தீராத நோய் தீர்க்கும் வேம்படி சுடலை மாடன்

138

கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி அருகே உள்ளது, ஜனதா நகர். இங்கு பிரசித்தி பெற்ற வேம்படி சுடலைமாடன் கோவில் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்

கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி அருகே உள்ளது, ஜனதா நகர். இங்கு பிரசித்தி பெற்ற வேம்படி சுடலைமாடன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் சிவனணைந்த பெருமாள், வேம்படி சுடலை மாடன், பிரம்மசக்தி, பலவேசக்காரன், கருப்பசாமி, சத்திராதி முண்டன், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகிறார்கள். இந்தக் கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.

இந்தக் கோவிலின் தலவிருட்சம் வேப்ப மரம் ஆகும். வேம்படி சுடலை மாடன், சிவனணைந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தீராத நோய்கள் தீருவதுடன், குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் செய்வினை கோளாறு, பேய், பிசாசு தொல்லைகள் நீங்குவதுடன் தொழில் வளமும் பெருகும். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 3-வது செவ்வாய்க்கிழமையன்று கொடை விழா நடத்தப்படுகிறது.

இதையொட்டி சீவலப்பேரி, ஆறுமுகமங்கலம், தாமிரபரணி, திருச்செந்தூர், கோவை வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகிய இடங்களில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு வேம்படி சுடலை மாடனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை செய்யப்படும். இரவு 7 மணியளவில் பேச்சியம்மன், பிரம்ம சக்திக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், கும்மியடித்து பாட்டுப்பாடி முளைப்பாரியை கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.

இதனைதொடர்ந்து சுவாமி வரலாற்றை கூறும் விதமாக கணியான் கூத்து, வில்லிசை ஆகியவை நடத்தப்படும். நள்ளிரவு 12 மணியளவில் வேம்படி சுடலை மாடன், பலவேசக்காரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிடப்படும். அதன்பிறகு சுவாமி வேட்டைக்கு செல்வார். அப்போது வாணவேடிக்கை நடைபெறும். இதையடுத்து பக்தர்களுக்கு சுவாமி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த வேம்படி சுடலை மாடன் கோவிலில், தை மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை (இன்று) வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி பகல் 12 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 8 மணியளவில் வேம்படி சுடலை மாடன், சிவனணைந்த பெருமாள், பலவேசக்காரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.