ஆலவட்டம்மன் கோயில் – புராணக் கதைகள்!
சென்னையில் அனகாபுத்தூர் பகுதியில் உள்ள கோயில் ஆலவட்டம்மன் கோயில். கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் கருதப்படுகிறது. மண் மனம் மாறாமல் சென்னையில் புகழ்பெற்ற கோயிலாக திகழும் அம்மன் கோயிலில் ஆடி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அனகாபுத்தூர் பகுதி மக்களுக்கு கண்கண்ட தெய்வமாக காவல் தெய்வமாக இருப்பது ஆலவட்டம்மன். இந்த ஆலயம் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்துக்கு மிக அருகில் இருக்கிறது. அந்த சிவாலயத்தின் வகையறா ஆலயங்களுக்கு உட்பட்ட ஆலயங்களில் ஒன்றாக ஆலவட்டம்மன் கோயில் திகழ்கிறது.
மிக சிறிய கோயிலாக ஆலவட்டம்மன் கோயில் திகழ்கிறது. ஒரேயொரு பிரகாரத்துடன் இந்தக் கோயில் திகழ்கிறது. ஆலயத்துக்கு வெளியில் சிறிது இடம் இருக்கிறது. அங்குதான் முக்கிய விழாக்களை நடத்துகிறார்கள். இந்த அம்மன் அனகாபுத்தூரில் எந்த கால கட்டத்தில் உருவானாள்? அவளுக்கு ஆலவட்டம்மன் என்ற பெயர் எப்படி உருவானது? என்பதற்கெல்லாம் ஆதாரப்பூர்வமான சரித்திர சான்றுகள் எதுவும் இல்லை. இதன் மூலம் காலத்தை வென்ற அம்மனாக இந்த அம்மன் கருதப்படுகிறாள்.
மிக சிறிய கருவறையில் ஆலவட்டம்மன் கம்பீரமாக வீற்றிருக்கிறாள். அந்த அருள் கோலம் பக்தர்களை மெய்மறக்க செய்கிறது. சென்னையில் உள்ள மிக அழகான அம்மன் விக்கிரகங்களில் ஆலவட்டம்மன் விக்கிரகம் மிகவும் தனித்துவம் கொண்டதாக உள்ளது. நான்கு கரங்களுடன் இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்டபடி அம்மன் காட்சியளிக்கிறாள். ஆலவட்டம்மன் தலை மீது 5 தலை நாகம் படம் விரித்து குடை பிடித்து இருக்கும் காட்சி கம்பீரமாக உள்ளது. இந்த வடிவத்தில் ஆலவட்டம்மனை தரிசிக்கும்போது நமது பாவம் எல்லாம் பறந்து போய் விடும் என்பதை ஐதீகமாக சொல்கிறார்கள். வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை எல்லாம் வாரி வழங்கும் ஆலவட்டம்மன் மூன்று சக்திகளின் ஒருங்கிணைந்த ஒரே வடிவமாக தனது பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
அதாவது இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளின் ஒன்றுபட்ட சொரூபமாக திகழ்கிறாள். ஆலவட்டம் மனை தலைதாழ்த்தி பணிந்து உள்ளம் உருகி கண்ணீர் சிந்த வேண்டிக் கொண்டால் நினைத்தது எல்லாம் நிறைவேற்றி தருவாள். தனம், தானியம், கல்வி, அறிவு, புகழ், ஆயுள், ஆரோக்கியம், அமைதி, தன்னம்பிக்கை போன்ற செல்வங்களை ஆலவட்டம்மனை நம்பி வழிபட்டால் நிச்சயம் பெறலாம்.
ஆலவட்டம்மன் சிலை முன்பு சிரசும் இடம் பெற்றுள்ளது. இந்த சிரசுக்கு தினமும் மஞ்சள் காப்பு அலங்காரம் செய்கிறார்கள். இந்த மஞ்சள் காப்பு அலங்காரம் மற்ற எந்த ஆலயங்களிலும் இல்லாத அளவுக்கு மிகவும் சிறப்பாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் தகடு வேய்ந்த கொடி மரம், கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம், விநாயகர், ஆலவட்டம்மன், சப்த கன்னியர்கள், அன்னமார்கள், நாகாத்தம்மன், காத்தவராயன் மற்றும் பரிவார தேவதைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
அன்னையின் அருளால் இங்கு வரும் பக்தர்களுக்கு மன நிம்மதி, திருமணவரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி ஆகியவை கிடைக்கிறது. மேலும் இங்கு குழந்தை செல்வம் இல்லாதவர்கள் அரச மரத்தில் தொட்டில் கட்டுவது இத்திருத்தலத் தின் சிறப்பாகும். இவ்வாலயத்தில் அம்மை வார்த்தவனுக்கு தீர்த்தம் வழங்குவது தனி சிறப்பு.
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், அம்மனுக்கு புடவை சாற்றியும், பொங்கல் வைத்தும், வேப்பஞ் சேலை கட்டியும், அங்கப் பிரதட்சணம் செய்தும், கண்ட தீபம், அலகு குத்துதல், முடி காணிக்கை மற்றும் தீ மிதித்தல் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
திருவிழாக்கள்:
• ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமி அன்று மாபெரும் பால் குட விழா இவ்வாலயத்தில் வெகு விமரிசையாக நடை பெறும்.
• ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், விசேஷங்கள் என அமர்க்களப்படும் ஆலயம்.
• இந்தக் கோயிலில் ஆடி மாதம் நான்காவது வாரம் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒன்பது நாள் கொண்ட சிறப்பு மாபெரும் தீமிதி திருவிழா நடைபெறும்.
• இத்திருக்கோவிலில் தீமிதி திருவிழா அன்று திருவீதி உலா வலம் வரும் ஆலவட்டம்மன் ஆலய சக்தி கிரகம் மிகவும் சிறப்புடையதாகும்.
• ஆடி 6-ம் வாரம் அம்மனுக்கு 108 இளநீர் அபிஷேகம், சாந்தி பூஜை நடைபெறும்.
• நவராத்திரி விழா, மாசி மகம், தீர்த்தவாரி உற்சவம், ஜனவரி மாதம் மாபெரும் சமபந்தி போஜனம், கும்பாபிஷேக பூர்த்தி விழா மற்றும் மார்கழி பூஜை ஆகியவை ஆலய விழாக்கள் ஆகும்.
• இத்துடன் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் உற்சவர் அம்மனுக்கு தாலாட்டு மற்றும் விஷேச பூஜை நடைபெறும்.
இந்த கோயிலில் நடைபெறும் ஆடி மாத திருவிழாக்களில் அம்மனுக்கு நடத்தப்படும் வளையல் அலங்காரம் மிகவும் புகழ் பெற்றது.
