பல்லி தோஷம் நீக்கும் விண்ணவராயப் பெருமாள்!

113

பல்லி தோஷம் நீக்கும் விண்ணவராயப் பெருமாள் ஆலயம்!

சென்னை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது விண்ணவராய பெருமாள் கோவில். இத்தலத்தில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கருடாழ்வார் தோஷம் நீக்கும் சிறப்பை கொண்டுள்ளார்.

ஆலயத்தின் சிறப்பு:

இத்தலத்தில் விண்ணவராய பெருமாள் அருள்பாலிக்கிறார். நம்மாழ்வார் தியானக் கோலத்தில் இருப்பது இத்தலத்தின் சிறப்பு. சுவாதி நட்சத்திர தினத்தன்று இங்குள்ள கருடாழ்வாரை வழிபடுவது மோட்சமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் நாக தோஷம் நீங்கவும், சூனியத்தில் இருந்து விடுபடவும் வழிபாடு நடத்தப்படுகிறது.

ஆலயத்தின் வரலாறு:

முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னர் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது தான் கொண்டு வந்திருந்த உணவுகள் அனைத்தும் தீர்ந்துவிட்டது. அப்போது, இத்தலத்தில் வந்து அர்ச்சகரிடம் உணவு கேட்டார். அர்ச்சகரும் பெருமாளுக்கு படைத்த வரகரிசி பிரசாதத்தை வழங்கினார்.

கடவுளுக்கே இத்தனை எளிய உணவா என வியந்த மன்னர், பூசாரிடம் விபரம் கேட்டார். அப்போது, பஞ்சத்தின் காரணமாக வரகரிசியில் பூஜை செய்வதாக கூறியதை அடுத்து அக்கோவிலுக்கு நிதிவுதவிகளை அள்ளித் தந்தார் மன்னர். இந்த நிதியிலேயே இத்தலம் விரிவு படுத்தப்பட்டு திருப்பணி நடைபெற்றது.

விண்ணவராயப் பெருமாள் – கனகவல்லி தாயார்:

இத்தலத்தின் மூலவர் விண்ணவராயப் பெருமாள் அம்மையார் கனகவல்லியுடன் காட்சியளிக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி, நம்மாழ்வார், கருடாழ்வார், ராமானுஜருக்கு என தனித் தனியே சன்னதிகள் உள்ளது.

பலன்கள்:

குழந்தை பாக்கியம் அற்றோர், நீண்ட வருடமாகியும் திருமணம் நடைபெறாமல் இருப்போர் இத்தலத்து இறைவனை வழிபடுவதன் மூலம் விரைவில் இப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சர்ப்ப தோஷம் நீங்க இக்கோவிலில் உள்ள கருடாழ்வாரை வழிபடுவது சிறந்தது. பஞ்சத்தில் இருந்து செழிப்பாக மாறிய இக்கோவிலில் பிரார்த்தனை செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் அருளும்.

பல்லி தோஷம் நீங்கும்:

இக்கோவில் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் இருப்பதைப் போன்றே பல்லி வடிவம் செதுக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது. ஆனால், மண்டபம் இடித்து போனதால் பல்லி உருவம் பொறித்த விதானக் கல் மட்டும் தனியாக வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. தலையில் பல்லி விழுதலினால் மனக் கஷ்ட்டத்தில் இருப்போர் 11 வாரம் இக்கோவிலுக்கு வந்து பெருமாளையும், கருவறையில் உள்ள கரியமாணிக்கப் பெருமாளையும் வழிபடுவதன் மூலம் பல்லி விழுந்த தோஷம் நீங்கும் என்பது இத்தல நம்பிக்கையாக உள்ளது.

நேர்த்திக்கடன்:

விண்ணவராயப் பெருமாளுக்கும், அம்மையாருக்கும் பட்டாடைகள் சாற்றி, திருமஞ்சனம் செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். சிலர், அவரவர் வசதிக் கேற்ப அன்னமிட்டும், திருப்பணிக்கு நிதியுதவி வழங்கியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

திருவிழாக்கள்:

புரட்டாசி மாத சனிக்கிழமைகள், திருவோணம், பெருமாளுக்கு உகந்த விரத நாளான வைகுண்ட ஏகாதசி, ஆடிப்பூரம், கார்த்திகை உள்ளிட்ட காலங்களில் இக்கோவிலில் திருவிழா கொண்டாடப்படுகிறது.