கருட புராணம் – பகுதி 3 தான தருமங்கள் விருக்ஷாற்சனப் பலன்கள்

440

ஒருவன் தனது மரண காலத்திற்கு முன்பே கோதானம் முதலிய தானங்களைச் செய்வது நல்லது. பாத்திரம் அறிந்து தானம் செய்ய வேண்டும். தான இடமும் நல் க்ஷேத்திரமாக இருக்க வேண்டும். இத்தனையும் கூடியிருக்க ஒருவன் அகத்தூய்மையோடு இருந்தால் ஒரு கோடிப் பயனைத் தரும். எனவே, உத்தமப் பயனடைய, கோதானம் ஆகியவற்றை வேத சாஸ்திரங்களை ஓதி, உணர்ந்த செந்தண்மை பூண்ட அந்தணனான உத்தமனுக்கே கொடுக்கவேண்டும். ஒரு பசுவை ஒருவனுக்கே தானம் கொடுக்க வேண்டும். சாதுக்களிடம் நல்ல பொருள்களைப் பக்தி சிரத்தையோடு தானம் செய்பவன் அப்பிறவியிலாவது, மறு பிறவியிலாவது அதற்குரிய பலனைச் சந்தேகமின்றி அடைவான்.

சொற்ப அளவுடைய தான தர்மம் ஆனாலும் வாழுங் காலத்திலேயே தானமளிப்பவன் செல்வனாகி பலனை அடைந்து விடுவான். அன்னதானம், கோதானம் முதலியவற்றைத் தன் கையாலேயே செய்து விட்டால் மரணத்துக்குப் பின் பசி தாகம் அடையாமல் நல்லுலகைச் சேர்ந்து சுகிப்பான்.

விருக்ஷாற்சனம் என்ற புண்ணிய கர்மத்தின் மகிமையால் உத்தம காலத்தில், உத்தம தலத்தில், உத்தம பிராமணனுக்கு தானம் கொடுத்தால் அதன் பலன் நிச்சயம் கைகூடும். யாகம் செய்வதையும், கோதானம் முதலிய சிறந்த தானங்களைச் செய்வதையும் விட விருக்ஷாற்சவம் செய்வது மிகவும் முக்கியமான, உத்தமமான நற்கருமமாகும். எனவே, ஒரு மனிதன் நற்கதி அடைவதற்கு முதற்காரணமாக அமைவது விருக்ஷாற்சனமே. இந்த விருக்ஷாற்சனம் சிறந்தவனைக் குறித்துச் செய்யப்பட்டால் உடனடியாக ஏகோதிஷ்ட சிரார்த்தத்தையும் செய்து விடவேண்டும். விருக்ஷாற்சனம் செய்யாவிட்டால் பிரேத ஜன்மம் பற்றாமல் விடாது.

முன்பு கூறிய நாட்களில் ஒரு நாள் தலசுத்தி செய்த பிறகு அக்கினிப் பிரதிஷ்டை செய்து ஒரே நிறமாக உள்ள காளைக் கன்று ஒன்றையும், அதற்குச் சிறிதான கிடாரி கன்று ஒன்றையும் மஞ்சள் நீராட்டி ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்து, அவற்றின் வாலில் தர்ப்பணம் செய்துவிடுத்து, நாந்தி சிரார்த்தம் செய்து ஒரு பக்ஷம் பதினைந்து நாட்கள் வரையில் பிராமணர்களுக்குப் போஜனம் செய்வித்து வெள்ளி, திலம், உதகக் கும்பம், ஆடைகள் ஆகியவற்றை தானம் செய்தால் நூற்றொரு தலைமுறையில் உள்ளவர்களும் சுவர்க்கத்தை அடைவர். இதற்கு காமிய விருக்ஷாற்சன சர்க்கம் என்று பெயர். பகவான் மேலும் தான தரும விசேஷங்களையும், விருக்ஷாற்சனம் பற்றியும் கூறுகிறார். ஒருவன் மரித்த பதினொன்றாம் நாளிலாவது சோடச சிரார்த்தத்தைச் சபிண்டி கரணத்துக்கு முன்னதாகவே செய்து ததியாராதனம் செய்து பல தானமும் கொடுக்கவேண்டும். பருத்தி ஆடையின் மீது செம்பினால் வட்டில் செய்து வைத்து அதில் சாளக்கிராமம் வைத்து, ஆடை முதலியவற்றால் அலங்கரித்து ஆராதனை செய்து நற்பிராமணனுக்கு அதையும் தானமாகக் கொடுக்க வேண்டும். வைதரணி நதியைக் கடக்க, கரும்பினால் ஓடம் செய்து வெண்பட்டினால் அதனைச் சுற்றி நெய் நிரம்பிய வெண்கலப் பாத்திரத்தை அதனுள் வைத்து ஸ்ரீமந்நாராயணனை அர்ச்சித்து அந்த ஓடத்தை பிராமணனுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும்.
சக்தியை அனுசரித்துப் பொருள் கொடுத்துத் தில தானமும், சய்யா தானமும் செய்ய வேண்டும். மரித்தவரைக் குறித்து கிரியைகளைச் செய்யும்போது அந்தணர்களுக்குப் பூரி (தட்சிணை) கொடுப்பவன் தான் வேண்டிய நல்லவற்றை எல்லாம் அடைந்து மகிழ்வான். அவன் பிரேத ஜன்மத்தை அடைய மாட்டான். புண்ணியலோகம் அவனுக்குக் கிட்டும்.

தானங்கள் நான்கு வகைப்படும். அவையாவன:

1. பலனை எதிர்பாராமல் ஓர் உத்தம அந்தணர்க்குச் செய்யும் தானம் நித்திய தானம் எனப்படும்.

2. தீமை நீங்க (அ) தவமாகக் கொடுக்கும் தானம் நைமித்திக தானம் எனப்படும்.

3. புத்திர சந்தானம், வெற்றி, தனம் வேண்டிச் செய்வது காம்ய தானம்

4. பகவானைத் திருப்தி படுத்துவதற்காகவே கொடுக்கப்படும் தானம் விமல தானம் ஆகும்.

தொடரும்…

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!