ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் வரலாறு!
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் குரு பகவானுக்கான சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. குருபெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற தேடி வரும் கோயிலாக ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது.
கோயில் தகவல்கள்:
தேவாரப் பாடலில் இடம் பெற்ற காவிரி தென்கரை ஸ்தலங்களில் இது 98ஆவது ஸ்தலமாகும். இங்கு மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்புலிங்க அருள் பாலிக்கிறார். இந்த ஸ்தலத்தின் அம்மையார் பெயர் ஏலவார்குழலி என்ற சுக்கிரவார அம்பிகை உள்ளார். சுக்கிரவாரம் என்பது வெள்ளிக்கிழமை அது பெண்களுக்கு உகந்த நாள் என்பதால் வெள்ளியின் பெயரைக் கொண்டு அருள்பாலிக்கிறார்.
இந்த கோயில் ஊரின் நடுவே அழகாக ஐந்து நிலைகள் கொண்ட ராஜ கோபுரங்களுடன் காட்சியளிக்கிறது. இக்கோயிலின் அமைப்பு வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்தால் முதலில் கண்ணில் படுவது அம்மன் சன்னதி, அடுத்து சுவாமி சன்னதி இரண்டையும் பார்க்கலாம். அதன் பிறகு குரு சன்னதி இருக்கும், அதாவது மாதா, பிதா, குரு என்ற அடிப்படையில் இக்கோயில் அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.
ஸ்தல வரலாறு:
மூலவரான ஆபத்சகாயேஸ்வரர் கிழக்கு நோக்கிய சன்னதியில் அருள்பாலிக்கிறார். இந்த ஸ்தலத்தில் சிறப்புடைய குரு தக்ஷிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்தில் உள்ளார். மேலும் இது குரு தக்ஷிணாமூர்த்தி பரிகார ஸ்தலமாகும். தக்ஷிணாமூர்த்தி உற்சவராகத் தேரில் பவனி வருவது தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பாகும்.
சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டார், ஆபத்சகாயேஸ்வரர், அவரை ஓரமாக வந்து கரையேற்றி காட்சி தந்தார் என்பது ஸ்தல வரலாறு. அப்போது நிலைதடுமாறி பாறையில் மோதியபோது அவரைக் காத்த விநாயகர், கலங்காமல் காத்த பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.
பூஜைகளும் பரிகாரமும்:
நாகதோஷம் நீங்கவும், பயம், குழப்பம், நீங்க இங்குள்ள விநாயகரை வழிபாடு செய்தால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். மேலும் திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த கோயிலில் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபகவானிற்குச் சங்கு அபிஷேகமும், விசேஷ அபிஷேகமும், அலங்கார ஆராதனையும் நடைபெறுகிறது. அதேபோல் தைப்பூசம், பங்குனி உத்திரம், தீர்த்தவாரி நடைபெறுகிறது.
சித்ரா பௌர்ணமி அன்று பத்து நாள் உற்சவ விழாவும், தட்சிணாமூர்த்திக்குத் தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது. குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்து 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம் என்பது ஐதீகம். குருபகவானுக்கு முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாத்துதல், கொண்டைக்கடலை சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியங்களுடன் பாலாபிஷேகம் செய்தால், சகல தோஷங்களும் நிவர்த்தியாகி அருள் பெறுவர்.
சிவனுக்கான பஞ்ச ஆரண்யத் தலங்களிலும் இதுவும் ஒன்று.
இந்த ஊரில், விஷக்கடி அபாயமோ, நச்சுத் தாக்குதல் ஆபத்தோ கிடையாது. ஆலகால விஷத்திலிருந்து காத்த ஈசன் இருக்கும் தலத்தில் வேறு விஷங்கள் என்ன செய்யும் என்கிறார்கள் பக்தர்கள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளியான நஞ்சை இறைவன் அருந்தி பிரபஞ்ச உயிர்களைக் காத்த தலம் ஆலங்குடி. ஆலமான நஞ்சைப் பரமனார் அருந்தியதால், ஆலம் குடி என்று அழைக்கப்பட்டு ஆலங்குடி ஆனது. ஆபத்திலிருந்து காப்பாற்றிய அந்த ஈசனுக்கு ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தின் தெற்கு கோஷ்டத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. இவரே இங்கு குரு. எனவேதான், இது குரு ஸ்தலமாகத் திகழ்கிறது. வியாழன் தேவ குரு. வியாழனால் தோன்றும் துன்பங்களுக்கு தட்சிணாமூர்த்தியே தீர்வு தருவார். அபய ஹஸ்தத்துடன், வீராசனத்தில் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன்; இருமருங்கிலும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்கக் காட்சி கொடுக்கிறார். இவரை வழிபடுவதால், ஆயுள், ஆரோக்கியம், சந்தானப் பேறு, புகழ், ஐஸ்வரியம் ஆகிய யாவும் குறைவிலாது கிட்டும் என்பது நம்பிக்கை.
