ஸ்ரீ தியாகராஜரின் கீர்த்தனைகளைக் கொண்டு சொல்லப்படும் நிகழ்வுகள்.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பெருமையையும், அவரது ஸங்கீதத்தைப் பற்றியும் கேள்விப்பட்டு அவர் தங்கள் சபையில் வந்து பாடவேண்டுமென்று கேட்டுக் கொண்டும், ஸ்வாமிகள் போகவில்லையாம். அப்போது “நிதிசால ஸுகமா” எனும் கீர்த்தனையைப் பாடியதாகக் கூறுகிறார்கள். “நிதிசால” எனும் கீர்த்தனையில் எல்லாவற்றினும் உயர்ந்ததாக இராம தரிசனத்தைத் தான் மதிப்பதாகவும், உலகியல் சார்ந்தவற்றின் பயன்களில் தனக்குள்ள வெறுப்பையும், தன் வைராக்கியத்தையும் தியாகராசர் உறுதி செய்கிறார். “நிதியும் செல்வமும், மிகுந்த இன்பத்தைக் கொடுக்கக் கூடியவைகளா? அல்லது ஸ்ரீ ராமனின் ஸந்நிதியில் சேவை புரிவது சால சுகம் தருமா? மனமே! இதற்கு உண்மையான பதிலைக் கூறு. தயிர், வெண்ணெய், பால் முதலியன சுவை தருமா? அல்லது தசரதகுமாரன் ராமனைத் தியானித்துப் பாடும் பாடல் ருசி தருமா? அடக்கம், சாந்தம் எனும் குணம் அமைந்த கங்கா ஸ்நானம் சுகம் தருமா? அல்லது சிற்றின்பச் சேறு நிறைந்த கிணற்று நீர் சுகம் தருமா? அகம்பாவம் நிறைந்த மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா? அல்லது நன்மனத்தவனாகிய தியாகராஜன் வணங்கும் தெய்வத்தைத் துதித்தல் சுகம் தருமா?” இதுதான் அந்தப் பாடலின் கருத்து. தஞ்சை மராட்டிய மன்னன் தன்னை அழைத்தபோது வரமறுத்து இந்தப் பாடலைப் பாடினார் என்று பலரும் எழுதுகிறார்கள். இதைப்போல பல சம்பவங்கள் இவரது வாழ்க்கை சரிதத்தை எழுதியவர்கள் கூறியிருந்த போதிலும், பல இவரது பாடல்களின் கருத்தின் அடிப்படையில் யூகித்து எழுதியிருக்கிறார்களே தவிர இதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பது சிலரது கருத்து. இது போலவே பல சந்தர்ப்பங்கள் இவர் வாழ்க்கை வரலாற்றில் காணப்படுகின்றன.. பெரிய மகான்களின் வரலாற்றை எழுதும்போது கூடியவரை உள்ளது உள்ளபடி எழுதுவது சிறப்பு.
ஸ்ரீ தியாகராஜர் திருப்பதி சென்றபோது திருவேங்கடத்தான் சந்நிதியில் திரைபோட்டு மறைத்திருந்ததாகவும், அது அறுந்து விழ வேண்டி “தெர தீயகராதா” எனும் பாடலைப் பாடினார் என்றும் கூறுகிறார்கள். சிறந்த இராம பக்தரான ஸ்ரீ தியாகராஜர் பெருமாள் சந்நிதிக்குச் சென்று அங்கு அலங்காரங்கள் நடைபெற்று தீபாராதனைக்காகத் திரை விலகும்வரை காத்திருக்காமல், திரை அறுந்து விழும்படியாக பாடியிருப்பாரா என்ற ஐயப்பாடு தோன்றுவது இயல்பு அல்லவா? திரை போடப்பட்டு வேங்கடவனின் தரிசனம் உடனே கிடைக்கவில்லையே என்று அவர் வருந்தியிருக்கலாம். அந்த நேரம் பார்த்து திரை விலக்கப்பட்டு இவருக்குத் தரிசனம் கிடைத்திருக்கலாம். அதுதான் சரியான நிகழ்வாக இருந்திருக்க வேண்டுமே தவிர, திரை அறுந்து விழும்படி இவர் பாடியிருப்பாரா என்பது கேள்விக்குறிதான். இந்தப் பாடலின் உட்கருத்து என்னுள்ளே இருக்கும் பொறாமை எனும் திரையை நீ விலக்கலாகாதா? பரமபுருஷா! அந்தப் பொறாமை எனும் திரை தர்மம் முதலான நான்கு வகை புருஷார்த்தங்களை என்னிடம் அணுகாத வண்ணம் விரட்டியடிக்கிறதே. கடவுளை உணராமலும், காணாமலும் மத, மாற்சர்ய, காமக்குரோதத் த்ிரைகள் நீங்கி இறை தரிசனம் கிட்டாதா என்ற கருத்தில்தான் இப்பாடல் உருவாகியிருக்க வேண்டும் என்ற கருத்தும் நியாயமானதாகத்தான் இருக்கிறது. இது போன்ற வேறு சில நிகழ்ச்சிகளையும் இங்கு பார்க்கலாம்.
