சித்திரை திருவிழா வரலாறு தெரியுமா?

403

சித்திரை திருவிழா வரலாறு தெரியுமா?

கிபி 1650க்கு முன்பு வரை கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கவில்லை. மதுரை சோழவந்தான் அருகிலுள்ள தேனூர் வைகையாற்றில் தான் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளழகர் எழுந்தருளி வந்தார்.
கிபி 1650 காலகட்டத்தில் மதுரையை ஆட்சி செய்த மன்னர் திருமலை நாயக்கர் சைவ, வைணவ சமயத்தை ஒன்றினைக்கும் விதமாகவும், நிர்வாக காரணங்களுக்காகவும் மாசி மாதத்தில் நடந்த மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை சித்திரையில் தேனூர் வைகை ஆற்றில் இறங்கிய அழகர் விழாவுடன் இணைத்து சித்திரையில் மதுரைக்கு மாற்றினார்.

அதற்கு முன்பு வரை கள்ளழகர் அழகர்மலையிலிருந்து கிளம்பி அலங்காநல்லூர்,கோட்டைமேடு வழியாக சித்திர பௌர்ணமி அன்று தேனூர் வைகையாற்றில் இறங்கி வந்தார். அப்படி தேனூர் வரும் அழகரை இப்போது மதுரை வைகை ஆற்றில் இறங்கும் அழகரை கூடலழகபெருமாள் எதிர்கொண்டு வரவேற்பதுபோல அப்போது குருவித்துறையில் உள்ள சித்திர ரத வல்லப பெருமாள் மன்னாடிமங்கலம்,சோழவந்தான்,திருவேடகம் வழியாக வந்து அழகரை தேனூரில் எதிர்கொண்டு அழைப்பார்.

மேலும் அப்போது அழகர் ஆற்றில் குதிரை வாகனத்தில் இறங்க மாட்டார். ஆயிரம் பொன் சப்பரம் என்று சொல்லக்கூடிய தங்க சப்பரத்தில் தான் அழகர் ஆற்றில் இறங்கினார். ஆற்றில் இறங்கிய அழகர் ஒருநாள் முழுவதும் ஆற்றுக்குள் இருந்து விட்டு பின்னர் சித்திர பௌர்ணமி மறுநாள் காலை சேஷ வாகனத்தில் தேனூரை வலம் வருவார்.

அதன்பின் தேனூரில் உள்ள திருபாற்கடல் என்னும் இடத்திற்கு சென்று அங்கு கருட சேவைக்கு மாறி மண்டூகமாக (தவளையாக) உள்ள சுதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பார். பின்னர் மீண்டும் அலங்காநல்லூர் வழியாக தங்க சப்பரத்தில் அழகர் மலையை அடைந்து வந்துள்ளார்.

குறிப்பு:- முன்பு நடைபெற்ற திருவிழாவில் அழகருக்கு குதிரை வாகனம் கிடையாது. அப்போது ஆயிரம் பொன் சப்பரம், சேஷ வாகனம், கருட வாகனம் மட்டுமே இருந்துள்ளது

இவ்விழா மதுரைக்கு மாற்றப்பட்ட பிறகு கள்ளழகர் தல்லாகுளம் வழியாக வரத் தொடங்கினார். தற்போது தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடைபெறும் விழாகள் யாவும் முன்பு தேனூரில் உள்ள பழமையான அழகுமலையான் கோவிலில் நடைபெற்றவையே தேனூரில் இருந்து திருவிழா மாற்றியமைக்கப்பட்டு 370 வருடங்களுக்கு மேலாகியும் இப்போதும் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் தேனூரும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களும் பழமையை மறக்காமல் தேனூர் வைகை ஆற்றிலேயே முடி காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர்.

திருவிழா மதுரைக்கு மாற்றியமைக்கப்பட்ட பிறகு மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதை ஒன்று புனையப்பட்டது. ஆனால் உண்மையான புராண வரலாற்றின்படி முற்காலத்தில் தேனூரில் வாழ்ந்த விஷ்ணு பக்தரான சுதபஸ் என்னும் முனிவர் சிற்றாற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது துர்வாச முனிவர் அவரை காண வந்துள்ளார்.

அப்போது துர்வாசமுனிவரை ‌கவனிக்காமல் நீராடிப் பூஜைகளை முடித்து விட்டு பின் காலந்தாழ்த்தித் துர்வாசரை கவனித்து வரவேற்க வந்தார் சுதபஸ் முனிவர்.அதனால் சினங்கொண்ட துர்வாச முனிவர் மண்டூகமாக (தவளையாக) கடவாய் என சபித்துவிட சுதபஸ் முனிவர் தவளையானார்.

அதன்பின் சாபவிமோசனம் கேட்ட சுதபஸ் முனிவரிடம் உனது ஊரில் உள்ள வைகை ஆற்றில் அழகரை நினைத்து தவம் செய் சித்திர பௌர்ணமி மறுநாள் அழகர் உனக்கு காட்சி தந்து சாபவிமோசனம் அளித்து அங்கே உன்னோடு ஆற்றில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் மோட்சம் அளிப்பார் எனக் கூறினார்.இதுவே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.

