Monday, October 16, 2023
HomePurana Kathaigalஅமிர்த நாயகி சமேத நாகநாத சுவாமி வரலாறு!

அமிர்த நாயகி சமேத நாகநாத சுவாமி வரலாறு!

திருப்பாதாளேச்சுரம் என்ற பாமணி, அருள்மிகு அமிர்த நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில்!

தல வரலாறு:

ஒரு சமயம் சுகல முனிவர் தனது தாயாரின் அஸ்தியை கங்கையில் கரைக்க, ஒரு மகன் தாய்க்குச் செய்ய வேண்டிய புனிதமான கடமையை நிறைவேற்றுவதற்காக, காசியை நோக்கித் தன் சீடனுடன் சென்று கொண்டிருந்தார். அந்தி சாயும் நேரம் ஆகிவிட்டதனால், தன் சீடனிடம் அஸ்தி மூட்டையை கொடுத்துவிட்டு, சுகல முனிவர் சந்தியாவந்தனம் செய்யச் சென்றார்.

அந்த வேளையில், சீடன் அஸ்தி மூட்டையை பிரித்துப் பார்க்க கலசத்தினுள் தங்கமாக ஜொலித்தது. இதனைக் கண்ட சீடன் பயந்து, மூட்டையை திரும்ப மூடிவிட்டான்.
அவர்களது காசியை நோக்கிய பயணம் தொடர்ந்தது. காசிக்குச் சென்றதும், அஸ்தி மூட்டையை பிரித்துப் பார்த்தால் சாம்பலே இருந்தது.

இந்த நிகழ்வை சுகல முனிவரிடம் எடுத்துக் கூறினான் சீடன். உடன் முனிவர், அஸ்தி பொன்னைப்போல பிரகாசித்த அந்த இடமே காசியை விட புனிதமான இடம், எனக் கூறி, மீண்டும் அந்த இடத்திற்கே வந்து, முன்பு வெட்டுக் குளம் எனவும், தற்போது ருத்ர தீர்த்தம் எனவும் அழைக்கப் படுகின்ற குளத்தின் கரையில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆலயம் கட்டி அக்குளத்திலேயே தனது தாயாரின் அஸ்தியினை கரைத்து அங்கேயே தங்கியும் விட்டார் சுகல முனிவர்.

அங்கு தங்கியிருந்த சுகல முனிவர் ஒரு பசுவினை வளர்த்து வந்தார். அந்த பசு, தினப்படி புல் மேய்ந்து பசியாறச் சென்ற இடத்தில் ஒரு புற்றின் மேல் தினமும் பாலைச் சுரந்தது. இதனால் சுகல முனிவரின் அன்றாடப் பயன்பாட்டிற்கு பால் கிடைக்காமல் போனது. ஒரு நாள் பசு மேய்ச்சலுக்கு செல்லும்போது முனிவரும் அதன் பின்னால் சென்று பார்த்த பொழுது, பசு, புற்றின் மேல் பால் சுரப்பதை கவனித்தார்.
ஏதோ கோபத்தில்தான் அது இவ்வாறு செய்வதாக சுகல முனிவர் நினைத்துக் கொண்டு, மாட்டின் மேல் ஒரு கம்பை விட்டெறிந்தார்.

இதனால் சினம் கொண்ட மாடு புற்றினை தன் கொம்பால் இடித்துத் தள்ளியது. அச்சமயம், புற்று மூன்றாகப் பிளந்து உள்ளிருந்து லிங்கம் தோன்றியது. பின்னர் பசுமாடு ஓடிச்சென்று குளத்தில் விழுந்து இறந்தது. உடன் சிவபிரான், ரிஷபாருடர் வடிவத்தில் தோன்றி பசுவினை மீண்டும் உயிர் பெறச் செய்தார். அந்த பசுவின் பாலபிஷேகத்தால் தனது மனம் குளிர்ந்ததாகச் சொன்ன சிவன், பசுவிடம், “உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள்”, எனக் கூறினார்.

அதற்கு அந்த பசு, தன்னிடம் இருந்து கிடைக்கும் எல்லா பொருட்களும் ஈசனுக்கே அர்ப்பணம் செய்யப்பட வேண்டும் எனக் கேட்டது. அவ்வாறே நடக்கட்டும் என ஈசன் ஆணையிட, அது முதலாக பசுவிடம் இருந்து கிடைக்கும் பஞ்சகவ்யம் எனப்படும் பால், தயிர், நெய், சாணம், கோமியம் போன்றவை சிவனின் அபிஷேகத்திற்கு உரிய பொருள்களாக ஆயின. சுயம்பு நாதனாக தோன்றிய சிவலிங்கத்தை வழிபட்டு சுகல முனிவரும், தான் பிறந்த பயனை அடைந்தார்.

