ஸ்ரீபாகவத புராணம் – பகுதி 10

422

விதுரரும் உத்தவரும்

பாண்டவர் தூதராகச் சென்ற கிருஷ்ணன், துரியோதனன் மாளிகையை அடையாமல், அழையாதபோதும் விதுரர் இல்லம் சென்றார். அந்தப் புனித கிரகத்தை விட்டு விட்டு விதுரர் கானம் செல்ல வழியில் மைத்ரேயரைச் சந்தித்து ஆத்ம ஞானம் பெற்றார்.

கண்ணுடன் அறிவும் குருடாக இருந்த திருதராஷ்டிரன் பாண்டவர்களை அரக்கு மாளிகையில் இட்டு அக்னி ஊட்டியது. திரவுபதியை நடுச்சபையில் துகில் உரித்து அவமானம் செய்தது. பிறகு, பாண்டவர்களில் தருமராஜன் சூதாட்டத்தில் அனைத்தையும் இழக்க, அவர்கள் பன்னிரண்டு ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாத வாசமும் செய்ய நேரிட்டது. பின்னரும் தூது சென்ற கிருஷ்ணனை அவமதித்து ராஜ்யபாகம் கண்டு நீதிகளை எடுத்துரைத்தார். அவையே விதுர நீதி என்று விளங்குவது. இந்த நீதி உரைகள் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் ஆயிற்று. மேலும், இதனால் கோபம் கொண்ட துரியோதனாதியர் ஆத்திரம் கொண்டு அவரைத் துரத்துமாறு கூச்சலிட, அவர் மிகவும் நிதானமாக, தன் கை வில்லையும், அம்பையும் அரண்மனை வாசலிலே வைத்துவிட்டுத் தீர்த்தயாத்திரை சென்றார்.
பல திவ்ய க்ஷேத்திரங்களைத் தரிசித்து, ஸ்ரீ விஷ்ணுவுக்குப் பிரீதியான விரதங்களை அனுஷ்டித்து சஞ்சரித்துக் கொண்டிருந்த அவர் கடைசியில் பிரபாச தீர்த்தக்கரையை அடைந்தபோது குருக்ஷேத்திரப் போரில் கவுரவர் குலநாசம், பாண்டவர் வெற்றி கேட்டு வருந்தினார்.

பின்னர், மேலும் பல இடங்களுக்குச் சென்று யமுனை நதிக்கரையை அடைந்த அவர் அங்கு சிறந்த உத்தவ முனிவரைச் சந்தித்து யாதவர்கள் நலம் பற்றி விசாரித்தார். உடனே கிருஷ்ண பக்தியில் திளைத்து இருந்த அவர், அந்த ஆனந்த நிலையிலிருந்து மனித உலகிற்கு வந்து கண்ணீர் விட்டுக் கதறினார். கிருஷ்ணன் மறைவையும், வெற்றி பெற்றும் பாண்டவர் உற்சாகமற்றிருப்பதையும் எடுத்துரைத்தார். யாதவர்கள் பகவானின் மகிமைகளை அறியவில்லை. தரிசனம் செய்தது போதும் என்று திருப்தி அடையாமல் இருக்கும் போதே நம்மைப் பிரிந்து போய் விட்டார். அவருடைய லீலைகளை நினைத்தால் உள்ளம் உருகுகின்றது. சிசுபாலன், கம்சன் போன்றோரை விளையாட்டாகத் தண்டித்தார்.

அந்த பகவான் சாந்தீபினி முனிவரிடம் குருகுலத்தில் கற்றார். குரு தக்ஷிணையாக மரணம் அடைந்த குருபுத்திரனை உயிர் பெறச் செய்து சமர்ப்பித்த மாயாஜாலம் எவ்வளவு சிறந்தது. தேவி ருக்மிணியை மணந்தது, நரகாசுரனை வதைத்தது, எட்டு பட்ட மகிஷிகளை மணந்து வர்ணாசிரம தருமங்களைத் தவறாமல் அனுஷ்டித்தது ஆகியவற்றை எண்ணி பிரமித்தார். குருக்ஷேத்திரப் போரில் அருச்சுனனுக்குச் சாரதியாக கீதோபதேசம் செய்த கபட நாடக சூத்திரதாரியை நினைவு கூர்ந்தார். பூபாரத்தைக் குறைக்க யாதவ குலமே அழியவேண்டுமெனத் தீர்மானித்தார்.

ஒரு சமயம் துவாரகையில் யதுகுமாரர்களும், போஜர்களும் விளையாடிக் கொண்டிருந்த உற்சாகத்தில் பிராமணர்களைக் கேலி செய்து அவமதிக்க அவர்கள் சபித்தனர். அதன் காரணமாக யாதவர்கள் மதுவினால் அறிவிழந்து, பரஸ்பர துவேஷத்தாலும், கலகத்தாலும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இறந்தனர். அதே சமயம் பகவானும் சரஸ்வதி நதி தீரத்தில் ஆசமனம் செய்து ஒரு அரச மரத்தினடியில் தனியாக அமர்ந்திருந்து மாயாசக்தியால் யாதவர் அழிவை அறிந்தும் மவுனமாக இருந்தவர் என்னை பதரிகாசிரமம் செல்லுமாறு பணித்தார். தனியே அவரை விட்டுச் செல்ல மனமில்லாமல் அங்கேயே நின்றேன். அப்போது இடது தொடை மேலே, வலது பாதத்தை வைத்துச் சாய்ந்தபடியே, அன்னபானம் துறந்து, புன்னகை வதனத்துடன் ஆனந்த சொரூபியாகக் காட்சி அளித்தார்.

அது கண்டு மெய் மறந்த நிலையில் நான் இருக்கையில், மைத்ரேயர் அங்கு வந்தார். இருவரையும் பகவான் அனுக்கிரகித்து பின்வருமாறு கூறினார்: “உத்தவ, உன் எண்ணத்தை நான் அறிவேன். உன் ஆசைப்படி இவ்வுலகத்தை விட்டுச் செல்லுகின்ற என்னை ஏகாந்தத்தில் தரிசனம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றாய். முன் கல்பத்தில் பிரம்மனுக்கு எனது மகிமைகளை எடுத்துக் கூறினேன்.” அதுவே பாகவதம். அதனை எனக்கு உபதேசம் செய்தார். அப்போது கண்ணீருடன் உத்தவர், கிருஷ்ணனின் பாதகமலங்களைத் தொட்டு, “கண்ணா! உமது சரணார விந்தங்களைப் பூஜிப்பவர்களுக்குக் கிடைக்காதது எது? எனக்கு புருஷார்த்தங்களில் ஆசை இல்லை. உமது சரண சேவையே போதுமானது”, என்றும், ஆத்ம ஞானநீதியைப் பெற்று வந்திருப்பதாகக் கூறினேன். அவர் கட்டளைப்படி பதரிகா சிரமம் சென்று கொண்டிருப்பதாக உத்தவர் கூறினார்.

அப்போது விதுரர், பகவான் அருளிய ஆத்ம தத்துவ ரகசியத்தை உபதேசிக்க வேண்டிட, அதனை உமக்கு சொல்லும்படியாக மைத்ரேயரிடம் பகவான் கூறியுள்ளார். எனவே அவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி உத்தவர் பதரிகாசிரமம் நோக்கி புறப்பட்டார்.

தொடரும்…

ஓம் க்ரிஷ்ணாய நமஹ!