தலைவிதியை மாற்றும் வாலீஸ்வரர் ஆலயத்தின் வரலாறு!

105

தலைவிதியை மாற்றும் வாலீஸ்வரர் ஆலயத்தின் வரலாறு!

விழுப்புரம் மாவட்டம் கோலியநூரில் அருள்பாளிக்கும் வாலீஸ்வரர் திருக்கோவிலின் வரலாற்று கதை பற்றி இப்பதிவில் காணலாம்…

ஆலயத்தின் சிறப்பு:

இவ்வாலயத்தில் அருள்பாளிக்கும் மூலவர் பெயர் வாலீஸ்வரர் என்றும் அம்பிகையின் பெயர் பெரியநாயகி அம்பாள் ஆகும்.

ஆலய அமைப்பு:

இத்தலத்து மூலவர் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய சீடர்களுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, விழுப்புரம் அருகிலுள்ள கோலியனூர் வாலீஸ்வரர் கோயிலில், சப்தகன்னியருடன் காட்சி தருகிறார். சனி பகவான் இங்கு தனி சன்னதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மேலும், பிரகாரத்தில் முருகன், விநாயகர், சனீஸ்வரர், லட்சுமி நாராயணர் ஆகியோரும் இருக்கின்றனர்

மேற்கு நோக்கிய சிவாலயமான இங்கு பெரியநாயகி அம்பாளுடன் சிவன் காட்சி தருகிறார். வாலி தன் தம்பி மனைவியை அபகரித்த தோஷம் நீங்க வழிபட்டதால், சுவாமிக்கு “வாலீஸ்வரர்’ என்று பெயர் ஏற்பட்டது.வீரபத்திரர் சப்த கன்னியரின் பாதுகாப்பிற்காக இங்கு வந்தபோது, அவர் ரிஷபத்தில் வந்தார். இந்த நந்தி கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. நந்தி அருகில் கொடிமரம் உள்ளது.

வரலாற்று கதை:
வாலி மிகப்பெரிய சிவபக்தன். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் முடிவதற்குள் 1000 சிவாலயங்களில் பூஜை செய்யும் வழக்கம் உடையவன். அதைப் போலவே இங்கு அடர்ந்த வனப் பகுதியில் 100 சிவலிங்கங்களை அமைத்து மேற்கு நோக்கி தவம் செய்வது வழக்கம். இதைப்பற்றி கேள்விப்பட்ட இலங்கை மன்னன் ராவணன் தனது பக்தியினை விட சிறந்த பக்தனான வாலி மீது கோபம் கொண்டு வாலியின் தவத்தைக் கலைக்க முடிவு செய்து பின்புறமாக மறைந்து வந்து தவம் செய்த வாலியினை பின்பக்கம் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாலியை எங்கேயும் செல்ல விடாமல் தடுக்க நினைத்தார்.

இதனை உணர்ந்த வாலி தனது வாலினால் ராவணனை உடல் முழுவதும் சுற்றி கட்டி வாலில் தொங்கவிட்டபடி தனது பூஜைகளை குறித்த நேரத்தில் முடித்துவிட்டார். பின் இராவணனை சிறையில் அடைத்து வைத்திருந்தான். தனது மகன் அங்கதன் விளையாடும் பொருட்டு அவனது தொட்டிலின் மேலே தலைகீழாக தொங்கவிட்டு வேடிக்கை காட்டினான்.

இதனை கேள்விப்பட்டு இராவணன் மனைவி மண்டோதரி வாலியிடம் மடிப்பிச்சை கேட்டு இராவணனை அழைத்துச் சென்றாள். பின்னாளில் தனது மக்களுக்கு இராவணன் மூலம் எந்தத் துன்பமும் வராமல் தடுக்க தனது ஞான சக்தியால் தெற்கு திசை நோக்கி (இலங்கையை நோக்கி) சனீஸ்வரர் பார்வை பட்டுக் கொண்டே இருக்கும்படி தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்தார். தெற்கு திசை எமனின் திசை. தனது சகோதரர் எமதர்மனால் ஏற்படும் ஆயுள் கண்ட பிரச்னைகள் இந்த சனீஸ்வர பகவானை வழிபடுவதால் நீங்கும்.

நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனிபகவான். இவரது பெயர்ச்சியின் அடிப்படையில் பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நீதிமான் போல செயல்பட்டு அதற்கேற்ற பலன்களை தருபவர். இவரது பார்வையில் சனிபகவான் உட்பட யாரும் தப்ப முடியவில்லை. ஒவ்வொருவரின் ஜாதகத்தில் ஆயுள்காரணமாக விளங்குவதால் உலகின் சகல ஜீவராசிகளுக்கும் ஆயுளை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர்.

இத்தனை சிறப்பு வாய்ந்த சனீஸ்வர பகவான் பொதுவாக மற்ற கோயில்களில் நவக்கிரகங்களுடன் தனி சன்னதி அமைந்திருக்கும். ஆனால் ஒரு சில பரிகாரக் கோயில்களில் திருநள்ளாறு, குச்சனூர் போன்ற தனி சன்னதிகளில் மூர்த்தியாக காட்சி தருகிறார். அதைப் போலவே இந்த அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயிலில் ஈசான்ய மூலையில் தெற்கு நோக்கி தனி சன்னதியில் சனிபகவான் காட்சி தருகிறார்.

பலன்கள்:

தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள், மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும், செவ்வாய் தோஷ நிவர்த்திக்காகவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகுவதற்காகவும், தீராத நோய்கள் விரைவில் குணமாகவும், முக்தி கிடைக்கவும் இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர். சனி தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

நேர்த்திக்கடன்:
சுவாமி, அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

திருவிழா:
மகா சிவராத்திரி, பஞ்சமி திதியன்று, சப்தகன்னியருடன் உள்ள வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கும்.