Saturday, October 14, 2023
HomePurana Kathaigalஆத்மநாதசுவாமி கோயில் வரலாறு!

ஆத்மநாதசுவாமி கோயில் வரலாறு!

ஆத்மநாதசுவாமி கோயில் வரலாறு!

திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (Avudaiyarkoil) இந்திய மாநிலமான தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார் கோயில் வட்டத்திலுள்ள, தேவார பாடல் பெற்ற சிவன் கோயில் ஆகும். மூலஸ்தானத்தில், சுவாமி – அம்பாள் சிலைகள் இருப்பது தான் வழக்கம்; ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள ஆவுடையார்கோவிலில் சிவலிங்கத்துக்கு பதிலாக குவளையும்,
அம்பாளுக்கு பதிலாக பாதம் மட்டுமே உள்ளது.

பொதுவாக, சிவாலய மூலஸ்தானங்களில், ஆவுடையார் மீது லிங்கம் இருக்கும்; ஆனால், இங்கு, வெறும் ஆவுடையார் மட்டுமே உள்ளது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், உள்ளிருக்கும் உருவமற்ற பகுதி ஆத்மாவாகவும் கருதப்படுவதால், சுவாமிக்கு, ‘ஆத்மநாதர்’ என பெயர் வந்தது.
கோவில்களில் தீபாராதனை தட்டைத் தொட்டு, பக்தர்கள் கண்ணில் ஒற்றிக் கொள்வர். ஆனால், இங்கு, சுவாமிக்கு தீபாராதனை செய்த தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை.

ஆவுடையாருக்கு பின்புறம் வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியனாகவும், சிவப்பு – அக்னியாவும், பச்சை நிறம், சந்திரனாகவும் கருதப்படுகின்றன. சுவாமிக்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றுகின்றனர். இவற்றை வணங்கினாலே தீபாராதனை தட்டை வணங்கியதற்கு சமம் என்பதால், அதை வெளியில் கொண்டு வருவதில்லை.

அதேபோன்று, பொதுவாக, சிவன் கோவில்கள் கிழக்கு நோக்கியும், சிலமேற்கு பார்த்தவாறும் இருக்கும். ஆனால், ஆவுடையார் கோவில் தெற்கு நோக்கி உள்ளது.
சிவன், குருவாக இருந்து, தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும் நிலையை, தட்சிணாமூர்த்தி என்பர். தட்சிணம்’ என்றால் தெற்கு; சிவன், மாணிக்கவாசகருக்கு குருவாக உபதேசம் செய்த தலம் என்பதால், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
சூரிய, சந்திர கிரகணங்களின் போது கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம்.
ஆனால், இங்கு கிரகணநாளில், ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஆதியந்தம் இல்லாத உருவமற்ற சிவனுக்கு, எக்காரணத்தாலும் பூஜை தடைபடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

அம்பாளின் பெயர் யோகாம்பாள்; இவளுக்கும் உருவம் இல்லை. சிவனை மீறி, தட்சனின் யாகத்திற்கு சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, இத்தலத்தில் யார் கண்ணுக்கும் தெரியாமல், உருவத்தை மறைத்து தவம் செய்தாள். எனவே, அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இப்பாதத்தை கண்ணாடியில் பிரதிபலிக்க செய்துள்ளனர்.

இவளது சன்னிதி அடைத்தே இருக்கும் என்பதால், சன்னிதி முன் உள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். ஆத்மநாதர் முன் உள்ள படைக்கல்லில், புழுங்கல் அரிசியில் சமைத்த சூடான சாதத்தை ஆவி பறக்க கொட்டுவர். அப்போது சன்னிதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும். சுவாமி உருவமற்றவர் என்பதால், உருவமில்லாத ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது.

இது தவிர பாகற்காய் மற்றும் கீரையும் நைவேத்தியமாக படைக்கப்படும்.
திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் தமிழ்கலைக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதே ஆகும்.
இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றாகும். திருநெல்வேலி, திருவாரூர், ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேர்களாகும்.

(கம்பிகளை இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல) எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.

ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரை ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும். இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக்கப்பட்டிருக்கிறது.

திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன் மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.

மரம் என்பதும் தேக்கு மரங்கள் நூற்றாண்டுக் கணக்கில் கெட்டுப் போகாமல் தாங்கும் சக்தி படைத்தது என்பது நமக்குத் தெரியும். ஆனால் இக்கோயிலில் பயன்படுத்தியுள்ள தேவதாரு மரங்களோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாங்கும் சக்தி பெற்றதாகும். இந்த தேவதாரு மரங்கள் இந்தியாவில் இல்லை என்றும் பர்மாவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிவபெருமான் வாசஸ்தலமான கைலாயத்தில் தேவதாரு மரம் இருப்பதாக புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

அந்தத் தேவதாரு மரத்தின் மீது இந்தச் செப்போடு வேயப்பட்ட விமானம் உள்ளது. இந்த தேவதாரு மரத்தின் பலகைச் சட்டத்தை இன்று பார்த்தாலும் நேற்று அறுத்து இன்று வழவழப்பேற்றி பலகையாக்கி இணைக்கப்பட்டது போல எண்ணெய் செறிந்துள்ள பளபளப்பைக் காணலாம். இது 5 ஆயிரம் ஆண்டுகள் தாங்கும் சக்தியை படைத்தது என்றும் கூறப்படுகிறது.