அந்த சமயத்தில், அஷ்ட நாகங்கள் ஆகிய வாசுகி, கார்கோடன், பத்மன், மகாபத்மன், சங்கன், சங்கபாலன், குளிகன், அனந்தன் எனப்படும் எட்டு நாகங்களின் தலைவனும், விஷ்ணு பகவான் வீற்றிருக்கக் கூடிய பேறு பெற்றவனும் ஆகிய ஆதிசேஷன், திருப்பாற்கடலில் அமிழ்தம் கடையும் போது, அதனுடன் வந்த விஷத்தை பக்தர்களின் நன்மைக்காக சிவபிரான் உண்டதனால், அந்த தோஷம் தனக்கும் ஏற்பட்டதாகக் கருதிய ஆதிசேஷன், அதற்குப் பரிகாரம் செய்ய எண்ணியபோது, இந்த பாதாளத்தில் இருந்து தோன்றிய பாதாளேச்வரரை வழிபட்டால் அவரது தோஷம் நீங்கும் என்ற அசரீரி சொல் கேட்டது.

அதன் படி இங்கு வந்த ஆதிசேஷன், சன்னதி செல்லும் வழியெல்லாம் லிங்கங்களாக இருந்த காரணத்தால், தன் பாதம் சுவாமி மேல் படக்கூடாது என்ற எண்ணத்தில், தனஞ்செய முனிவராக மனித முகமும், பாம்பு உடலும் கொண்டு தவழ்ந்து சென்று இத்தல இறைவனை வழபாட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றார். இத்தலத்தில், ஆதிசேஷன், தனஞ்செய முனிவர் வடிவில் வீற்றிருந்து ராகு, கேது நிவர்த்தி பரிகார மூர்த்தியாக விளங்குவது, இத்தலத்தின் சிறப்பு.

நாகநாதசுவாமி சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுவாமிக்கு சற்று தள்ளி வலப்புறமாக மனித முகமும், பாம்பின் உடலும் ஒருங்கே அமைந்த வடிவத்தில் இறைவனை வழிபட்ட ஆதிசேஷன், சுவாமி சன்னதியைச் சுற்றி நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் வடிவில் அண்ணாமலையார், பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை, ஆக்ஞா கணபதி, நாகலிங்கம், காளிங்க நர்த்தனத்துடன் கூடிய மும்மூர்த்தி விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி, துர்காதேவி, கஜலெட்சுமி, ஞானசரஸ்வதி, சனேஸ்வரர், பைரவர் என வரிசையாக இவர்களது தரிசனம்.

பின்னர், நவக்ரஹ தரிசனம், நால்வர் தரிசனம். சுவாமி சன்னதியின் இடப்புறமாக அம்மன் சன்னதி. திருக்கோயிலை சுற்றி வரும்போது சுவாமி சன்னதியை சுற்றியபின் நவக்ரஹங்களை சுற்றி முடித்தால் ஓம் என்னும் வடிவத்தில் முடியும் என்ற தகவல் அக்கோயில் சிவாச்சாரியார் சொன்னது. சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத் தலங்களுக்கு சற்று கூடுதல் சிறப்பு உண்டு. கைலாச மலையே உலகின் முதல் சுயம்புவாகக் கருதப் படுகிறது.

சுயம்பு லிங்கங்களுக்கு, அவை புற்று மண்ணால் ஆனதால் கரைந்து விடாமல் இருக்க வேண்டி, வெள்ளிக் கவசம் சாற்றியே அபிஷேகம் செய்விப்பது வழக்கம்.
மாறாக நாகநாதசுவாமிக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தினப்படி இருவேளை எந்தவித கவசமும் சாற்றாமல் நேரடியாகவே அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. இது இத்தலத்தின் பல்வேறு சிறப்புக்களுள் ஒன்று.

