நாக தோஷ பாதிப்பு நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

107
Sarabeswarar For Naga Dosham

நாக தோஷ பாதிப்பு நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

சென்னை தாம்பரம் அருகிலுள்ளா மாடம்பாக்கம் என்ற பகுதியில் உள்ள கோயில் தேனுபுரீஸ்வரர். இந்தக் கோயிலில் தேனுபுரீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். சோமாஸ்கந்தர் உற்சவராக திகழ்கிறார். தேனுகாம்பாள் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். மூலஸ்தானத்தில் உள்ள இறைவன் சதுர பீடத்தில், ஒரு அடி உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார்.

இந்தக் கோயிலில் வேண்டிக் கொள்ளும் எல்லா கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது ஐதீகம். முருகன், சரபேஸ்வரர், வடுக பைரவர் ஆகியோர் பிரார்த்தனை மூர்த்திகளாக இருக்கின்றனர். நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும், கிரக தோஷ பாதிப்பு உள்ளவர்களும் இந்தக் கோயிலில் சரபேஸ்வரரிடம் வேண்டிக் கொள்கின்றனர். ஜாதகரீதியாக வக்கிர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மூலஸ்தானத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தரும் ஈசனுக்கு மல்லிகைப் பூ மாலை அணிவித்து வேண்டிக் கொண்டால் தோஷம் நிவர்த்தியாகும்.

வடுக பைரவருக்கு திராட்சை மாலை சாற்றியும், வெள்ளைப்பூசணியில் நெய் விளக்கேற்றி வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தலாம். இது தவிர சுவாமிகளுக்கு வஸ்திரம் அணிவித்து விசேஷ திருமஞ்சனம் செய்து நிவர்த்திக்கடன் செலுத்திக் கொள்ளலாம்.

ஆலமரம் இல்லாமல் அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி:

கஜபிருஷ்ட விமானத்துடன் இந்தக் கோயிலானது அமைந்துள்ளது. கோயிலில் மூலஸ்தானத்தில் உள்ள இறைவன் சதுர பீடத்தில், ஒரு அடி உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார். கல்லடி பட்ட பள்ளம் மற்றும் பசு மிதித்த தழும்பும் இருக்கிறது. தேனுகாம்பாள் தாயார் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். கோயில் பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ஆலமரம் இல்லாமல் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி மீனாட்சி அம்மன் கையில் கிளி இருப்பது இங்குள்ள துர்க்கையின் கையில் கிளி இருக்கிறது.

தேனுபுரீஸ்வரர்:

சகரன் என்பவனின் மகன் பகீரதனை கபில மகரிஷி சபித்துள்ளார். அவரது சாபம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்தது. இதையடுத்து வசிஷ்ட முனிவரின் ஆலோசனையின்படி, பகீரதன், கங்கையை பூமிக்கு கொண்டு வந்து சிவபூஜை செய்து தனது சாபம் நீங்கப் பெற்றான். தனது சாபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை நினைத்து மனம் வருந்திய கபில மகரிஷி சிவனை நினைத்து பூஜை செய்தார்.

ஒரு லிங்கத்தை இடது கையில் வைத்துக் கொண்டு, வலது கையால் மலர் தூவினார். அப்போது அவருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார். ஏன், தன்னை கையில் வைத்து வணங்க வேண்டும் என்பதற்கான காரணத்தை கபில மகரிஷியிடம் ஈசன் கேட்டார். அதற்கு மகரிஷியோ மணலில் வைத்து வழிபட மனம் வரவில்லை என்றார் முனிவர்.

ஆனால், கையில் வைத்து வழிபட்ட முறை சரியில்லை என்று கூறிய ஈசன் அவரை பசுவாக பிறக்கும்படி செய்தார். இங்கு பசுவாக பிறந்த கபில மகரிஷி சிவனை வழிபட்டி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இந்தப் பகுதியை ஆட்சி புரிந்த மன்னர் இங்கு கோயில் எழுப்பினார். பசு வடிவில் பிறந்த கபில மகரிஷி வழிபட்ட தலம் என்பதால், இத்தல இறைவனுக்கு தேனுபுரீஸ்வரர் என்று பெயரிட்டார். தேனு என்பதற்கு பசு என்பது பொருள். ஆகையால் பசு வழிபட்ட தலம் என்பதால், தேனுபுரீஸ்வரர் என்று ஆனார்.