குழந்தை பாக்கியம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!
நாகராஜர் கோயில் மஞ்சக்கம்பை என்ற ஊரில் உள்ளது. கூடவே ஹெத்தையம்மனும் இங்கு பக்தர்களுக்கு அருளாசி புரிகிறாள். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் திருவிழா நடக்கிறது. அந்த சமயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து கொள்ள வேண்டும். விரதம் இருக்கும் நாட்களில் மஞ்சள் அல்லது சிகப்பு நிற ஆடைகள் அணிய வேண்டும். அப்படி அணிந்து கொள்ள முடியாதவர்கள் கழுத்தில் துண்டு அணிந்து கொள்ள வேண்டும். பூக்குண்டம் மிதிக்கும் பக்தர்கள் அன்றைய நாளில் உணவு அருந்தாமல் குண்டம் இறங்கினால் பக்தர்கள் நினைத்தது நிறைவேறும்.
நாகராஜர் கோயிலில் பூஜை செய்துவிட்டு சந்தான லட்சுமி அம்மன் சன்னதிக்கு சென்று அரைகால் வெள்ளை துணியையும் எலுமிச்சம் பழத்தையும் எடுத்து சென்று பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு அம்மன் கோயிலை வலம் வந்த பிறகு அங்குள்ள மரத்தில் வெள்ளை துணியால் தொட்டில் கட்ட வேண்டும். அப்படி செய்வதன் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இவ்வளவு ஏன், இந்தக் கோயிலில் வழிபாடு செய்பவர்கள் குடிப் பழக்கத்திலிருந்தும், சிகரெட் பிடிக்கும் பழக்கத்திலிருந்தும் விடுபடுவதாகவும் சொல்லப்படுகிறது. மன அமைதி கிடைக்க இங்கு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். குழந்தை வரம் வேண்டியவர்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு குண்டம் மிதிப்பார்கள். இது தவிர மொட்டை அடித்தும் நிவர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இங்குள்ள நாகராஜர் கோயிலில் உள்ள புற்றில் அமாவாசை நாட்களில் பால் மற்றும் பழத்தை வைத்து வழிபாடு செய்து வந்தால் நாக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
நாகராஜர் கோயிலுக்கு ஒரு நாகம் அடிக்கடி வந்து செல்வதாக சொல்லப்படுகிறது. அந்த நாகமே கோயிலிலிருந்து சுரங்கப்பாதை அமைத்து அருகிலுள்ள ஹெத்தையம்மன் கோயிலுக்கு வந்து செல்வதாக பக்தர்கள் சொல்கின்றனர். மஞ்சக்கம்பை ஆரம்ப காலகட்டம் முதலே மலைப்பகுதியாக திகழ்ந்துள்ளது. இயற்கை அழகு மிகுந்தப் பகுதியில் அம்மன் கோயில் கட்டுவதற்காக மானிஹடா என்ற பகுதியில் மண் எடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று சப்தம் கேட்டுள்ளது. அப்படி சப்தம் வந்த இடத்தில் நாகராஜர் சிலை ஒன்று இருந்துள்ளது.
அதன் பிறகு நாகராஜருக்கு கோயில் கட்ட குழி வெட்டிய போது பாறை ஒன்று இடையூறாக இருந்துள்ளது. அந்த பாறையை அகற்றிய போது தான் ஒரு நாகம் உயிரோடு வந்துள்ளது. பின்னர், நாகராஜருக்கும், அம்மனுக்கும் அடுத்தடுத்து கோயில் கட்டப்பட்டது. பாறையை அகற்றிய போது வந்த நாகம் தான் தற்போதும் உயிரோடு இருப்பதாக சொல்லப்படுகிறது.
