வாழ்வில் சிக்கலை தீர்ப்பதற்கான பரிகாரங்கள்

270

ஜோதிட ரீதியாக இனிய குடும்ப வாழ்க்கை யாருக்கு எளிதில் சாத்தியமாகும் என்பதையும், குடும்ப வாழ்வில் சிக்கலை தீர்ப்பதற்கான பரிகாரத்தையும் காணலாம்.

குடும்ப வாழ்வில் சிக்கலை தீர்ப்பதற்கான பரிகாரங்கள்
பூஜை
இறைவன் படைப்பில் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும், தனித்தன்மையோடு கூடிய ஆன்மா தான். ஒவ்வொரு ஆன்மாவிற்கும் ஒரு நீண்ட இல் வாழ்க்கை பயணம் உள்ளது. ஆனால் அந்தப் பயணம் இனிமையானதாக, எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை. இனிமையான இல்வாழ்க்கை என்பது தனம், வாக்கு, குடும்பம் என்ற மூன்று நிலைகளை உள்ளடக்கியது.

இன்றைய கால கட்டத்தில் பொருளாதார தேவை காரணமாக கணவன் – மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. எனவே ஒருவரையொருவர் பார்த்து பேசக்கூட நேரம் கிடைப்பது அரிதாகி விட்டது. அத்துடன் பணத் தேவைக்காக கணவன் ஓரிடத்திலும், மனைவி ஒரு இடத்திலும், குழந்தைகள் வேறு இடத்திலும் பிரிந்து வாழ வேண்டிய நிலை. இதுபோன்ற காரணங்களால், பந்தம், பாசம், விட்டுக்கொடுத்தல், அன்பாக பழகுதல் போன்றவற்றிற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு.

ஜோதிட ரீதியாக இனிய குடும்ப வாழ்க்கை யாருக்கு எளிதில் சாத்தியமாகும் என்பதையும், குடும்ப வாழ்வில் சிக்கலை தீர்ப்பதற்கான பரிகாரத்தையும் காணலாம்.

ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தைக் கொண்டு, ஒருவருக்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் வருமானம் வரும்?, வாக்கு வன்மை அமையும், குடும்பம் போன்றவைகளை அறிய முடியும். எனவே இரண்டாம் இடம் ‘தனம் வாக்கு, குடும்ப ஸ்தானம்’ என அழைக்கப்படுகிறது. இரண்டாம் இடத்தோடு சம்பந்தம் பெறும் கிரகங்களுக்கு ஏற்ப, தனம், வாக்கு, குடும்பம் அமையும். அதனால் இரண்டாம் இடம் வலிமையாக இருப்பது மிக அவசியம்.

2-ம் இடத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகம் இருந்தாலோ, லக்னத்தில் சுப கிரகம் மற்றும் சுப கிரகங்களின் பார்வை இருந்தாலும் நிறைந்த தனமும், வாக்கு சாதுர்யமும் மற்றும் அமைதியான குடும்ப வாழ்க்கையும் அமையும். 2-ம் இடத்தோடு சம்பந்தம் பெற்ற லக்ன ரீதியான சுபகிரகங்களின் தசை நடந்தால் குடும்ப உறுப்பினர்கள் மூலமும், தன் வாக்காலும் வருமானம், நீண்ட ஆயுள், வீடு, வாகன யோகம், நோயற்ற வாழ்க்கை, மன நிம்மதி, அன்பான வாழ்க்கை துணை, அனுசரனையான குழந்தைகள் கிடைக்கும்.

2-ம் இடத்திற்கு சனி, ராகு- கேது, சூரியன், செவ்வாய் போன்ற அசுப கிரகங்களின் சம்பந்தம் இருந்தால், வாழ்வில் மனக்கசப்பான சம்பவம் மிகுதியாக இருக்கும். 2-ம் இடத்தோடு சம்பந்தம் பெறும் அசுப கிரகங்களின் தசை காலங்களில் பணம் – பொருள் விரயம், அவமானம், மன வேதனை, வாக்கால் பிரச்சினை ஏற்படும். இதன் உச்சகட்டமாக பொருள் தேடுவதற்காக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும்.

