கடன் பிரச்சனை தீர பரிகாரம்!
சொந்த தொழிலில் கடன் இல்லாமல் முன்னேற வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால், கடன் வாங்கி தான் தொழிலே ஆரம்பிக்கும் நிலை இருக்கும். சிலர் தாங்கள் சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்க முடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
எவரும் மகிழ்ச்சியாக விருப்பத்துடன் கடன் வாங்குவதில்லை. ஒருவரிடம் கடன் வாங்கி விட்டால் போதும், அவர்கள் எப்போது கடனை திருப்பி கேட்பார்கள் என மனது எப்பொழுதும் கவலையுடனும், படபடப்புடனும் இருக்கும். ஜாதக கட்டத்தில் புதன் பகவானும், சுக்கிர பகவானும் வலுவிழந்து காணப்படும் போது, என்ன தான் முட்டி மோதினாலும் சொந்த தொழிலில் வெற்றி காண முடியாது. சொந்த தொழிலில் முன்னேற ஜோதிட ரீதியாக சில பரிகாரங்கள் இருக்கின்றன. அவ்வாறு என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க…
புதன்கிழமையன்று பச்சைப்பயறு தானியத்தை வாங்கி ஊற வைத்து வெல்லம், ஏலக்காய், நாட்டு சர்க்கரை சேர்த்து நெய் ஊற்றி சுவையான பாயசம் தயார் செய்து வீட்டின் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று நிவேதனமாக படைத்து அந்த பாயசத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்கவும். அவ்வாறு கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருக்கும் பெருமாள் படத்திற்கு இந்த பாயசத்தை படைத்து, வீட்டின் அக்கம்-பக்கத்தில் இருப்பவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த பாயசத்தை தானமாக கொடுக்கவும். அவ்வாறு செய்வதால் ஜாதகத்தில் புதன் பகவான் வலுவாகி விடுவார்.
அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை பசும்பாலில், ஏலக்காய், நெய், கற்கண்டு சேர்த்து பால் பாயசம் செய்து மகாலட்சுமிக்கு நிவேதனமாக வைத்து அந்த பாயசத்தை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிட வேண்டும். இதை செய்யும் போது சுக்கிரன் வலுவடைகின்றார். வாரம்தோறும் வரக்கூடிய புதன்கிழமையன்றும், வெள்ளிக்கிழமையன்றும் இந்த இரண்டு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்து வருபவர்கள், தொடங்கக்கூடிய தொழிலாக இருக்கட்டும் அல்லது நஷ்டத்தில் ஓடி கொண்டிருக்கும் தொழிலாக இருக்கட்டும் நிச்சயம் வெற்றிகரமான லாபத்தை அடைவார்கள்.
நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே 11 வாரங்கள் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். அதுவும் குறிப்பாக புதன் கிழமையன்று புதன் ஓரை வரும் போதும், வெள்ளிக்கிழமையன்று சுக்கிர ஓரை வரும் போதும் இந்த பரிகாரத்தை செய்வது இரட்டிப்பு பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.