பிலஹரி ராகத்தில் அமைந்த “நா ஜீவாதாரா” எனும் கீர்த்தனையில் இறந்து போன குழந்தையை எழுப்புவது பற்றி குறிப்பு எதுவும் இல்லை. அதுபோலவே தர்பார் ராகத்தில் அமைந்த “முந்து வேனுக” என்பதில் ஸ்ரீ தியாகராஜரை வழிப்பறி செய்யக் கொள்ளைக் கூட்டத்தார் முயன்றதாகவோ முன்னும் பின்னும் இராம இலக்குவர்கள் அவரைக் காத்து வந்ததாகவோ குறிப்பு எதுவும் இல்லை. இராமா, நீ என் முன்னும் பின்னும், இரு புறங்களிலும் எழுந்தருளி வருக. பாகவதர்களின் நேசனே என்னை நன்கு காப்பாற்ற வருக எனும் பொதுவான கருத்தை பிரதிபலிக்கும் விதமாகவே இந்தப் பாடல் அமைந்திருக்கிறதே தவிர கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற எனும் குறிப்பு எதுவும் இதில் இல்லை.
இந்தப் பாடலின் நேரடியான கருத்து இதுதான்:– “முரனையும், கரனையும் கொன்றவனே!, என் முன்னும் பின்னும் இரு புறங்களிலும் நீ எழுந்தருளி வருக! எங்கேயும் உன் திருவழகைப் போல கண்டதில்லை ரகுநந்தனா! நீ விரைந்து வருக!! புகழ்வாய்ந்த சூரிய வம்சம் எனும் கடலில் உதித்த சந்திரனே! கோதண்டத்தைக் கையில் ஏந்தி வா! அளவிடமுடியாத பலத்தைக் கொண்டவனே! உன் அருகில் இருந்து கொண்டு தொண்டு செய்யும் இலக்குவனோடு கூட வா! ஓ! கஜேந்திரன் எனும் யானையைக் காப்பாற்றியவனே! ஓ! சக்கரவர்த்திக் குமாரா! ஓங்காரம் எனும் பிரணவத்தில் வாழ்பவனே, வா! பாகவதர்களை நேசிப்பவனே! தியாகராஜனைக் காப்பாற்ற வா!”. இராமனுக்குரிய ஒரு பொதுவான வழிபாட்டினையே இது சுருக்கமாகக் கொண்டுள்ளது. உண்மையில் இது ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தின் தெலுங்கு வடிவம் என்று கூறப்படுகிறது.
நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியச் செய்தி, தியாகராஜரின் அண்ணன் தியாகராஜரைக் கொடுமைப்படுத்தி இராம இலக்குவ சீதாபிராட்டி விக்கிரகங்களை எடுத்து காவேரி வெள்ளத்தில் வீசி எறிந்தது பற்றியது. இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே பல சோகரஸக் கீர்த்தனைகள் எழுந்தன என்பது உயர்வு நவிற்சி எனக் கூறப்படுகிறது. புகழ்வாய்ந்த பெரியோர்களுடைய பெருமைகளை பரப்ப வேண்டுமானால் அவர்களுக்கு பல துன்பங்கள் ஏற்பட்டு அதனால் வருந்துவது போலவும், அந்தத் துன்பங்களிலிருந்து விடுபட மாட்டோமா என்று கதறுவது போலவும் கதைகள் சொல்வது இயல்பு. அப்படிப்பட்ட தீங்குகளை விளைவிக்க யாராவது ஒருவரை சிருஷ்டித்துக் காட்டுவதும் புனைந்துரைத்து கதாநாயகனின் பெருமையை நிலைநாட்டுவதும் வழக்கம். காவிரியில் வெள்ளம் வடிந்த பிறகு தியாகராஜர் அந்த விக்கிரகங்களைத் தேடி அலைந்தார், அழுதார், புலம்பினார் என்கின்றனர். “நே நெந்துவெத குதுரா” முதலான கீர்த்தனைகள் அவர் அழுது புலம்பி தேடியதன் விளைவு என்கின்றனர். கர்நாடகபெஹாக் ராகத்தில் அமைந்த இந்தப் பாடலின் பொருள் வருமாறு:- “ஹரி! உன்னை நான் எங்கெல்லாம் தேடுவேனடா? நான்முகனான பிரமன் இட்ட முறைகளைக் கேட்டும் வராத உன்னை நான் எங்கே