ஐஸ்வர்ய மகாலட்சுமி – வரலாறு!

96

ஐஸ்வர்ய மகாலட்சுமி – வரலாறு!

திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 5 கி.மீ. அமைந்துள்ளது வெள்ளூர். மகாலட்சுமி சிவ லிங்கத்தை பிரதிட்டை செதொலைவில் ய்து தவமியற்றி வரம் பெற்ற அற்புதமான திருத்தலமே வெள்ளூர் திருக்காமேஸ்வரர் திருக்கோவில்.

ஆலயத்தின் வரலாறு:

செல்வத்திற்கு அதிதேவதையாக விளங்குபவள் திருமாலின் நாயகியான அன்னை மகாலட்சுமி. அவள் அருளால் மட்டுமே அனைத்து செல்வத்தையும் பெற முடியும் என்கிறது வேதம். தட்சன் மகளாக பிறந்த தாக்சாயனி தேவி தமது தந்தை வளர்த்த யாகத்தீயில் தன்னை மாய்த்து கொண்ட புராணக் கதை நாம் அறிந்ததே. அதன் பின் அன்னை பார்வதிக்கு சிவன் உயிர் வழங்கிய திருத்தலம் இதுவே ஆகும். காமனை தனது நெற்றிக்கண் சுவாலையால் தகனம் செய்த பின் ரதி தேவியின் கடும் தவத்தால் மன்மதனுக்கு உயிர் வழங்கியதால் இறைவன் திருக்காமேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார்.

சிவபெருமான் பஸ்மாசுரன் என்ற அரக்கனுக்கு எவர் தலையில் அவன் கை வைப்பினும் அவர் சாம்பல் ஆவார்கள் என்ற வரத்தினை அளித்து, பின் அவன் சிவபெருமானின் தலையிலேயே கை வைத்து சோதிக்க வந்தான். இதனைக்கண்ட மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அந்த அரக்கனை நடனமாடி சாம்பலாக்கி அழித்தார். பின் ஹரனும், ஹரியும் இணைந்து ஹரிஹர புத்திரன் ஐயன் ஐயப்பன் தோன்றினார். மகாவிஷ்ணு பெண் உருவெடுத்து மகவு பெற்றத்தால் கோபம் கொண்ட மகாலட்சுமி வில்வாரண்யமான வெள்ளூரில் சிவனை நோக்கி தவம் புரிந்தார் ஆனால் சிவன் தோன்றவில்லை.

எனவே மகாலட்சுமியே வில்வ மரமாக மாறி தவம் புரிந்து லிங்கத்தின் மேல் வில்வ மழை பொழிந்தால். இதனால் மனம் இறங்கி இறைவன் மகாலட்சுமி முன் தோன்றி ஐயப்பனின் அவதார நோக்கத்தை எடுத்துரைத்தார். அதன் பின் கோபம் தீர்ந்த லட்சுமி தேவிக்கு ஸ்ரீவஸ்ச முத்திரையுடன் சிவ லிங்கத்துடன் கூடிய மணிமகுடத்தை மகாலட்சுமிக்கு சூட்டி செல்வத்திற்கே அதிபதி ஆக்கினார் என்கிறது தலபுராணம்.

வில்வ மரமாக காட்சியளிக்கும் மகாலட்சுமி:

இங்கே தட்சிண பாகத்தில் (வடமேற்கில்) மகாலட்சுமி இன்றும் விலவ மரமாக காட்சி அளிப்பது சிறப்பான ஒன்றாகும். வேறு எங்கும் இல்லாத வகையில் தாயார் ஐஸ்வர்ய மகாலட்சுமி தனிசன்னதியில் அபயவரதத்துடன் பத்மாசனத்தில் காட்சி அளிக்கிறார்.

இரண்டு பைரவர்கள்:

முசுகுந்த சக்ரவர்த்திக்கு வலாசுரனை அழிக்க ஆயுதங்கள் அளித்து பைரவரே படைத்தளபதியாக சென்று வெற்றியை தந்தமையால் இவ்வூர் வெள்ளூர் எனப் பெயர்பெற்றது. மறுபிறவி தந்த மன்மதனுக்கு பைரவர் ஞான பைரவராக காட்சி கொடுத்து ஞானத்தை வழங்கினார். எனவே கால பைரவர், ஞான பைரவர் என்று இரண்டு பைரவராக ஒரே சன்னிதியில் எழுந்துருளி உள்ளார்.

கல்வி பயிலும் மாணவர்கள் ஞாயிறன்று ராகு காலத்தில் ஞான பைரவரை விளக்கேற்றி வழிபட கல்வியில் சிறந்து விளங்குவர். ஞானத்தை பொழிபவராக விளங்குகிறார் ஞான பைரவர்.

போகர் தவம் புரிந்த சுரங்கம்:

போகர், புலிப்பாணி, பாம்பாட்டி சித்தர் ஆகியோரின் தலைமையில் சித்தர்கள் பலரும் இங்கே தவமியற்றி பல்வேறு சித்துக்களை பெற்றனர் என்கிறது தலபுராணம். இன்றும் கோவிலின் ஈசான பாகத்தில் போகர் தவமியற்றிய சுரங்கம் உள்ளது. அகத்தியர் நாடி, காகபுஜன்டர் நாடி, வசிஷ்ட நாடிகளில் வேறெங்கும் சித்தர்களுக்கு சித்திக்காத சித்துக்கள் இங்கே வெள்ளூரில் சித்திக்கும் என்ற குறிப்பு உள்ளது. இங்கே சித்துக்களில் கைதேர்ந்த பின்பே போகர் பழனிக்கு சென்றார் என்கிறது தல வரலாறு.

கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும்:

இங்கே ரதி மன்மதனை மீண்டும் இறைவன் இணைத்து வைத்தார். எனவே இங்கு வந்து திருக்காமேஸ்வரர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பிகையை வணங்கினாள் கணவன் மனைவி பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமையுடன் வாழ்வர் என்பது கண்கூடு. ரதியும் மன்மதனும் தம்பதி சமேதராக இறைவனை வணங்கும் சிற்பம் இங்கே கோவில் உள்ளது.

சுக்ரவார பூஜை:

தங்கம் மற்றும் வெள்ளி உருக்கி நகைகள் செய்வதினால் ஐஸ்வர்ய தோஷம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம். தங்க வெள்ளி வேலை செய்வோர் இங்கே சுக்ர (வெள்ளிக்கிழமை) வாரத்தில் சுக்ர ஓரையில் (காலை 6 முதல் 7 வரை) ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு 16 தாமரை மலர்கள் சாற்றி 16 நெய் தீபம் ஏற்றி 16 முறை வலம் வந்து வணங்கினால் அனைத்து தோஷங்களும் நீங்கி செல்வ வளம் பெருகும்.

இங்கே பிரதோஷம் மற்றும் சோம வார பூஜைகளை காட்டிலும் சுக்ர வாரத்தில் சுக்ர ஓரை தரிசனமே சிறப்பானதாக கூறப்படுகிறது. பாற்கடலில் தோன்றிய அன்னை மகாலட்சுமியை வெள்ளூர் சென்று ஐஸ்வர்ய மகாலட்சுமியாக தரிசனம் செய்து திருக்காமேஸ்வரர் சிவகாமசுந்தரியின் பரிபூரண அருள் பெறுவோம்.