சனி பகவான் தரும் துன்பங்களில் இருந்து விடுபட பரிகாரம்

257

பைரவர்பைரவ பக்தர்களைக் கொடுமைப்படுத்துவதில் விருப்பம் இல்லாதவர் சனி பகவான். விதிப்பயன் காரணமாகக் கடுமையைக் காட்டும் பொழுது பைரவர் அருள்புரிந்து காப்பாற்றி விடுவார். வேண்டுவோரின் துயர் தீர்ப்பவர் பைரவர். சனி பகவானால் வேண்டிய பூஜையின் மூலம் உரிய பரிகாரங்களைச் செய்து சனியின் கொடூரப் பிடியிலிருந்து விடுபடலாம்.

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு வெண்தாமரை மலர் மாலை அணிவித்து புகுனு பூசி சாம்பல் பூசணி (வெண்பூசணி) சாம்பார் கலந்த சாதம், அதிரசம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் அர்த்தாஷ்டம் சனியால் ஏற்படும் தொல்லைகள் விலகும்.

ஏழாமிடமென்னும் களத்திரஸ்தானத்தில் தொல்லைகள் தரும் சனி வந்திட்டால் இல்லறத்தில் துன்பங்கள் வந்து சேரும் கூட்டாளி அனைவரும் குடி கொடுக்கும் பொல்லா மனிதராய் ஆவார். எண்ணற்ற தொல்லையிலிருந்து விடுபட கணவனோ, மனைவியோ விரும்புவது இயற்கை. எனவே திங்கட்கிழமை நாளில் காலை 7.30 முதல் 9.00 மணிக்குள் பைரவருக்கு அல்லி மலர் மாலை சூட்டி புனுகு பூசி சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பாகற்காய் கலந்த அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வர கண்டச் சனியால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.

எட்டாமிடத்து வந்து எண்ணற்ற இன்னல் தரும் சனி பகவான், படாத சித்திரவதை படுத்தி விடுவார். அவருடைய தொல்லையிலிருந்து விடுபடச் சனிக்கிழமை நாளில் இரவு 7.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள் பைரவருக்கு கறுப்பு பட்டு அணிவித்து வடைமாலை, கருங்குவளை மலர் மாலை, நீலோற்பவ மலர் மாலை அணிவித்து புனுகு பூசி, கறிவேப்பிலை சாதம் படையலிட்டு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்து வந்தால் அஷ்டம சனியால் பாதிப்புகள் நீங்கும்.

ஏழரை ஆண்டுகள் தன் கட்டுப்பாட்டிற்குள் மனிதனை சிக்க வைத்து ஆட்டிப்படைக்கும் சனிபகவான் பிடியிலிருந்து, தப்பிக்க வழி வகை உண்டா? என ஒவ்வொரு மனிதரும் தவிப்பது இயல்பு. ஊர்விட்டு ஊர் போவது, மனையாள் மதிக்காதது, பிள்ளைகள் சொன்னபடி கேட்காதது, தொழில் நஷ்டம், பணக்கஷ்டம் அவமானம் போன்ற அனைத்து இன்னல்களிலிருந்தும் தப்பிக்கச் செய்ய வேண்டிய பரிகாரத்தை காண்போம்.

சனிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு வடைமாலை வெற்றிலை மாலை அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால்பாயாசம் படையலிட்டு இரும்பு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்து வர ஏழரைச் சனியிலிருந்து விடுபடலாம்.
ராசிக்கு பனிரெண்டில் சனியிருக்கும்போது தேங்காயில் நெய்தீபம் ஏற்றவும். ராசியில் சனி இருக்கும்போது எலுமிச்சம் பழத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். ராசிக்கு 2-ல் சனி இருக்கும்போது சாம்பல் பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றவும்.

திங்கட்கிழமை சங்கடஹரசதுர்த்தி உள்ள நாளில் பைரவருக்கு நந்தியாவட்டை மலர்மாலை அணிவித்து புனுகு பூசி, ஜவ்வரிசிப் பாயாசம், அன்னம் படையிலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் தாயாருக்கு ஏற்பட்ட துன்பங்கள் போகும்.

செவ்வாய்க்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்குச் செவ்வரளி மாலை அணிவித்து புனுகு பூசி துவரம் பருப்புப்பொடி கலந்த அன்னம், செம்மாதுளம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் சகோதர ஒற்றுமை ஏற்படும். செவ்வாய்க்கிழமை நாளில் பைரவருக்கு சிவப்பு குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து எலுமிச்சம் பழ மாலை அணிவித்து புனுகு பூசி எலுமிச்சம் பழத்தில் நெய் தீபமிட்டு வேகவைத்த பீட்ரூட் கலந்த சாதம், மாதுளம் பழம், ஜிலேபி படையலிட்டு அர்ச்சனை செய்துவர எதிர்ப்புகள் அகன்று வெற்றிகள் குவியும்.

புதன்கிழமை நாளில் பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம், பாசிப்பருப் புப் பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் கல்வியில் ஏற்பட்ட தடை அகலும் புதன்கிழமை காலை 10.30 முதல் 12.00 மணிக்குள் பைரவருக்கு சந்தனகாப்பு செய்து மரிக்கொழுந்து மாலை சூட்டி புனுகு பூசி, பாசிப்பயிறு சுண்டல், பாசிப்பருப்பு பாயாசம், கொய்யாப்பழம், பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் வியாபாரத்தில் வெற்றி வாகை சூடலாம்.

தேய்பிறை அஷ்டமி நாளில் அல்லது வியாழக்கிழமை பைரவருக்கு சந்தனகாப்பு செய்து மஞ்சள் நிற சம்பங்கி மாலைசூட்டி புனுகு பூசி, சுண்டல் படையலிட்டு பால்பாயாசம், நெல்லிக் கனி, ஆரஞ்சுப்பழம், வறுத்த கடலைப்பருப்பு பொடி கலந்த அன்னம் படைத்து அர்ச்சனை செய்து வர தனப்ராப்தி ஏற்படும்.
வியாழக்கிழமை நாளில் காலை 7.30 மணிக்குள் பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து மந்திரவித்து எனப்படும் முந்திரி யால் மாலை அணிவித்து (முந்திரிப்பருப் பால் மாலை அணிவித்தால் முழுப்பலன் ஏற்படாது. கர்ப்பப்பை போல அமைந்து உள்ளே குழந்தையை உள்ளடக்கியது போல காணப்படும் முந்திரிப்பருப்புடன்…) கொண்டை கடலை, சுண்டல், அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து அன்னதானம் 5 பேருக்கு வழங்கினால் பைரவர் திருவருளால் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும்.

வெள்ளிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து புனுகு பூசி தாமரை மலர் மாலை அணிவித்து அவல் கேசரி, பானகம் சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை படைத்து அர்ச்சனை செய்து வரத் திருமணத் தடை அகன்று மனதிற்கு பிடித்து துணை அமையும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைர வருக்கு சந்தனக்காப்பு செய்து புனுகு பூசி ரோஜா மாலை சூட்டி வெள்ளி ஆபரணங்கள் அணிவித்து சர்க்கரைப் பொங்கல், சேமியா பாயாசம், மாம்பழம் படைத்து அர்ச்சனை செய்து 6 ஏழை கலைஞர்களுக்கு வஸ்திர தானம் செய்தால் கலைத்துறையில் சாதனை படைக்கலாம்.

வெள்ளிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு பால் அபிஷேகம் செய்து புனுகு பூசி நாகலிங்கப்பூ மாலை அணிவித்து பால்சாதம், பால்பாயாசம் நைவேத்தியமாகப் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் நாகதோஷம் நீங்கும்.