விநாயகரை இப்படி வழிபாடு செய்தால் வெற்றி

477

பொதுவாகவே முழுமுதற்கடவுளான பிள்ளையார் என்றால், எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும். ஏனென்றால் மற்ற தெய்வங்களை போன்று இவருக்கு கடுமையான விரதங்கள் எதுவுமே வேண்டாம். மூன்று தோப்புக்கரணமும், 3 பிள்ளையார் கொட்டும் போட்டாலே மனமகிழ்ந்து வரத்தினை வாரி வழங்கி விடுவார். தும்பிக்கை முகத்தானை, நம்பிக்கையோடு வழிபட்டால் கைவிட மாட்டார் என்பது உண்மையான ஒன்று. ஒரேஒரு கொழுக்கட்டையை நைவேத்தியமாக படைத்தால் போதும், கொழுக்கட்டைகுள் வைக்கும் பூரணத்தை போல, நம்முடைய வாழ்க்கை இனிமையாக மாறி விடும். இனிப்பு பண்டங்களை வாங்கி கொடுத்தால் ஒரு குழந்தை, எப்படி சந்தோஷம் அடையுமோ, அப்படித்தான் விநாயகரும் குழந்தை மனம் படைத்தவராக இருக்கிறார். இவரை நம்பிக்கையோடு வழிபட்டால் காரியத்தடை நீங்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையோடு சேர்த்து 21 நாட்கள் இந்த பரிகாரத்தையும் விநாயகருக்கு செய்தால், நீங்கள் தொடங்கும் காரியத்தை இன்னும் தைரியமாகவே தொடங்கலாம். அது என்ன பரிகாரம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் பிள்ளையாருக்கு பிடித்தமான எண்ணிக்கை என்னவென்றால் அது 21. நீங்கள் பிள்ளையாருக்காக செய்யப்படும் எந்த ஒரு பிரார்த்தனையாக இருந்தாலும், நெய்வேதியமாக இருந்தாலும், 21 என்ற கணக்கில் செய்தால் அதனால் கிடைக்கும் பலன் அதிகமாகவே இருக்கும். நீங்கள் ஏதாவது ஒரு நல்ல காரியத்தை தொடங்க வேண்டுமென்றால் 21 நாட்களுக்கு முன்பாகவே, ஏதாவது ஒரு விநாயகர் கோவிலுக்கு சென்று இந்த பரிகாரத்தை தொடங்கி விடுங்கள்.

விநாயகர் கோவிலுக்கு செல்லும் போது அருகம்புல்லை கட்டாயம் வாங்கிக்கொள்ள வேண்டும். அருகம்புல்லை யானை முகத்தானுக்கு சாத்திவிட்டு, 21 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். மூன்று முறை பிள்ளையார் கொட்டை வைக்க வேண்டும். அதன் பின்பு விநாயகரை 21 முறை வலம் வர வேண்டும். இறுதியாக ஒரு சூறைத்தேங்காய். இப்படி 21 நாட்களும் தவறாமல் இந்த பரிகாரத்தை செய்து வர வேண்டும்.

இந்த குறிப்பிட்ட கோயிலில் தான் பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. நீங்கள் முதல் நாள் தொடங்கிய அதே பிள்ளையார் கோவிலில் தான் தொடர்ந்து 21 நாட்களும் பரிகாரம் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எந்த ஊரில் இருக்கும் எந்த விநாயகரை சென்று வழிபட்டாலும் வழிபாடு ஒன்றுதான். ஆனால் 21 நாட்கள் தவறாமல் செய்வது கட்டாயம். 21 நாட்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து முடித்துவிட்டு, 21வது நாள் முடிவில் 21 தேங்காய்களை வாங்கி விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.(சிதறு தேங்காய் வாங்கி உடைப்பதற்கு முன்பு, நான் எடுத்த காரியம் நிறைவேறி விட்டால் உனக்கு 21 தேங்காயை சூறை தேங்காயாக உடைக்கின்றேன் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்). உங்களால் முடிந்தால் 21 கொழுக்கட்டைகளை பிரசாதமாக செய்து விநாயகருக்கு நைவேத்தியமாக படைத்து, குழந்தைகளுக்கு விநியோகம் செய்யலாம். இது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

நீண்ட நாட்களாக வேலை கிடைக்காதவர்கள், புதியதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், திருமண தடை உள்ளவர்கள், தேர்வு பயம் உள்ளவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், எப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நிச்சயமாக கைமேல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.