ஸ்ரீபாகவத புராணம் – பகுதி 4

421

பீஷ்மர் மறைவு

உறவினர் பலரும் பாரதப் போரில் மடிந்து போனதை எண்ணி மிகவும் மனம் வருந்தினார் யுதிஷ்டிரர் எனப்படும் தருமபுத்திரன். வியாசமுனிவரும் கிருஷ்ண பகவானும் பலவிதமாக ஆறுதல் கூறியும் யுதிஷ்டிரர் மனம் தெளிவடையவில்லை. இவ்வாறு மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க யுதிஷ்டிரர் குருக்ஷேத்திரத்தில் விழுந்து கிடந்த பிதாமகர் பீஷ்மரைக் காணச் சென்றார் கிருஷ்ணனுடன். அப்போது பீஷ்மரைக் காண அனைவரும் கூடி இருந்தனர். பீஷ்மர் எல்லோரையும் அன்புடன் வரவேற்றார்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை இதய பீடத்தில் அமரச் செய்து பக்தியுடன் வணங்கிப் பூஜித்தார். பிறகு பாண்டவர்களையும், குந்தியையும் நோக்கி, “சிறு குழந்தைகளான உங்களை வைத்துக் கொண்டு இளவயதுள்ள குந்தி தேவி மிகவும் கஷ்டங்களை அனுபவித்து விட்டாள். தர்மன் அறனாகவும், வீரன் பீமனும், வில்லில் சிறந்த விஜயனும், உற்ற துணையாக ஸ்ரீ கிருஷ்ணனே இருந்தும் வரும் விபத்துக்களைத் தடுக்க இயலாமல் போய் விட்டது. இந்தக் கிருஷ்ணனுடைய எண்ணத்தை யாராலும் அறிய முடியாது. எனவே, யுதிஷ்டிரா! மனம் வருந்தாதே, எல்லாம் தெய்வச் செயல் என எண்ணி, மனதை திடப்படுத்திக் கொண்டு பிரஜைகளை ரக்ஷித்து, ஆட்சி புரிந்து பரதகுல சிரேஷ்டனாக விளங்குவாயாக.”

பிறகு எல்லோருக்கும் கிருஷ்ணனைப் பற்றிக் கூறுகிறார் பீஷ்மர். ஸ்ரீ கிருஷ்ணன் சாக்ஷத் பரமாத்மாவே; ஆதிநாராயண மூர்த்தி. இணையற்ற பெருமைகள் கொண்ட இவரை உற்ற நண்பனாக, சாரதியாக, மதிமந்திரியாகக் கொண்டு பழகி வந்தீர்கள். இடையறாத பக்தி பூண்டவர்களிடம், அளவில்லாதக் கருணை உடையவர். உயிரை இழக்கும் தருணத்திலும் எனக்கு திவ்ய தரிசனம் தர இங்கு வந்திருக்கிறார் அவருடைய கிருபையே கிருபை. பகவானுடைய நினைவிலேயே ஆழ்ந்து மரணமடைபவன் சகல பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான். சிவந்த தாமரை நயனங்களில் கருணை பொங்க, புன் சிரிப்பினால் ஒளிரும், மலர்ந்த முகத்துடன் விளங்கும் தேவதேவனைத் தியானத்திற்கு உகந்த சகல சதுர்புஜங்களுடன் என் எதிரில் தரிசன அளிக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன் என்றார் பீஷ்மர். தர்மபுத்திரர் கேட்டுக் கொண்டபடி சகல தரும சாஸ்திரங்களையும் நீதிகளையும் எடுத்துக் கூறினார். பீஷ்மர் எதிர்பார்த்த உத்தராயண புண்ணியகாலம் வந்தது. அவர் மனத்தை பகவானிடம் நிலைநாட்டி கண்களை மூடாமலே தியானம் செய்தார்.

பீதாம்பர தாரியாய், சதுர்புஜ மூர்த்தியாய் காட்சி அளிக்கும் அந்த ஆதி புருஷனாகிய ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை கண்ணிமைக்காமல் தியானம் செய்த வண்ணம் இருந்தார். எல்லாக் கஷ்டங்களும் மறைய இந்திரியங்களெல்லாம் வெளிநாட்டமற்று பகவானிடமே லயித்தன. சரீரத்தை விடப்போகின்ற அச்சமயத்தில் அவர் ஸ்ரீகிருஷ்ணனைப் பலவிதமாக துதி செய்யலானார். பிறகு மெல்ல மெல்ல மூச்சை அடக்கி, மவுனமாகி மனதைக் கிருஷ்ணனிடமே ஒன்றுபடச் செய்து கண்களை மூடி பரம்பொருளிடத்திலே ஐக்கியமாகி விட்டார்.

மறைந்த மகானுக்கு தருமபுத்திரர் உத்தரகிரியைகளைச் செய்தார். கிருஷ்ண பரமாத்மாவுடன் அஸ்தினாபுரம் வந்த யுதிஷ்டிரர் பெரிய தகப்பனாருக்கும் காந்தாரிக்கும் விஷயத்தைத் தெரிவித்து ஆறுதல் கூறினார். திருதராஷ்டிரனிடமும் அனுமதி பெற்றுத் தர்மநீதி தவறாமல் அரசாட்சி செய்து வந்தார். தருமபுத்திரர் ஆட்சியில் எங்கும் அமைதியும், ஆனந்தமும் சுபிக்ஷமும் நிரம்பி இருந்தன.

ஓம் க்ரிஷ்ணாய நமஹ!

தொடரும்…