ஜயவிஜயர்கள் பெற்ற சாபம்
மேலும், விதுரர்க்கு மைத்ரேயர் கூறினார்:
பிரம்ம குமாரர்கள் சனகாதி முனிவர்கள் நால்வரும் பகவானைத் தரிசிக்க வைகுண்டம் சென்றனர். பகவானுடைய குண வைபவங்களையே ஆனந்தமாக கானம் செய்கின்ற மகான்களே அங்கு செல்ல முடியும். முனிவர் நால்வரும் வைகுண்டத்தில் கிரீட குண்டலங்களையும், பலவகை ஆபரணங்களையும், வனமாலையும் அணிந்து, கதாயுதத்தைக் கையிலேந்தி நின்கின்ற இரு துவாரபாலகர்களைக் கண்டனர்.
அவர்கள் முனிவர்களைக் கைப்பிரம்பினால் தடுத்து நிறுத்தினார். அவ்வாறு தடுத்தவர்கள் மீது கோபம் கொண்டு, பாபிகளான காமம், குரோதம், லோபம் என்ற மூன்று சத்துருக்களாலும் ஆக்ரமிக்கப்பட்டுள்ள பூலோகத்திற்குச் செல்லக் கடவீர் எனச் சபித்தனர். உடனே, துவார பாலகர்கள் முனிவர்களின் பாதங்களில் விழுந்து மன்னிக்க வேண்டினர்.
அவ்வமயம் அங்கு பகவான் ஸ்ரீதேவியுடன் சனகாதி முனிவர்களுக்குக் காட்சி அளித்தார். முனிவர்கள் பரமானந்தம் அடைந்து எம்பெருமானைத் தரிசித்தனர். மற்றும் துவார பாலகர்களாகிய ஜய விஜயர்களைச் சபித்ததற்காக மன்னிப்பு வேண்டினர்.
அப்போது பெருமான், “ஜயவிஜயர்கள் எனது பார்ஷதர்களே என்றாலும் தண்டனைக்கு உரியவர்களே. உங்களை அவமதித்ததை நான் பொறுக்கமாட்டேன். எனவே, அவர்கள் தண்டனையை அனுபவிக்கட்டும்” என்றார்.
அப்போது பகவான், “இந்த சாபம் தன்னாலேயே ஏற்படுத்தப்பட்டது. இவர்கள் அசுரப் பிறவியை அடைந்து, என்னைத் துவேஷித்து, விரோத பாவத்தால் என்னையே நினைப்பதாகின்ற யோகத்தைச் செய்து மறுபடியும் என்னையே வந்தடைவர்” என்றார்.
பின்னர் சனத்குமாரர்கள் பகவானை வலம் வந்து வணங்கி, விடைபெற்று ஸ்ரீ ஹரியின் குணகீர்த்தனங்களை ஸ்மரணம் செய்து கொண்டே சென்றனர். பகவான் ஜயவிஜயர்களை நோக்கி, “முனிவர்களை அவமதித்ததின் பலனை அனுபவித்து, மறுபிறவியில் துவேஷ புத்தியால் என்னையே நினைத்து சீக்கிரமாகவே என்னை வந்து அடைவீர்கள்” என்று கூறினார்.
ஜயவிஜயர்கள் காசியபர், திதி தம்பதியருக்கு ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்று பிறந்து பகவானால் முறையே வராக அவதாரம், நரசிம்ம அவதாரங்களில் கொல்லப்பட்டு வைகுண்டம் அடைந்தனர்.
தொடரும்…
ஓம் க்ரிஷ்ணாய நமஹ!
