக்திகளும் வெளியேறும்.
