குலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசிப்பதால் தீரும் பிரச்சனைகள்!
தசராத் திருவிழாவின் போது குலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசனம் செய்வதால் என்னென்ன பிரச்சனைகள் தீர்ந்து நன்மைகள் உண்டாகும் என்பது குறித்து இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
புகழ்பெற்ற இந்த தசரா திருவிழாவானது மைசூருக்கு அடுத்த படியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தான் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இங்கு ஏராளமான பக்தர்கள் காளி வேடம் அணிந்து ஆடி வருவது சிறப்பாக பார்க்கப்படும்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசராத் திருவிழாவின் போது குலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசனம் செய்வதால் என்னென்ன பயன்கள் உண்டாகும்?
முதல் நாள் துர்க்கை அம்மன் திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அம்பாளைத் தரிசிப்பதால், ராகு தோஷம் நீங்கும். கன்னிப் பெண்களுக்குத் திருமணம் தடையின்றி நிச்சயம் நடந்தேறும்.
இரண்டாம் நாள் விசுவகர்மேசுவரர் தோற்றத்தில் காட்சி தரும் அம்பாளைத் தரிசனம் செய்வதால், தொழிலில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும், லாபமும் ஏற்படும்.
மூன்றாம் நாளில் பார்வதி திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அன்னையைத் தரிசிப்பதால், மிகுந்த நலன் உண்டாகும். உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், அது தீரும். தீராத நோய் தீரும்.
நான்காம் நாளில் பாலசுப்பிரமணியர் திருக்கோலம் கொண்டிருக்கும் அம்பாளைத் தரிசனம் செய்தால் நன்மக்கட்பேறு கிடைக்கும். திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஐந்தாம் நாள் நவநீத கிருஷ்ணர் தோற்றத்தில் காட்சியளிக்கும் அன்னையைத் தரிசித்தால் வாழ்நாள் கூடும். அதாவது உங்கள் ஆயுள் பலம் அதிகரிக்கும்.
ஆறாம் நாள் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் அம்பாளைத் தரிசனம் செய்தால், எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும்.
ஏழாம் நாளில் ஆனந்த நடராஜராகக் காட்சி தரும் அன்னையைத் தரிசித்தால், வீடு பேறு கிட்டும். புது வீடு கட்டும் யோகம் உண்டாகும். அப்படியும் இல்லையென்றால் நிலம், பிளாட் வாங்கும் யோகம் உண்டாகும்.
எட்டாம் நாள் அலைமகளாகக் காட்சி தரும் அம்பாளைத் தரிசனம் செய்தால் பொருள் குவியும். செல்வ செழிப்பு உண்டாகும்.
ஒன்பதாம் நாள் கலைமகள் தோற்றத்தில் அருள் புரியும் அன்னையைத் தரிசித்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம். ஞானம் அதிகரிக்கும். அறிவுச் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
இது போன்ற காரணங்களால் தான் தசரா விழாவிற்குப் பக்தர்கள் கூட்டம் இங்கு திரண்டு வருகிறது.