உளவியல் ரீதியாக குடும்ப ஒற்றுமைக்கு தீர்வு காண முயற்சிப்பவர்களுக்கு, உள்ளுணர்வு மிக முக்கியம். கோபம், குரோதம், காமம், வெறுப்பு, ஆத்திரம், அவசரம், படபடப்பு இவற்றை நீக்கி, மனம், வாக்கு, உடம்பு இம்மூன்றையும் சுத்தமாக வைத்தால் உள்ளுணர்வு சரியாக இயங்கும். மனஅமைதி, அடக்கம், இறை மற்றும் குருபக்தியை வலுப்படுத்தும் போது, தனம், வாக்கு, குடும்பம் மனிதர்களுக்கு வசியப்படும். பேச்சை குறைத்து, விட்டுக்கொடுத்தலே பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரும்.

பரிகாரம்

ஜனன கால ஜாதகத்தில் 2-ம் இடத்தில் வக்ரம், அஸ் தமனம் மற்றும் நீச்ச, அசுப கிரகங்களால் பிரச்சினையை சந்திப்பவர்கள், குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி போட வேண்டும். எறும்பு புற்றுக்கு நாட்டு சர்க்கரை கலந்த நொய் அரிசி போட குடும்பம் கோவிலாகும்.

தனம்

‘தனம்’ எனும் பணமே மனித வாழ்வை மகழ்ச்சி கரமாக மாற்றும் கருவியாகத் திகழ்கிறது. இன்றைய நவநாகரிக உலகில், பணம் வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் அல்ல.. செலவு செய்பவர்களே பணக்காரர்கள். பணம் மனிதனை படைத்ததா? அல்லது மனிதன் பணத்தை படைத்தானா? என்று வியக்கும் வகையில் நுகர்வுக் கலாசாரம் பெருகியிருக்கிறது. குடும்ப நபர்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை நிறைவு செய்ய பணம் மிக மிக அவசியம்.

வாக்கு

வாக்கு வன்மையே ஒரு மனிதனை சமுதாயத்தில் தலைசிறந்த மனிதனாக்குகிறது. வாக்கு சாதுர்யம் இருப்பவர்களே, குடும்ப உறுப்பினர்களிடம் அன்பை பெறமுடியும். வார்த்தைகளில் உண்மை, நிதானம் இருப்பவர்களால் நினைத்ததை சாதிக்க முடியும். சொல்வாக்கு இருந்தால் செல்வாக்கு தானே உயரும். தனக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் நன்மைகளை உண்டாக்கிட முடியும். பலர் நிதானமற்ற கோபத்தால், தேவையற்ற வார்த்தைகளை உதிர்த்து விட்டு, பின் வருத்தப்படுவார்கள். தன்னை அறியாது வெளியான தீய வார்த்தைகள் கூட, குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து பேதத்தை ஏற்படுத்திவிடும்.

குடும்பம்

குடும்பம் என்பது நிம்மதி, சந்தோஷம் நிறைந்ததாகவும், தெய்வம் வாழும் கோவிலாகவும் இருக்க வேண்டும். செல்வாக்கு மற்றும் சொல்வாக்கே குடும்பத்தை கோவிலாக்கும். இதில் குற்றம் ஏற்படும் போது குடும்பத்தில் கலகலப்பு குறைந்து, சலசலப்பு மிகுதியாகும். நல்ல விவாதத்தில் நிம்மதி, நியாயம் கிடைக்கும். அழுகை இருக்காது. நியாயமற்ற பிரச்சினைகளால் நிம்மதி, தூக்கம் பறிபோவதுடன் சண்டை சச்சரவு, அழுகை, பிரிவு போன்ற மோசமான சூழலை ஏற்படும். கலகலப்பும், சலசலப்பும் நிறைந்ததுதான் குடும்ப வாழ்க்கை. குடும்பம் என்றால் கருத்து வேறுபாடு, விவாதம், சண்டை இல்லாமல் வாழ முடியாது. வறட்டு கவுரவம், நியாயமற்ற கோபம், தரமற்ற வார்த்தைகள் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தவே செய்யும். இதனால் பல குடும்பங்களில் ஒற்றுமை குறைவு உண்டாகும்.