பக்தருடன் சொக்கட்டான் விளையாடிய ஆஞ்சநேயர்!
ஆஞ்சநேயரின் பரம பக்தர் ஒருவருக்கு சொக்கட்டான் விளையாட ஆசை. தன்னுடன் சேர்ந்து விளையாட ஆஞ்சநேயரே வரவேண்டும் என விரும்பினார். எனவே மனமுருகி ஆஞ்சநேயரைப் பிரார்த்தித்தார். அவர் முன் தோன்றிய ஆஞ்சநேயரும், பக்தரது விருப்பத்தை பூர்த்தி செய்ய ஒப்புக் கொண்டார். ஆனாலும் ஒரு நிபந்தனை விதித்தார். “நான் விளையாட்டில் விட்டுக் கொடுக்கமாட்டேன். எனவே தோற்றால் நீ வருத்தப்படக் கூடாது” என்றார். பக்தரும் சம்மதித்தார்.
இருவரும் விளையாட ஆரம்பித்தனர். பக்தர், ஒவ்வொரு முறையும் ‘ஜெய் அனுமான்’ என்றபடியே காய்களை உருட்டினார். ஆஞ்சநேயர், ‘ஜெய் ராம்’ என்றபடி காய்களை உருட்டினார். ஒவ்வொரு முறையும் பக்தனே வெற்றி பெற்றார். ‘சரி, அடுத்த முறை ஜெயிக்கலாம்’ என்று ஆஞ்சநேயர் மீண்டும் மீண்டும் விளையாட, வெற்றி பக்தனின் பக்கமே. மனம் வருந்திய ஆஞ்சநேயர், “ஸ்வாமி, தங்கள் நாமத்தை உச்சரித்தும் எனக்கு தோல்வியா?” என்று ராமரிடம் பிரார்த்தித்தார்.
அவர் முன் தோன்றிய ராமன்,”ஆஞ்சநேயா! நீ என் பக்தன். ஆதலால், உன்னிடம் என் சக்தி இணைந்துள்ளது. அவனோ உனது பக்தன். ஆதலால், அவனது சக்தியுடன் நம் இருவரது சக்தியும் இணைந்து உள்ளது. இதுவே அவனது வெற்றிக்குக் காரணம்” என்றார். அதனால் தான், பக்தர்கள், நடமாடும் கோவிலாக பார்க்கப்படுகிறார்கள், வழிபடப்படுகிறார்கள். காரணம், எப்பொழுதும் இறைவனை இதயத்தில் தாங்கிக் கொண்டிருப்பதால்.
இப்பொழுது, இதன் சாரம் என்ன?
வெற்றி வேண்டுமென்றால், ‘ஜய் அனுமான்’ என்று சொல்ல வேண்டும் என்பதா? இது குழந்தை புரிந்து கொள்ளும் அர்த்தம். நாம் ஒரு சில சமயங்களில், இடங்களில் மட்டும் தானே இறைவனை பார்க்கிறோம், வழிபடுகிறோம்?! இப்படி, நம்மால் முடியாத ஒன்றை செய்யும் செய்து காண்பிக்கும் அவர்களை/அந்த பக்தர்களை போற்றி வழிபடுவதுடன் நின்று விடாமல், நாமும் அது போல் மனதில், இடைவிடாது, லோக கார்யங்களின் ஊடே, வெற்றியோ, தோல்வியோ, கஷ்டமோ, சுகமோ, எதுவாக இருந்தாலும், அதனால் பாதிப்பு அடையாமல், அதில் பெரிதும் நாட்டம் கொள்ளாமல், இறைவனையே நினைக்க வேண்டும் என்பதாம்.
ஜெய் ஶ்ரீ ராம்
