கருட புராணம் – பகுதி 19 -எள், தருப்பை ஏன்?

384

கருமங்களைச் செய்வதற்கு முன் குறிப்பிட்ட இடத்தை திருவலகால் துடைத்துத் தூய்மை செய்து கோமியத்தால் மெழுக வேண்டும்.

அவ்வாறு தூய்மையான இடத்தில் கருமம் செய்யத் துவங்கினால் தேவர்கள் அங்கு வந்து அக்கருமங்களை நிறைவேறச் செய்வார்கள்.

இல்லாவிடில் அவ்விடத்தை அசுரரும், பூதங்களும், பிரேதங்களும், பைசாசங்களும் கருமங்களைத் தடுத்தி நிறுத்தி விடுவதுடன், இறந்தவன் நரகத்தை அடைய நேரிடும்.

எள் மிகவும் தூய்மையான ஒரு தானியம்.

கருப்பு எள், வெள்ளை எள் எதுவானாலும் தானத்துடன் கொடுத்தால் அதிகப் பயன் உண்டாகும்.

சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர்த் தேவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள்.

தர்ப்பைப் புல் ஆகாயத்தினின்று தோன்றியது.

அதன் ஒரு முனையில் பிரம்மனும், மற்றொன்றில் சிவனும், நடுவில் விஷ்ணுவும் வாசம் செய்கின்றனர்.

பிராமணர்க்கும் மந்திரத்திற்கும், தர்ப்பைக்கும், அக்கினிக்கும், திருத்துழாய்க்கும் நிர்மாலிய தோஷமில்லை.

ஏகாதசி விரதம், துளசி, பகவத் கீதை, பசு, பிராம்மண பக்தி, ஸ்ரீஹரியின் சரணமும் சம்சார சாகரத்தைக் கடக்க வேண்டியவருக்கு நல்ல தெப்பமாகும்.

இறக்கும் நிலையை அடைந்தவன் கோமயத்தில் மெழுகப்பட்ட தலத்தில், சூரைப்புல்லைப் (தருப்பையை) பரப்பி, அதன் மேல் எள்ளை இரைத்து, அதன்மீது சயனித்து தருப்பை, திருத்துழாய் கையிலேந்தி பகவன் நாமாவை வாயாரப் புகழ்ந்த வண்ணம் மரிப்பவன் அயன், அரியாதியர்க்கும் அரிய நிரதிசய இன்பவீடாகிய பரமபதம் அடைவான்.

உயிர் நீங்கும் முன்பே திருத்துழாயோடு தனது நல்லுலக வாழ்வைக் கருதி தானங்களைச் செய்துவிட வேண்டும்.

உப்பு தானம் மிகவும் சிறந்ததாகும்.

அது விஷ்ணு லோகத்தில் உண்டானது. உப்பு தானம் செய்து மரித்தவன் சொர்க்க லோகத்தை அடைவான்.

தொடரும்…

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!!!!