திருநீற்றின் மகத்துவத்தை உணர்த்தும் புராணக் கதைகள்!
ஒருநாள் துர்வாச முனிவர் தன் காலை வேளை அனுஷ்டானங்களை முடித்து, சிவனை தியானித்து விட்டு நெற்றியில் திருநீறு அணிந்து பித்ரு லோகம் புறப்பட்டார். அப்போது செல்லும் வழியில் கிணறு ஒன்றைக் கண்டார். அந்த கிணற்றை எட்டிப்பார்த்துவிட்டு அதன் பிறகு நடக்க ஆரம்பித்தார்.
அந்த பெரிய கிணற்றினுள் பூலோகத்தில் பாவம் செய்த பலரும் அங்கே சித்ரவதை பட்டுக் கொண்டிருந்தார்கள். அதனை எட்டிப் பார்த்துவிட்டு துர்வாச முனிவர் குனிந்து அங்கே நகர்ந்த அடுத்த கணம் திடீரென்று நிலைமை தலைகீழாக மாறியது.
பாம்பு, தேள் இரண்டும் மலர் மாலைகளாயின.
அமில மழையானது ஆனந்தம் தரும் நிஜ மழையானது.
சுட்டெரிக்கும் தீ, இதமான தென்றலாக அங்குள்ளோரை வருடியது.
நரகம் முழுக்க நறுமணம் வீசியது.
அங்கே இருந்த பாவ ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர்.
முகத்தில் பிரகாசம் வீசியது.
இந்த நரகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த கிங்கரர்கள் பயந்துபோய் எமனிடம் ஓடினார்கள். அதிர்ந்து போன எமனும் வந்து பார்த்து அதிசயித்தான். இந்திரனிடம் ஓடினான். வந்து பார்த்த இந்திரனுக்கும் ஒன்றும் புரிய வில்லை. தேவாதி தேவர்கள் எவருக்கும் இதற்கான காரணம் புரியவில்லை.
எனவே, இந்திரன் முதல் தேவாதி தேவர்கள் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து எம் பெருமான் ஈசனிடம் சென்றார்கள். சிரித்தார் ஈசன். தன் நெற்றியைக் காட்டி, இந்தத் திருநீற்றை அகார, உகார, மகார (மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல்) விரல்களால் எடுத்து நெற்றி நிறைய திரிபுரண்டரமாகவே (மூன்று கோடுகளாக) அணிய வேண்டும்.
இதுதான் முறை.
அகாரம் – பிரம்மனையும்,
உகாரம் – விஷ்ணுவையும்,
மகாரம் என்னையும் குறிக்கின்றன. எனவே சாஸ்திர நெறிப்படி திருநீறு அணிந்த தவசீலரான துர்வாசர் பித்ரு லோகக் கிணற்றைக் குனிந்து பார்க்கும்போது அவரது நெற்றியில் இருந்து ஒரு சிறு துளி திருநீறு உள்ளே விழுந்து விட்டது. அதனால்தான், சொர்க்கமாக மாறிப் போனது என்றாராம் சர்வேஸ்வரன்.
சிறிதளவு திருநீறு கூட பாவம் செய்தவர்க மீது விழுந்தால் அவர்கள் புண்ணியம் செய்தவர்களாக மாறிப்போகிறார்கள்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…
ஓம் நமசிவாய
சிவாய நம