தேடுவேனடா? தியாகராஜனால் துதிக்கப்படுபவனே! பாவம் நிறைந்த உள்ளத்துடன் தீய செயல்கள் புரிந்து பல தடவைகள் தகாத மொழிகளைப் பேசிக்கொண்டு, உலகத்தில் சிறந்த பக்தனைப் போல் வெளி வேடமிட்ட நான் உன்னை எங்கே தேடுவேனடா?” கடவுளைக் காண்பதிலுள்ள கஷ்டங்களைப் பற்றிய மேலான குறிப்புகள்தான் இந்தப் பாடலில் காணப்படுகின்றன. தவிர, ஆற்று வெள்ளத்தில் தேடித் துழாவினார், ராமவிக்கிரகம் கிடைக்காமல் அழுது புலம்பினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இங்கே இக்கதை நிகழ்ச்சி ஸ்ரீ தியாகராஜரின் உடன்பிறந்த சகோதரரை கொடுமைக்காரராகக் படம்பிடித்துக் காட்டுகிறது. இப்படிப்பட்ட மகானுக்கு, இவ்வளவு கொடுமை மனம் படைத்தவரா தமையனாராக இருந்தார் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா. அவரது தமையனார் இவரைப் போலன்றி மாறுபட்டவராகவும் இருக்கலாம், இவர் குடும்பத்து வருமானத்துக்கு வழிதேடாமல் இப்படி பொழுதெல்லாம் இராமநாம ஜெபத்திலும் பாட்டிலும் ஆழ்ந்திருக்கிறாரே, இவரால் குடும்பத்துக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லையே என்று வருந்தியிருக்கலாம். இவை அனைத்தும் உண்மையாக இருந்த போதிலும் நம் மனத்தில் ஒரு உறுத்தல் ஏற்படாமல் போகவில்லை. இவ்வளவு சிறந்த பக்தரின் பெருமைகளையெல்லாம் கண்கூடாகப் பார்த்து வரும் தமையனார் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்திருக்க முடியுமா என்பதுதான் அது. மன்னரே அழைத்துத் தன் தம்பிக்குப் பொன்னும் பொருளும் கொடுக்கத் தயாராக இருக்கும்போது அவற்றை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இராம நாமமே தனக்குப் போதும் என்று இப்படி யாராவது இருப்பார்களா என்று அவர் ஆதங்கப் பட்டிருக்கலாம். கஷ்டப்படும் தன் குடும்பத்துக்குத் தம்பி செல்வம் எதையும் தேடிக் கொடுக்கவில்லையே என்று வருந்தியிருக்கலாம் மனக்கஷ்டப் பட்டிருக்கலாம். இந்த நிகழ்ச்சி பற்றி ஸ்ரீ தியாகராஜர் வரலாற்றை உணர்ந்தவர்களே ஊகித்து உணர்ந்து கொள்வது நலம். ஒருவருடைய பெருமைகளையும் ஏற்றங்களையும் போற்றி வணங்கும் அதே நேரத்தில் மற்றவர்களைத் தாழ்த்திப் பார்க்க வேண்டுமா? இவற்றையெல்லாம் நாம் மனதில் கொண்டே மகான்களின் வரலாற்றைப் படிக்க வேண்டும்.
ஸ்ரீ சுவாமிகளின் சீடர்களில் தஞ்சாவூர் ராமராவ் என்பவர் ஒருவர். இவர் மாத்திரம் சுவாமிகளிடம் அதிகமான உரிமையையும் அன்பையும் உடையவர், சில சமயங்களில் தான் விரும்பியபடி சுவாமிகள் கிருதிகளை இயற்றித் தரவேண்டுமென்று அடம்பிடித்து பாடச் செய்வாராம். சுவாமிகளும் அவர் விரும்பியபடியே செய்து தருவாராம். ஸ்ரீ தியாகராஜருடைய பெற்றோர்கள் வாழ்ந்த காலத்திலேயே தஞ்சாவூர் ராமராவ் எனும் இந்த சீடர் அவர்களைக் கேட்டு தியாகராஜருடைய ஜாதகக் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார் என்று திரு டி.எஸ்.பார்த்தசாரதி தனது நூலில் குறிப்பிடுகிறார். இவரை ஆஞ்சநேயரின் அம்சம் என்றும் கூறுவதுண்டு.