தல மூர்த்தி, திருத்தலம், தலமரம், தலதீர்த்தம், ஆறு என எல்லா வகையிலும் சிறப்புற விளங்கும் விதமாக அமைந்துள்ளது இந்த பாமணி திருத்தலம். இத்திருக்கோயிலைப் பற்றி ஆறு கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய 1000 வருடங்களுக்கு முன்பாக திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் போன்ற சீர்மிகு சிவனடியார்களாகிய நாயன்மார்கள் இந்தத் திருக்கோயிலில் பாடியுள்ளனர். சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் இத்திருக்கோயில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேஷங்கள்:

திருக்கோயில்கள் என்றாலே திருவிழாக்களுக்கு பஞ்சமிருக்காது. வருடம் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும் திருக்கோயில் இது. இத்திருக்கோயிலில் பிரதோஷ மகிமை பற்றி சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதோஷம் என்பது ஐந்து வகையாக கொண்டாடப் படுகிறது. தினமும் மாலை 4:30 மணி முதல் 7:00 மணிவரையிலான காலம் நித்யப் பிரதோஷம் என கூறப்படுகிறது.

வளர்பிறையில் வரும் பிரதோஷம் பட்சப் பிரதோஷம் என வழங்கப் படுகிறது.
தேய்பிறையில் வரும் பிரதோஷம் மாதப் பிரதோஷம். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மகா பிரதோஷம் என அழைக்கபடுகிறது. தேய்பிறையில் வரும் சனிப்பிரதோஷம் எல்லா பிரதோஷங்களையும் விட மிகச் சிறந்தது என்பது ஐதீகம். கடைசியாக உலகம் அழியும் நேரத்தில் வரக்கூடிய பிரதோஷமாக கருதப்படுவது பிரளய பிரதோஷம் எனப்படுவது.

ஒருமுறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போரில், தேவர்கள் தோற்றுவிட, இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கி, முகுந்த சக்ரவர்த்தி, அசுரர்களுடன் போரிட்டு வென்றார். அதற்குப் பரிசாக, இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும், கொடி முந்திரி எனப்படும் திராட்சையையும், முகுந்த சக்ரவர்த்திக்குப் பரிசாகக் கொடுத்தார். அவர் அந்த லிங்கம், திராட்சை இவற்றுடன், திருவாரூரில் உள்ள தியாகேசர் சன்னதிக்கு வந்து சேர்ந்தார்.

அந்த சமயத்தில், “திருப்பாதாளேச்சுரத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவதால் அங்கு சென்று நிவேதனம் செய்” என அசரீரி கேட்க, இக்கோயிலுக்கு வந்து இத்தல இறைவனை வணங்கி திராட்சை நிவேதனம் செய்வித்தார். அன்று முதல் கொடி முந்திரி எனப்படும், பச்சை திராட்சை சிறப்பு நெய்வேத்தியமாக இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. நீலத்வஜ மகாராஜா, அம்சத்வஜ மகாராஜா என்பவரின் மைந்தன். இக்கோயிலின் மேற்குப் புறமாக நம்பிக்குளம் என்னும் நீலத்வஜ தீர்த்தம் என்னும் குளத்தை வெட்டி அன்னச்சத்திரங்கள் கட்டி, அன்னத்வஜன் என்ற பெயருடன் திகழ்ந்தார்.

பாண்டிய நாட்டில் வாழ்ந்த பிப்பலாயன் என்பவருக்கு ஏற்பட்ட சரும நோய் தீராத நோயாக இருந்தது. வில்வாரண்யத்தில் ஆரம்பித்து பல திருக்கோயில்களை தரிசனம் செய்து கடைசியாக, இந்த நாகநாதஸ்வாமி திருக்கோயில் வந்து தீர்த்தங்களில் நீராடியபின் இக்கோயில் பிரசாதம் உண்டபின் தனது சரும நோய் நீங்கப் பெற்றார்.

தல விருட்ச வரலாறு:

திருப்பாற்கடலை கடையும் போது கிடைத்த பல்வேறு பொருட்களுள், பிரம்மனுக்கு நான்கு மாம்பழங்கள் கிடைத்தன. ஒரு பழத்தை கணபதிக்கும், ஒரு பழத்தை ஆறுமுகப் பெருமானுக்கும், மூன்றாவதை காஞ்சியில் நட்டபின், நான்காவதை இத்தலத்திற்கு எடுத்து வந்து அந்த மாம்பழத்தின் சாற்றை நாகநாதசுவாமிக்குப் பிழித்து பின் மாங்கொட்டையை பிரம்மதீர்த்தத்தின் கரையில் நட்டுவைத்தார். இது முதலாக இத்தல விருட்சமாக மாமரம் விளங்குகிறது. மாம்பழச்சாரும் நாகநாதருக்கு அபிஷேகம் செய்விப்பது இத்தல சிறப்பு.

திருக்கோயில் அமைவிடம்:

இந்த சிறப்பு மிக்க நாகநாத சுவாமி திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து 2 km தொலைவில் அமைந்துள்ள பாமணி என்ற அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 6 =

Most Popular