Monday, October 16, 2023
HomePurana Kathaigalகடவுள் தூங்கினால்

கடவுள் தூங்கினால்

இன்று காலையில் பெருமாள் திருவாராதனத்துக்காக ஸ்லோகம் கூறியவாறே இரு கைகளையும் சேர்த்து கோவிலாழ்வார் முன்பு மெதுவாக தட்டி திறந்த போது என் இளைய மகன், பார் அப்பா எவ்வளவு மெதுவாக கையை தட்டி பெருமாளை திருப்பள்ளியெழுச்சி செய்கிறார். அம்மா, நீ என் முதுகிலே பளார் பளார் என அடிச்சு எழுப்பிட்டியே என்ன வலி வலிக்கிறது என்றான்.

நீ கும்பகர்ணன் மாதிரி தூங்கற, மெதுவா எழுப்பினா எழுந்திருக்கல அதான் இரண்டு தட்டு தட்டி எழுப்புனேன்.

ஆனா பெருமாள் அப்படியில்ல அதான் மெதுவாக எழுப்பினார் என்றாள்.

அம்மா பெரிய பெரிய கோவில்களில் பெருமாளை பள்ளியறையில் சயனத்தில் வைக்கிறார்களே. திருப்பதி கோவிலில் கூட காலை 3.00 மணி முதல் 3.30 மணி வரை போக ஶ்ரீனிவாச பெருமாளை தொட்டிலில் சயனிக்க வைக்கிறார்களே. அப்படியானால் பெருமாள் உண்மையில் தூங்குவாரா?
என கேட்க, ஆமாண்டா பெருமாள் இராமனா கிருஷ்ணனா வந்த போது தூங்கினார்கள் இல்லையா அத போல தான் என்றாள் மனையாள்.

அது அவதாரம் நான் கேட்பது கோவிலிலும் ஆத்திலும் பெருமாளை தூங்குவதாக கூறுகிறார்களே அதை பற்றி.

அப்படியா திருவாராதனம் முடிச்சு வருவார் உங்கப்பா அவர்கிட்ட கேளு விபரமாக சொல்லுவார் என்றாள் இல்லாள்.

என்றுமே திருவாராதனம் செய்து முடித்து தீர்த்த பிராசாதம் வாங்கும் வரை இல்லாமல் வெளியில் செல்பவன் இன்று அதிசயமாக பெருமாள் தீர்த்தபிரசாதம் திருத்துழாய் கொடுக்கும் வரை இருந்து ‘அப்பா பெருமாள் தூங்குவாரா?’ எனக் கேட்டான்.

அவனிடம் பெருமாள் தூங்கமாட்டார் என்றேன்.

பின் ஏன் கோவிலில் மற்றும் திருவாராதனத்தில் பெருமாளை திருப்பள்ளியெழுச்சி என்றும் இரவில் பள்ளிப்படுத்துதல் என்றும் செய்கிறார்கள் என்றான்.

மகனே பகவானுக்கு நம்மை போல் பசி தூக்கம் அயர்ச்சி சோம்பல் என்று எதுவுமே கிடையாது. அவன் எல்லாம் கடந்தவன் என்பதால் அவனை கடவுள் என்கிறோம்.

அவன் ஒரு செகண்ட் கண்னை மூடிவிட்டால் உலகமே அழிந்துவிடும்.

நாம் பகவானை நம் நண்பனாக குடும்பத்தில் ஒருவனாக பாவித்து அவனை தினமும் இல்லத்திற்கு அழைத்து அர்க்யம், பாத்யம், ஆசமனியம், நீராட்டம், வஸ்த்ரம், உத்ரியம், ஊர்த்தவபுண்டரம், யக்ஞோபவீதம், கந்தார்தம், குங்குமார்த்தம், தூப, தீபம், சமர்ப்பணம் செய்து அர்ச்சனாதிகளை செய்து பிரசாதம் கண்டருளபண்ணி மீண்டும் அர்க்யம், பாத்யம், ஆசமனியம் சமர்ப்பித்து சகலாராதனம் சமர்ப்பியாமி என்று கூறி அவரை ஆராதிக்கிறோம்.

ஊர் மக்களின் ஷேமத்திற்காக அவ்வூர்களின் கோவில்களில் பகவானுக்கு நித்ய ஆராதனம் செய்வித்து இரவில் நடைசாற்று முன் பள்ளி படுத்துதல் என்று செய்வர்.

பள்ளி படுத்துதல் என்றால் பக்குவப்படுதல் என்று அர்த்தம்.

எதை என்றால் பகவானை நோக்கி நம் மனத்தை ( பள்ளியறை என்பது வேறு அது தூங்கும் இடம்) பக்குவப்படுத்துதல் என்று அர்த்தம்.

