Saturday, October 14, 2023
HomePurana Kathaigalமுத்துமாரியம்மன் தோன்றிய வரலாறு!

முத்துமாரியம்மன் தோன்றிய வரலாறு!

முத்துமாரியம்மன் தோன்றிய வரலாறு!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் இருந்து 4 கல் தொலைவில் உள்ளது கீழக்குறிச்சி என்னும் கிராமம். இந்த ஊரில் வாழ்ந்து வந்த குருக்கள் ஒருவர், வயலுக்கு நடுவே உள்ள ஒத்தையடிப் பாதையில் தினமும் நடந்து செல்லும் போது குறிப்பிட்ட ஓரிடத்தில் ஏதோ ஒன்று காலில் இடருவதும் இதில் அவர் விழுவதுமாகவே இருந்து வந்தது. இதனால் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களின் உதவியுடன், அந்த இடத்தைத் தோண்டினார் குருக்கள். அந்த இடத்தில் அழகிய அம்மன் சிலை ஒன்று தென்பட்டது. உடனே ஒரு அசரீரி குரல் கேட்டது “அருகில் உள்ள மலையடிவாரத்தில், சிவனார் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு அருகிலேயே எனக்கு கோயில் எழுப்பி வழிபடுங்கள். சுற்றியுள்ள ஊர் மக்களை எந்த நோய் நொடியும் தாக்காமல் நான் காப்பாற்றுகிறேன்” என்றது அந்த குரல்.

அதன்படி நார்த்தாமலையின் அடிவாரத்தில் சின்னதாக கோயில் எழுப்பி, அம்மனின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். இதையடுத்து அம்மை முதலான எந்த நோய்களும் இன்றி மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததால், அம்மனுக்கு முத்துமாரி என்று பெயர் வந்ததாகச் சொல்கின்றனர் பக்தர்கள். பெருமைமிக்க நார்த்தாமலையில் குடி கொண்டிருக்கும் முத்துமாரியம்மன், சக்தி மிக்க திருத்தலமாகப் புகழ் பெற்றதற்கு மலையம்மாள்தான் காரணம் என்கின்றனர் நார்த்தாமலை ஊர் மக்கள்.

வேட்ட வலம் என்னும் ஊர் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது. வேட்ட வலம் ஊரின் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவள் தான் மலையம்மாள். சிறு வயதில் மலையம்மாளை அம்மை நோய் கடுமையாகத் தாக்கியதால் ஜமீன்தார், மலையம்மாளைத் தூக்கிக் கொண்டு நார்த்தாமலை மாரியம்மன் கோயில் வாசலில் விட்டுச் சென்றுவிட்டார். அம்மை நோயால் தகிக்கும் வெப்பத்தில் தவித்த சிறுமியின் குரல் கேட்டு, கண் திறந்த முத்துமாரியம்மன், மலையம்மாளுக்கு அருள்புரிந்ததால் உடல் முழுவதும் பரவியிருந்த முத்துகள் அந்த நிமிடமே சுவடு தெரியாமல் மறைந்து விட்டது.

மலையம்மாள் சமாதி:

மலையம்மாள், கோயிலை சுத்தப் படுத்துவதும், அம்மனுக்கு முன்னே அமர்ந்து தவம் இருப்பதும் என இங்கேயே வாழ்ந்து உள்ளார். முத்துமாரியம்மன் தன் பூரண அருளை மலையம்மாளுக்கு வழங்கினாள். இதன் பின்பு குறைகளும் கவலைகளுமாக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தாள் மலையம்மாள்! அவளது அருள்வாக்கு பலித்தது; முத்துமாரியம்மனை வணங்கி, மலையம்மாளிடம் அருள்வாக்கு பெறுவதற்காக பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். மலையம்மாள் கோயிலை விரிவுபடுத்தி எழுப்பினாள். பிறகு பிரசித்தி பெற்ற தலமானது நார்த்தாமலை. கோயிலுக்கு சற்று அருகில் உள்ளது மலையம்மாள் சமாதி! ஆண்டு தோறும் வேட்டவலத்தில் வசித்து வரும் ஒரு பிரிவினர், இங்கு வந்து மலையம்மாளுக்கு பலியிட்டு, பூஜை செய்து வழிபடுகின்றனர்.

ஆலயத்தின் சிறப்பு:

முத்துமாரியம்மன் கோயில், சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது ஆகும். கிழக்குப் பார்த்தபடி, ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைப்பை கொண்டுள்ளது. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து சென்றால் கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் கனிவுடன் அருள் பாலிக்கிறாள். கட்கம், கபாலம், டமருகம் மற்றும் சக்தி ஹஸ்தம் கொண்டு நான்கு கரங்களுடன் அரவணைத்துக் காக்கிறாள் அம்மன். இத்தலத்தில் முத்துமாரியம்மன் சன்னதியில் வடபுறத்து சுவற்றில் கல்லிலான முருகன் எந்திரம் பதிக்கப்பட்டிருக்கிறது. இதில் மிகவும் அற்புதமான சக்தி உள்ளது என்கின்றனர் பக்தர்கள். முருகப் பெருமானுக்கே உரிய சக்தி ஹஸ்தத்துடன் காட்சி தருவதால், பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு காவடி எடுத்தும் வழிபடுகின்றனர்.

திருவிழாக்கள்:

புதுக்கோட்டை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இந்தக் கோயிலில் பங்குனியின் இரண்டாம் ஞாயிறு பூச்சொரிதல் விழா; 3-ம் ஞாயிறு அம்மனுக்கு காப்புக் கட்டுதல்; 4-ம் ஞாயிறு அன்று எட்டாம் நாள் திருவிழா; மறுநாள் திங்கட்கிழமை தேரோட்டம்; பத்தாம் நாள் தீர்த்தவாரித் திருவிழா நடைபெறுகிறது. பக்தர்கள் நார்த்தாமலையில் திரண்டு வந்து அம்மனின் அருள் பெற்றுச் செல்கின்றனர். ஆடி வெள்ளிக் கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அம்மை, திருமணத் தடை, பிள்ளை வரம், தீராத நோய், ஓயாத கவலை என கண்ணீரும் கம்பலையுமாக தன்னை நாடி வருவோருக்கு, கருணையும் கனிவுமாக அருள்பாலிக்கிறாள் நார்த்தாமலை அம்மன்.

பலன்கள்:

நாடி வரும் பக்தர்களின் குறை தீர்த்து, நலத்தை அள்ளித் தருபவள் இந்த முத்துமாரி அம்மன் என்றும், அவள் அருளால் தான் புதுக்கோட்டை மாவட்டமே செழிப்பாக இருக்கிறது என்று கூறுகின்றனர் பக்தர்கள். அம்மை நோய் கண்டவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் கரும்பு தொட்டில் கட்டி வேண்டினால் பலன் உண்டு என்பது நம்பிக்கை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + two =

Most Popular