பிரேத ஜன்மம் அடைந்த ஒருவர் வரலாற்றினை பகவான் கருடனுக்குக் கூறினார். திரேதாயுகத்தில் பப்ரு வாகனன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் அஹோதயம் என்ற நகரத்திலிருந்து நீதி, தர்மம், நியமம் தவறாமல் உலகை ஆண்டு வந்தான். அவன் தன் படை வீரர்களுடன் வேட்டையாடச் சென்றான். அவன் பார்வையில் ஒரு புள்ளி மான் காணப்பட்டது. அதன் மீது இரண்டு, மூன்று தரம் அம்பெய்தினான். அதனால், அதன் உடலில் காயம் ஏற்பட்டும் அது தப்பி ஓடிவிட்டது. அதைத் தொடர்ந்து, பலவிடங்களில் தேடிச் சென்ற அரசன் தனியனாகி, சோர்ந்து ஒரு தாமரைப் பொய்கையைக் கண்டு நீராடித், தண்புனல் பருகிக் களைப்பு நீங்கினான். குளக்கரையிலிருந்த ஆலமரத்தின் அடியில் பரிஜனங்களின் வருகைக்காகக் காத்திருந்தான். அந்தி மங்கி இருட்டிவிட்டது.
அப்போது பிரேதம், பல பிரேதங்களோடு இங்குமங்கும் ஓடி, பசி தாகத்தோடு வருந்துவதையும் கண்டான். அதைக் கண்ட அரசன் அச்சமும், அதிர்ச்சியும், வியப்பும் கொண்டான். அப்போது அந்த பிரேத ஜன்மம் அரசனிடம் வந்து அரசே, உன்னை நான் காணப்பெற்றதால் இந்தப் பிரேத ஜன்மம் நீங்கி நற்கதி அடைவேன் என்று நம்புகிறேன் எனக் கூறியது. அப்போது பப்ருவாகன மன்னன் அந்தப் பிரேத ஜன்மத்தைப் பார்த்து அதன் வரலாறு பற்றிக் கேட்க, அது கீழ்க்கண்டவாறு கூறிற்று:
நான் வைதிக நகரில் வைசிய குலத்தில் பிறந்தேன். என் பெயர் தேவன். நான் திருமணம் செய்து கொண்டு சுகமாய் வாழ்ந்து வந்தேன். வாழ்நாள் முழுவதும் தேவாராதனை, விரத அனுஷ்டானம், பிராம்மண வழிபாடு, தேவாலய கைங்கரியம், அனாதைகள் ரக்ஷணை போன்ற நன்மைகளையே செய்து வந்தேன்… எனக்கொரு புத்திரனோ, உறவினரோ இல்லை. யாருமே கர்மம் செய்யவில்லை. எனவே இந்தப் பிரேத ஜன்மத்துடன் நான் மரித்த நாளிலிருந்து நெடுங்காலமாக வருந்துகிறேன். அரசே, நீ குடிமக்களின் காவலன், உறவினன். மரித்து பிரேத ஜன்மத்துடன் இருக்கும் எனக்கு நீயே எல்லாக் கர்மங்களையும் செய்யவேண்டும். என்னிடம் உள்ள இந்தச் சிறந்த மாணிக்கத்தை உனக்குக் காணிக்கையாக அளிக்கிறேன் என்று கூறி மாணிக்கத்தைக் கொடுத்தது. அப்போது கர்ம காரியங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்டான் மன்னன். பிரேதம் சொல்லியது, நாராயண பலி சகிதனாய், ஸ்ரீமந்நாராயணன் மங்கள விக்கிரகம் ஒன்று செய்து, சங்கு, சக்கர, பீதாம்பரங்களைக் கொண்டு அலங்கரித்து, கீழ்த்திசையில் ஸ்ரீதரனையும், தெற்கில் மகாசூரனையும், மேற்கில் வாமனனையும், வடக்கில் கதாதரனையும் நடுவில் அயன், அரனுடன் ஸ்ரீ விஷ்ணுவையும் நிலை நிறுத்தி ஆராதனை செய்து, வலம் வந்து வணங்கி, அக்கினியில் ஹோமம் செய்து, மீண்டும் நீராடி விரு÷ஷார் சர்க்கம் செய்து பதின்மூன்று பிராமணர்களுக்கு குடை, மாரடி, மோதிரம், பலகை, வஸ்திரம், பொன் முதலியவற்றை வழங்கி பிருஷ்டான்ன போஜனம் செய்வித்துச் சய்யாதானம், கடகதானம் ஆகியவை கொடுத்தால் பிரேத ஜன்மத்திலிருந்து விடுபட முடியும் என்றது.
அவ்வமயம் அவனது பரிவாரங்கள், அங்கு வர அது மறைந்துவிட்டது. அரசன் தன் நகரமடைந்து பிரேத ஜன்மத்தைக் குறித்து அதற்குரிய கர்மங்களையும், தர்மங்களையும் முறைப்படிச் செய்து முடிக்க, அந்தப் பிரேத ஜன்மம். ஆவிப்பிறவி நீங்கி நல்லுலகை அடைந்தது. பிரேத ஜன்மம் நீங்க வேறென்னென்ன செய்யலாம் என்பதைப் பகவான் கருடனுக்கு விளக்கினார். எண்ணெய் நிறைந்த குடத்தைப் பெரியோர்களுக்குத் தானம் கொடுத்தால் சகல பாபங்களும் நீங்கி பிரேத ஜன்மம் தொலையும், அவன் இன்பமுடன் மீளாவுலகை அடைவான். பொன்னாலான குடங்களில் பாலும், நெய்யும் நிரப்பி திக்குபாலகரையும், அஜ சங்கரரையும், ஸ்ரீ ஹரியையும் ஆராதனை செய்து அக்குடங்களைப் பிராமண உத்தமர்களுக்குத் தானம் கொடுப்பது மிக்க சிறப்புடையதாகும்.
தொடரும்…
விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