தளிகை மற்றும் காய்கறிகளை பக்குவப்படுத்தும் இடத்தை வீட்டில் திருப்பள்ளி என்போம். கோவிலில் மடப்பள்ளி என்போம்.

அறிவை பக்குவப்படுத்தும் இடத்தை பள்ளிக்கூடம் என்போம்.

மனிதன் அன்றைய கோபதாப வீரபிராதப செயல்கள் செய்தபின் மனத்தையும் உடலையும் பக்குவப்படுத்தும் இடத்தை ( உணர்ச்சிகளை பக்குவப்படுத்தும்) பள்ளியறை என்கிறோம்.

அரேபியர்களான முஸ்லீம்கள் கூட மசூதி என்ற தங்கள் தொழுகை செய்யுமிடத்தை நம்மை காப்பியடித்து பள்ளிவாசல் ( மனம் பக்குவமாக செல்லும் வாசல்)என்று பெயர் வைத்துள்ளனர்.

அதுபோல நீ நித்ய ஆராதனம் செய்ய செய்ய பகவானிடம் உன் மனம் பக்குவமாவதால் உன்னில் உள்ள ஆத்மா பகவானை நெருங்கி பக்குவமடைந்து நற்சிந்தனைகளை பெறும் (கோவிலில் வீட்டில் திருவாராதனம் செய்த நம்மனம் தினமும் பக்குவமடைகிறது என்பதை அறிவிக்கவே அன்றைய தினம் பள்ளிப்படுத்துதல் என்ற வைபவம். மீண்டும் மறுநாள் அதேபோல் தொடரும்) அதன் மூலம் பல பிறவியில் செய்த கர்மா தொலையும் என்றேன்.

அதெல்லாம் சரி பகவான் தூங்கமாட்டரில்லையோ என்றான்.

தம்பி உனக்கு இன்னும் புரியணுமானால் நான் சொல்லற இந்த கதைய கேளு.

உன்னைப்போல உள்ள ஒரு பாடசாலை சீடன் தனது பாடசாலை குருவிடம் ஸ்வாமி அடியேனுக்கு ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம் கடவுளுக்கு தூக்கம் வருமா வராதா, எனக் கேட்டான்.

அந்த குரு சிரித்து கொண்டே பக்கத்து அறையில் இருந்த கண்ணாடியை எடுத்து வரச் சொன்னார்.

சீடன் கண்ணாடியை கொண்டு வந்ததும் இந்தக் கண்ணாடியை கையில் பிடித்தபடி நான் உனக்கு பதில் சொல்லும் வரை பக்கத்து அறையில் நின்று கொண்டிரு.

ஆனால் கண்ணாடிக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்றார்.

சீடனும் அப்படியே ஒரு இரண்டு அரை மணி நேரத்திற்கு மேல் நின்றான்.

எவ்வளவு நேரம் சும்மா கண்ணாடியை வைத்து கொண்டு நிற்பது. உடல் சற்று சோர்வடைய கொஞ்ச நேரத்தில் நித்திரை அவனை கொஞ்சமாக ஆட்கொள்ளத் தொடங்கியது.

தூக்கத்தை விரட்ட அவன் பல முயற்சி களைக் கையாண்டும் பலன் அளிக்கவில்லை.

நின்றபடியே தன்னை மறந்து ஒரே ஒரு வினாடி கண்ணயர்ந்தான்.

அவன் கண்ணயர்ந்த விநாடியில் கையின் பிடி தளர்ந்து கண்ணாடி கீழே விழுந்து துண்டு துண்டாய் சிதறியது.

பதறிப்போன சீடன் கலவரத்துடன் பக்கத்து அறையில் இருந்த குருவை பார்த்தான்.

குருவோ பயப்படாதே சீடனே
நீ ஒரு வினாடி கண் அயர்ந்தாய் உன் பொறுப்பில் இருந்த கண்ணாடி சின்னா பின்னமாகியது.

இந்த பிரபஞ்சம் முழுவதையும் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் இறைவன் கண்ணயர்ந்தால் இந்த உலகம் என்ன ஆகும் என்று யோசித்துப் பார் என்று கூறியதும்,

சீடன் தன்யோஸ்மி ஸ்வாமி அடியேன் சந்தேகம் தெளிந்தது என்றான்.

இப்போ உனக்கு தெளிந்ததா பகவான் தூங்குவாரா? என்றேன்.

வாங்கிய தீர்த்த துளசி பிரசாதத்தை ஸ்வீகரித்தபடியே சிரித்தவாறு சென்றான்.

மனையாளும் ஏதோ புரிந்தபடி சிரித்துக்கொண்டே சென்றாள்.

நான் சன்னதிக்கு சென்று பகவானை பார்த்து சொன்னேன்,

ஜெய் ஶ்ரீராம்!!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =

Most Popular