வார்த்தைகளுக்கு சக்தி உண்டா? ஆன்மீக கதை!
வார்த்தைகளுக்கு சக்தி உண்டா? உண்டு எனில் உங்களுக்கு தெரிந்த சக்தி வாய்ந்த வார்த்தைகளை (Powerful Words) குறிப்பிடவும். நிச்சயமாக உண்டு. ஒரு குட்டி கதை சொல்றேன் புரிந்து விடும்.ஒருவருக்கு பல நாட்களாக மூட்டு வலி. எழுந்து பத்து அடி நடந்தாலே மனுஷன் பாவம் சுருண்டு போயி படுத்துருவாரு. நெறய மருத்துங்கள் எடுத்துகிட்டாரு ஊர் ஊரா போயி வைத்தியம் பாத்தாரு எதுவுமே வேலைக்காவல. ஒரு நாள் அவரோட நண்பர் கிட்ட தன்னோட நிலைய சொல்லி வருத்தப்பட்டுக்கிட்டு இவர் இருந்தார்.
நண்பரோ ஒரு ஹோமியோபதி மருத்துவரோட விலாசத்தை குடுத்து “எதுக்கும் இந்த டாக்டரை போயி பாருங்க . இவரோட கைராசி குணமாகிரும்”னு நம்பிக்கையா சொன்னாரு. நம்மாளும் இந்த மூட்டு வலிக்கு முடிவு கட்டியே ஆகணும் அப்படினு கெளம்பிட்டாரு ஆஸ்பத்திரிக்கு. தன்னோட அவதியெல்லாம் மருத்துவர் கிட்ட சொன்னதுக்கு பிறகு மருத்துவரும் அந்த ஹோமியோபதி உருண்டை உருண்டையா இருக்குமே வெள்ளை மாத்திரை அதை குடுத்து “ஒரு மாசம் தொடர்ந்து போடுங்க ..அப்பறம் பாருங்க மாடி படி ஏறி இறங்குற அளவுக்கு தெம்பு வந்திருக்கும்”னு சொல்லிட்டு
ஒரு மாதம் கழித்து வர சொல்லிட்டாரு. ஒரு மாசம் கழித்து மருத்துவர பாக்க வாந்தாரு பாருங்க நம்மாளு.. ஒரே குஷி தான்! “டாக்டர் டாக்டர் நீங்க சொன்னது போலயே எனக்கு மூட்டு வலி இப்போ சுத்தமா கொறஞ்சுருச்சு..நீங்க குடுத்த இந்த மாத்திரை ரொம்ப பவர்பூல். அப்படியென்ன அதிசய மாத்திரை அது?! நெஜத்துலயே நீங்க கைராசியானவரு தான். ரொம்ப நன்றிங்க டாக்டர்”னு ஒரே தும்பி துள்ளலோ தான் அம்புட்டு சந்தோஷம் அவருக்கு!
முதல்ல இந்த மருத்துவரை பரிந்துரைத்தார்ல அந்த நண்பர் கிட்ட நம்மாளு குணமாகிட்டாருனு தகவல் சொல்ல, நண்பர் மருத்துவர் கிட்ட நன்றி சொல்ல போன் போட்டாரு. மருத்துவர் சொன்னது: “அது வெறும் சக்கரை உருண்டை (Sugar Pills) தான். அவரு சரியானதுக்கு காரணம் முழுக்க முழுக்க என் வார்த்தைகளை முழுமையாக நம்பினது தான். அவருடைய மனது நான் சொன்ன வார்த்தைகளை ஏற்று உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் அவரை குணப்படுத்திருச்சு. ”
பாருங்களேன் வார்த்தையுடைய சக்தியை!
எந்த ஒரு வார்த்தையும் சரியான நேரத்தில் சரியான மனிதரிடம் மொழியும் போது அவர்களிடத்தில் ஒரு தாக்கம் ஏற்பட தான் செய்கிறது.
நாம் உபயோகிக்கும் வார்த்தைகளுக்கும் நம்முடைய உணர்வுகளுக்கும் எக்கச்சக்க தொடர்பு உள்ளது – உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும்!!
நாம் பேசும் வார்த்தைகள் conscious mind (வெளியுணர்வு) மற்றும் sub-conscious mind (உள்ளணர்வு) ஆகியவற்றில் தான் சேமிக்கப் படுகின்றன. நம்முடைய உள்ளணர்வு நாம் உபயோகப்படுத்தும் அல்லது பிறர் நம்மிடம் சொல்லும் சொற்களை உண்மை என்று தனக்குள் அப்படியே ஏற்கிறது. இது தான் வெளியுணர்வுக்கும் உள்ளணர்வுக்கும் உள்ள வித்தியாசம் கூட.
பெரும்பாலும் நாம் எல்லாருமே உள்ளணர்வு சொல்படி கேட்டு நடப்பவர்களாக இருப்போம். சரி தானே? அப்படியென்றால் அந்த உள்ளணர்விற்கு நாம் பாசிட்டிவ் மற்றும் நம்பிக்கை தரும் விஷயங்களை புகுத்த வேண்டும் தானே? அதற்கு தான் நாம் பேசும் / கேட்கும் வார்த்தைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன :
இப்படியிருக்க , ஒரே ஒரு வார்த்தையால் மற்றவரின் வாழ்க்கையில் நல்லது நடக்க நீங்கள் காரணமாக இருப்பீர்களென்றால் அந்த வார்த்தையின் சக்தி எவ்வளவு என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
மனதை நேர்மறை எண்ணத்தை ஊட்டும் எந்த ஒரு வார்த்தையும் சக்தி வாய்ந்த வார்த்தை தான். எனக்கு – “வாழ்க வளமுடன்”.