14 ஜன்மங்களில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே, ஆலங்குடிக்கு ஒருவர் வரக்கூடும் என்பது நம்பிக்கை. சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆற்றுவெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது ஈசன் ரிஷப வாகனராகக் காட்சி கொடுத்து ஆலங்குடி அடைவதற்கும் வழி செய்தார். இந்தத் தலத்துக்கு வந்த சுந்தரர், இங்கு அருள்புரியும் ஸ்ரீஞான தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
குருபகவான்
ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி. மேற்குப் பகுதியில் காட்சி தருகிறார், கஜமுகாசுரனை வதம் செய்த ‘ஸ்ரீகலங்காமல் காத்த விநாயகர்.’ வெளிப் பிராகாரத்திலேயே, தெற்குப் பார்த்த அம்பாள் சந்நிதி.
உள் வாயில் வழியாக நுழைந்தால் சூரிய பகவான் சந்நிதி. அருகிலேயே உற்ஸவ சுந்தரர். உள் பிராகாரத்தில் நால்வர் பெருமக்கள், சூரியநாதர், சோமேசநாதர், குரு மோட்சேஸ்வரர், சோமநாதர், சப்தரிஷி நாதர், விஷ்ணுநாதர், பிரமீசர் ஆகிய சப்த லிங்கத் திருமேனிகள்.
ஸ்ரீகாசிவிஸ்வநாதர் – விசாலாட்சி, அகத்தியர் ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர். வடக்குச் சுற்றில் ஸ்ரீநடராஜர் சபை. ஆக்ஞா கணபதி, கல்யாண சாஸ்தா, சோமாஸ்கந்தர், சப்த மாதர்கள், சனகாதி முனிவர்களோடு கூடிய தட்சிணாமூர்த்தி என ஏராளமான உற்ஸவ மூர்த்தங்கள் அருள்பாலிக்கிறார்கள்.
கருவறையில் காட்சிகொடுக்கும் ஈசனுக்கு ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர். ஸ்ரீஇரும்பூளை நாதர், ஸ்ரீகாசி ஆரண்யேஸ்வரர், ஸ்ரீஆரண் யேஸ்வரர், ஸ்ரீஆலங்குடிநாதர், ஸ்ரீஆலங்குடியான் எனப் பல்வேறு திருநாமங்கள் வழங்கப்படுகிறது.
இந்த ஆலயத்தில் அகத்தியரை வழிபட்டபின், முருகனை வணங்கினால், மன நோய், மனக்குழப்பம் ஆகியன அகலும் என்பது நம்பிக்கை.
ஆலங்குடியின் தலவிருட்சம் பூளைச்செடி. தீர்த்தம்- அமிர்தப் பொய்கை. விஷத்தை ஆண்டவன் எடுத்துக்கொண்டு, அமுதத்தை நமக்கு வழங்குவதால், இந்தப் பொய்கைக்கு அமிர்தப் பொய்கை என்ற பெயர் ஏற்பட்டதாம். கிழக்கே சற்று தொலைவில் ஓடும் ஆறு, பூளைவள ஆறு. இதுவும் இத்தலத் தீர்த்தமே. கோயிலுக்குள்ளே உள்ள ஞான கூபம் என்ற கிணறும் விசேஷமானது. சுவாமிக்கு ஐப்பசி அபிஷேகம் பூளைவள ஆற்று நீரால் நடைபெறும்.
இந்தத் தலத்தில் பிரம்ம தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சப்த ரிஷி தீர்த்தம் ஆகிய பதின்மூன்றும், பூளைவள ஆறு, அமிர்த புஷ்கரிணி, ஞான கூபம் ஆகிய மூன்றும் சேர்த்து மொத்தம் 16 தீர்த்தங்கள் இருப்பதாக ஐதிகம்.
சிவனுக்கான பஞ்ச ஆரண்யத் தலங்களிலும் இதுவும் ஒன்று. இந்த ஊரில், விஷக்கடி அபாயமோ, நச்சுத் தாக்குதல் ஆபத்தோ கிடையாது. ஆலகால விஷத்திலிருந்து காத்த ஈசன் இருக்கும் தலத்தில் வேறு விஷங்கள் என்ன செய்யும் என்கிறார்கள் பக்தர்கள்.
ஆலங்குடி குரு தட்சிணாமூர்த்தியை எல்லா நாள்களிலும் வழிபடலாம் என்றாலும் வியாழக்கிழமைகள் மிகவும் விசேஷம்.
இங்கு நடைபெறும் தீப வழிபாடு மிகவும் சிறப்புவாய்ந்தது. விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றிவிட்டும் தட்சிணாமூர்த்திக்கு 24 விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள் பக்தர்கள். பின்பு பிராகாரத்தை 24 முறை வலம் வரவேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து ஆபத்சகாயேஸ்வரரையும் ஏலவார்குழலி அம்மனையும் வேண்டி வழிபட சகல பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை. குருபலம் கைகூடும்.
செல்லும் வழி
இக்கோயில் கும்பகோணத்திலிருந்து நீடாமங்கலம், மன்னார்குடி சாலையின் தெற்கே 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன. முக்கியமாகக் காலை 6 மணி முதல் பிற்பகல்1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
