காதல் திருமணம் நடக்க பரிகாரம்!
புலவர்கள் மட்டுமல்ல பல ஞானிகளும், சித்தர்களும் கூட ஆண் மற்றும் பெண்ணுக்கிடையே ஏற்படும் “காதல்” எனப்படும் தீவிர அன்பு தெய்வீக தன்மை வாய்ந்தது என கூறியுள்ளனர். நமது நாட்டில் வயது வந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு பெற்றோர்கள், உறவினர்கள் எல்லாம் ஒன்று கூடி திருமணம் செய்வித்து வந்தனர். ஆனால் சமீப காலங்களில் நமது நாட்டில் இனம், மொழி, மதம் கடந்து ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே காதல் திருமணங்கள் அதிகம் நடக்கின்றன.
பலரும் இதை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். உண்மையான சில காதலர்களுக்கு தங்களின் காதல் திருமணம் நடப்பதில் சில தடைகள், சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவை எல்லாவற்றையும் நீக்குவதற்கான பரிகாரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். உலகில் காதல் என்ற ஒன்று இல்லாத மனிதன் அனேகமாக இல்லை என்றே கூறலாம். பருவ வயதில் பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் காதல் செய்ய தொடங்குகின்றனர்.
இதில் பலரும் காதலில் ஈடுபட்டாலும் தங்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தங்களை ஆசிர்வதித்து, தங்களின் காதலர்களோடு திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். காதல் திருமணம் நடப்பதற்கான சில பரிகாரங்கள் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளன. அதை கடைபிடிப்பதன் மூலம் தங்களின் மனதிற்கு பிடித்தவருடன் திருமணம் செய்து கொண்டு வாழலாம்.
காதலில் வெற்றி பெறவும், காதல் திருமணம் காதல் வாழ்க்கையை வாழ்ந்த தெய்வங்களான முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் கோவில்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில் ஆண், பெண் இருவரும் சென்று வழிபட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் பூஜையறையில் ஸ்ரீ கிருஷ்ணர் ராதை ஒன்றாக இருக்கும் படத்தை, வாசனையுள்ள பூக்களை சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும். இந்நாளில் கிருஷ்ணர் கோவிலுக்கு தங்களின் காதல் திருமணம் நடக்க விரும்பும் ஆண், பெண் இருவரும் ஒன்றாக சென்று வணங்க வேண்டும்.
காதல், ஆண் – பெண் ஈர்ப்பு போன்றவற்றிற்கு அதிபதியாகிய சுக்கிர பகவானை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வர வேண்டும். ஒரு நபரின் வாழ்வில் திருமணம் நடப்பதற்கு முக்கியமான கிரகங்களாக இருப்பது குரு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் ஆவார்கள், இந்த இரண்டு கிரகங்களையும் அந்தந்த கிரகங்களுக்குரிய கிழமைகளில் வழிபட்டு வந்தாலும் காதல் திருமணம் நடக்கும் அமைப்பை உண்டாக்கும்.
தங்களின் விருப்பத்திற்குரிய ஆண்மகனையே தங்களின் வாழ்க்கை துணையாக அடைய விரும்பும் பெண்கள் 16 திங்கட்கிழமைகள் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டு வந்தால் அவர்களின் விருப்பம் நிறைவேறும். தங்களின் காதலியையே வாழ்க்கை துணையாக அடைய விரும்பும் ஆண்கள் தங்களின் மோதிர விரலில் வெள்ளியில் மரகத கல் பதித்த மோதிரத்தை அணிந்திருந்தால் காதல், திருமண வாழ்க்கை ஆகியவற்றில் நன்மைகள் பல ஏற்படும். மூன்றாம் பிறை தரிசனம் மற்றும் பௌர்ணமி தினத்தில் சந்திர பகவான் வழிபாடு செய்து வந்தாலும் காதல் திருமணம் நடக்கும் நிலையை உருவாக்கும்.