பில்லி, சூனியம் பிரச்சனைகளில் இருந்து காக்கும் சொர்ணமலை கதிர்வேல் முருகன்

244

கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் மூலவரான கதிர்வேலை வழிபாடு செய்தால், பகை, பில்லி, சூனியம், வறுமை, தரித்திரம், உடல் மற்றும் மன நோய்கள் அகலும் என்கிறார்கள்.

முருகன்இன்றளவும் ஆலயக் கருவறையில் முருகப்பெருமானுக்குப் பதிலாக வேலே மூலவராக வழிபடப்படும் திருக்கோவில்தான் கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலாகும்.

கந்தசஷ்டி அன்று இந்த ஆலயத்திற்கு வந்து, ‘சத்ரு சம்கார வேல்’ என்ற பதிகத்தை ஆறு முறை பாராயணம் செய்து, மூலவரான கதிர்வேலை வழிபாடு செய்தால், பகை, பில்லி, சூனியம், வறுமை, தரித்திரம், உடல் மற்றும் மன நோய்கள் அகலும் என்கிறார்கள்.

சஷ்டி, கிருத்திகை, விசாகம், பூசம் நட்சத்திர நாட்களில் இத்தலம் வந்து கதிர்வேலுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, சிவப்பு மலர்கள் கொண்டு இத்தல மூலவர் கதிர்வேல், மாணிக்க விநாயகர், பழனி ஆண்டவர், பைரவர் ஆகியோருக்கு அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து 8 மாதம் வழிபாடு செய்து வந்தால், நம் எண்ணங்கள் யாவும் பூர்த்தியாகும். தொழில் விருத்தி உண்டாகும். குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தீவினை, தீயவை, கர்மவினைகள் விலகும்.

கிருத்திகை நட்சத்திர நாள் அன்று இந்த வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னப் பிரசாதத்தை மகப்பேறுக்காக ஏங்கும் பெண்கள் உட்கொண்டால், அடுத்த வருடமே குழந்தைப் பேறு கிடைக்கும் என்பதற்கு பலர் சாட்சியாக நிற்கின்றனர். மறு வருடமே குழந்தைப் பேறு கிடைக்கப் பெற்றவர்கள், தங்கள் குழந்தையோடு இத்தலம் வந்து முருகனுக்கு நன்றிக் கடன் செலுத்திச் செல்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சமேத பூவனநாத சுவாமி ஆலயத்துடன் இணைந்த கோவில் இதுவாகும்.