இப்போது நடக்கும் சாபவிமோசன விழாவில் நாரை (கொக்கு) பறக்கவிடுவதற்கான காரணம்: நீருக்கடியில் தவளையாக உள்ள சுதபஸ் முனிவரை தவளை என நினைத்து நாரை (கொக்கு) உண்ண வரும்போது கள்ளழகரின் அருளால் சுதபஸ் முனிவர் மோட்சம் அடைந்து மனித உருவத்தை அடைகிறார்.தவளை மனிதனாக மாறுவதை கண்டு நாரை பயந்து செல்வதாக காட்சிப்படுத்தவே தேனூர் மண்டபத்தில் நாரை பறக்க விடப்படுகிறது.

இப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த தேனூர் திருவிழா மதுரைக்கு மாற்றப்பட்டதை பெரும்பாலான தேனூர் மக்கள் விரும்பவில்லை. இருந்தாலும் மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கி தேனூர் மக்கள் திருவிழாவை விட்டு கொடுக்க சம்மதித்தனர். இதனால் தேனூர் மக்களை சமாதானப்படுத்தவும் கௌரவிக்கவும் மன்னர் திருமலை நாயக்கர் மதுரைக்கு மாற்றியமைக்கப்பட்ட திருவிழாவின் முதல் நிகழ்வாக கொடியேற்ற மூகூர்த்த விழாவை தேனூரில் உள்ள அழகுமலையான் கோவிலில் ஏற்படுத்தி அழகர் மதுரைக்கு கிளம்புவதற்கு முன் தேனூர் வைகை ஆற்றிலிருந்து தேனூர் மக்களால் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்த பின்னரே அழகர் மதுரைக்கு கிளம்புவதாக விழாவை ஏற்பாடு செய்தார்.

அதன்பின் மீனாட்சி அம்மன் கோவில் பகுதிக்கு அருகில் உள்ள மதுரை வைகை ஆற்றின் நீரோடும் பாதையில் மலர் ஒன்றை நீரில் விட்டு அந்த மலர் சென்று நின்ற இடமான வண்டியூர் வைகை ஆற்றின் நடுவே தேனூரின் பெயரில் தேனூர் மண்டபம் என்று ஒரு மண்டபத்தை அமைத்து தேனூரில் நடைபெற்ற மண்டூக முனிவரின் சாபவிமோசனம் விழாவை அங்கு நடத்த ஏற்பாடு செய்தார்.

மேலும் அந்த மண்டபத்தில் தேனூர் மக்களுக்கு முதல் மரியாதை அளித்து அழகர் தேனூரை வலம் வந்ததை குறிக்கும் விதமாக (தேனூர் மண்டபத்தை மூன்று முறை) வலம் வர செய்து கொடுத்து அதனை செப்புப்பட்டயமாகவும் வழங்கினார்.
(மதுரை சித்திரை திருவிழாவில், தேனூர் மக்களுக்கு அழகர்கோவில் நிர்வாகத்தால் முதல் மரியாதை செய்யப்பட்டு தேனூர் மண்டபத்தை அழகர் மூன்று முறை வலம் வருவது தற்போதும் நடைமுறையில் உள்ளது)

தேனூர் மண்டபத்தின் சிறப்பு சித்திரை திருவிழாவில் அழகர் எழுந்தருளும் மண்டகப்படி அனைத்திற்கும் அதன் மண்டகப்படிக்காரர்கள் வரி செலுத்தி வரவேற்பார்கள்.ஆனால் தேனூர் மண்டகப்படிக்கு மட்டும் அழகர் தேனூர் மக்களுக்கு வரி செலுத்தி அருள்புரிகிறார்.

மேலும் தற்போது நடைபெறும் சித்திரை திருவிழாவில் மீனாட்சியம்மன் கோவில் கொடியேற்றத்திற்கு முன்பாகவே அழகர்கோவில் மற்றும் மீனாட்சியம்மன் கோயில் திருவிழா பத்திரிகைகள் தேனூர் மண்டபத்தில் வைத்து பத்திரிகைகள் பரிமாற்றம் செய்து திருவிழாவிற்கு இருகோயில்களுக்கு இடையே அழைப்பு விடப்படுகிறது.
அழகர்கோவில் அழகருக்கும் தேனூருக்கும் உள்ள தொடர்பு:

தேனூர் கிராமம்தான் அழகர்கோவிலுக்கு பாத்தியப்பட்ட கிராமங்களில் முதன்மையான தாய் கிராமம்.தேனூர் இன்றளவும் அழகரின் திருநாம பெயரான சுந்தரராஜ பெருமாள் என்னும் பெயரிலேயே தேனூர் சுந்தரராஜன் பூமி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இன்றளவும் விவசாய பூமியான தேனூரின் தை மாதத்தில் முதல் அறுவடை நெற்கதிர்கள் அழகருக்கு காணிக்கையாக செலுத்தப்படுகிறது. இதற்கு நெற்க்கோட்டை கட்டுதல் என அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு தொடர்புகள் அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாளுக்கும் தேனூருக்கும் இன்றளவும் இருந்து வருகின்றது.

எது‌‌ எப்படியோ இன்று தென்தமிழகமே கொண்டாடும் மதுரை சித்திரை திருவிழாவை நமக்கு அளித்த தேனூர் கிராம மக்களுக்கு நன்றிகள் பல பல 62 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தேனூர் மண்டபத்திற்குள் கள்ளழகர் வருகை தந்து, அபிஷேகம் நடைபெற்று மண்டபத்தை மூன்று முறை சுற்றி வலம் வருகிறார்.