வற்றாத திருக்குளம்:-

இங்கு திருத்தமம் பொய்கை எனப்படும் வற்றாத திருக்குளமும் மூல விருட்சமான குருந்த மரமும் 96 அடி உயரம் 51 அடி அகலம் உடைய ராஜகோபுரம் ஆகியவையும் உள்ளன. இந்தக் கோவிலுக்குள் கருவறைக்குமிக அருகில் 2 கிணறுகள் உள்ளன இதில் 5 அடி ஆழத்தில் இன்றும் தண்ணீர் ஊறுவது அதிசயத்திலும் அதிசயம்.

கவிபாடும் கற்சிலைகள்:-

உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள சிலைகளில் உள்ளன என்று கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு தூண்களிலும் நிறைந்து விளங்குகின்றன.
அங்குலம் உயரம் உள்ள ஆயிரங்கால் மண்டபம் முதல் 12 அடி உயரம் உள்ள அகோர வீரபத்திரர் ரணவீரபத்திரர் சிலை வரை சிற்பக்கலை தேனடை போல செறிந்து கிடக்கிறது.

இங்குள்ள எல்லா உருவச்சிலைகளிலேயும் காலில் உள்ள நரம்பு கூட வெளியே தெரிகின்றன. சிலைகளின் தலைமுடி கூட சன்னமாக அளந்து நீவி விடப்பட்டுள்ளன.

நவநாகரீக நகைகள்:-

தற்காலிக நவநாகரீக நகைகள் கல்லூரி மாணவிகளும் உயர்தர குடும்பப் பெண்களும் அணிகின்ற நவீன அணிகலன்கள் தங்க நகைகள் சங்கிலிகள் போன்ற எந்த ரக நகையானாலும் அவையனைத்தும் 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே இங்குள்ள சிலைகளிலே வழங்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். நரியைப் பரியாக்கியது இத் தல புராணத்தின் பெருமையாகும்.

இந்த ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது. குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப்பார்த்தால் உயிர்க்குதிரையோ என்று தோன்றும். குதிரைகளிலே சிறந்ததும் அழகு வாய்ந்ததும் பஞ்ச கல்யாணிக் குதிரையாகும். பஞ்ச கல்யாணி என்றால் அந்தக் குதிரையின் நான்கு கால்களிலும் அதன் கனுக்காலிலும் வெள்ளை நிறம் இருக்கும்.
நெற்றியிலும் பொட்டு வைத்தாற்போல வெள்ளை நிறம் இருக்கும்.
இவ்வாறு ஐந்து இடத்தில் வெள்ளை நிறம் இருக்கும் குதிரை பஞ்ச கல்யாணி குதிரையாகும்.

சிவபெருமான் தாங்கி நிற்கின்ற இங்குள்ள குதிரைச் சிலையிலும் மேற்சொன்ன ஐந்து இடங்களிலும் வெள்ளை நிறம் இருக்கின்றன. அது மட்டுமல்ல அந்தக் குதிரையின் பற்களும் வெண்மையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.

வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தி

இந்தக் கோயிலுக்குள் வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தியின் சிலை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஓலையினால் செய்யப்பட்டது போன்ற ஒரு கூடையினை இடுப்பில் வைத்து கையில் இடுக்கிக் கொண்டு குறி சொல்ல வருகின்ற குறத்தி போல அமைந்துள்ளது அச் சிலை.
இந்தச் சிலையை இந்தக் கோயிலின் செக் போஸ்ட் என்று சொன்னால் கூட பொருந்தும்.

இந்தச் சிலையை யார் பார்த்தாலும் பார்த்தவர்கள் அந்த இடத்தை விட்டு எளிதில் அகல மாட்டார்கள். தன்னிலை மறந்து அந்தச் சிலையையே சுற்றி வருவார்கள்.
தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பர் கூறியதைப் போல இந்த சிலை அழகில் மயங்கியவர்கள் ஆடைகண்டார் ஆடையே கண்டார் கூடை கண்டார் கூடையே கண்டார் என்று அச்சிலையின்ஒவ்வொரு அங்குலத்தையும் ரசிப்பதிலேயே மனம் பறிகொடுப்பார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =

Most Popular