ஸ்ரீபாகவத புராணம் – பகுதி 1

137

சகல மங்களங்களையும் அளிக்கக் கூடியதான, லீலா வைபவங்கள் நிறைந்த பகவானுடைய அவதாரக் கதைகளைக் கேட்க நாங்கள் மிக்க ஆவலுடன் இருக்கின்றோம். அந்தப் புண்ணியமான திவ்ய சரித்திரத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும். பகவானுடைய லீலா விநோதங்களைக் கேட்பதற்காகவே சத்யோகம் செய்வதைக் காரணமாகக் கொண்டு நாங்கள் இங்கு தங்கி இருக்கிறோம். தர்மத்தின் காவலனான கிருஷ்ண பகவான் தன் திருநாட்டுக்குப் புறப்பட்டு சென்ற பிறகு தர்ம தேவதையரைச் சரணமாக அடைந்தது. அந்தத் தர்மமானது யாரால் ரக்ஷிக்கப்பட்டது?

கலியில் தோஷங்களினால் மனத்தூய்மையை இழந்த மனித சமூகத்தை பகவத் கதாம்ருதம் என்ற பாணத்தினால் பரிசுத்தப்படுத்துங்கள் என்று வேண்டிய சனகாதி முனிவர்களுக்குச் சூதமா முனிவர் கூறத் தொடங்கினார்.

ஸ்ரீமந் நாராயணனையும், புருஷ ச்ரேஷ்டரரான நரனையும், சரசுவதியையும், ஸ்ரீவியாச பகவானையும் வணங்கி வெற்றியை அளிக்கும் இந்தப் புராணத்தைக் கூறுகிறேன். பகவானுடைய அருட்கடாக்ஷம் உங்களுக்குப் பூரணமாக கிடைக்கட்டும். ஸ்ரீஹரியை ஆராதித்துப் பக்தி செய்வதே மனித குலத்தின் முக்கியமான தர்மமாகும். ஸ்ரீவாசுதேவனிடத்தில் மனதைச் செலுத்தி, பக்தி யோகத்தைச் செய்வதினாலேயே உண்மையான ஞானமும், வைராக்கியமும் ஏற்பட்டு விடும். அதனால் பகவான் மகிழ்ச்சி அடைகிறான்.
அறிவில் சிறந்த பெரியோர்கள் ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் வேறுபாடில்லை என்பதை உணர்ந்து, தமது உள்ளக் கோயிலிலே பரமாத்மாவைக் கண்டு ஆனந்த பரவசம் அடைகின்றனர். சர்வ வியாபியாக விளங்குகின்ற ஸ்ரீஹரியே எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர்.

முழு கலையுடன் ஒளிர்கின்ற ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே மிகச்சிறந்தது. அவருடைய லீலா வைபவங்களையும், அவதாரக் கதையையும் கேட்கிறவன் இன்ப வெள்ளத்தில் திளைப்பான். அவரை அடைவதற்கு அவரே காரணமாவார். ஸ்ரீகிருஷ்ண பகவானை உபாசிப்பவர்கள் ஸத்வ குணமும், சாந்தியும் அடைந்து ஆனந்தமாக வாழ்கின்றனர் என்று சூதமா முனிவர் கூறினார்.

ஓம் க்ரிஷ்ணாய நமஹ!

தொடரும்…