கோயில்பாளையம் காலகாலேஸ்வரர் கோயில் – புராணக் கதைகள்!
கோயம்புத்தூர் மாவட்டம் கோயில்பாளையம் என்ற ஊரில் உள்ள கோயில் காலகாலேஸ்வரர். இங்கு காலகாலேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். கருணாகரவல்லி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். பிரதோஷம், சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
இது தவிர, தமிழ் புத்தாண்டு, ஆங்கிலப்புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். சிவனுக்கும், அம்பிகைக்கும் இடையில் முருகப் பெருமான் வீற்றிருப்பதும், பெரியளவில் தட்சிணாமூர்த்தி அமைந்திருப்பதும் கோயிலில் சிறப்பு. இந்தக் கோயிலில் மரகத நந்தி அமைந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.
இந்தக் கோயிலில் கால சுப்பிரமணியர், கருணாகரவல்லி அம்மன் சன்னதிகள் உள்ளன. பொதுவாக எந்த சிவன் கோயிலாக இருந்தாலும் கோயில் பிரகாரத்தில் தான் முருகப் பெருமான் இருப்பார். அதுவும் தனி சன்னதியில் அருள் பாலிப்பார். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் சிவனுக்கும், அம்பிகைக்கும் இடையில் முருகப் பெருமான் வீற்றிருப்பதால் இது சோமஸ்கந்த அமைப்பு கோயிலாக திகழ்கிறது.
தீராத நோய் தீரவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் சுவாமி அம்பாளுக்கு தேன் மற்றும் சந்தனம் உள்பட மற்ற திரவியங்களுடன் அபிஷேகம் செய்கின்றனர். அப்படி செய்யப்படும் அபிஷேக தேனும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோயிலில் கொடுக்கப்படும் இந்த பிரசாதத்தை சாப்பிடுவதன் மூலமாக தீராத நோயும் தீரும், குழந்தை பாக்கியமும் கிடைக்கப்பெறும். திருமணத்தடை நீங்கவும், விஷக்கடிக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும் அம்மனுக்கும் புது வஸ்திரம் சாற்றி நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் கொண்டு அபிஷேகம் செய்கின்றனர்.
ஆலங்குடிக்கு இணையாக ஆசியாவிலேயே பெரிய தட்சிணாமூர்த்தி இந்தக் கோயிலில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்திக்கு மேல் லிங்கம் இருப்பது சிறப்பு. மூலவர் மணல், நுரையால் செய்யப்பட்டதால் தயிர், நெய், பஞ்சாமிர்த அபிஷேகம் இல்லை.
இந்தக் கோயிலில் ஆயுள் விருத்திக்கு ஹோமம் செய்யப்படுகிறது. 60 வயது பூர்த்தியானதும் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயது பூர்த்தியானதும் பீமரசாந்தி, 80 வயது நிறைவடைந்த உடன் சதாபிஷேகம், 90 வயது பூர்த்தியானதும் கனகாபிஷேகமும் செய்யப்படுகிறது.
தீராத நோய் தீரவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், சுவாமி அம்பாளுக்கு தேன், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் செய்கின்றனர். அந்த அபிஷேக தேனும், சந்தனமும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை சாப்பிடுவதன் மூலமாக தீராத நோயும் தீரும், குழந்தை பாக்கியமும் கிடைக்கப் பெறும், திருமணத் தடை விலகும் என்பது ஐதீகம். நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம் செய்தவன் மூலமாக விஷக்கடிக்கு சிறந்த மருந்து கிடைக்கும்.
மரகத்திற்குரிய குணங்களைக் கொண்டுள்ள நந்தி பகவான் இங்கு பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறார். ஒவ்வொரு பிரதோஷத்தின் போது அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. தற்போது நந்தியின் நிறம் மாறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
மார்க்கண்டேயன் தீவிரமான சிவ பக்தன். அவனுக்கு 16 வயதிலேயே ஆயுள் முடிய வேண்டும் என்று விதி இருந்தது. மகனுக்கு ஆயுள் முடியப் போகிறதே என்று அவனது தந்தை மன வருந்தினான். இதையடுத்து மார்க்கண்டேயன், ஆயுள் நீட்டிக்க வேண்டி சிவனை வணங்கி வந்தான்.
ஒரு கட்டத்தில் அவனது ஆயுளும் முடியும் நாள் வந்தது. ஆயுள் எடுக்க எமதர்மன் வரவே, மார்க்கண்டேயன், திருக்கடையூர் கோயிலுக்கு சென்று அங்குள்ள சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டான். இருப்பினும், எமன் பாசக்கயிறை வீசவே, அந்து சிவலிங்கத்தின் மீது பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிவபெருமான், என்னை சரணடைந்தவர் ஆயுள் நீட்டிக்கப் பெறுவர் கூறி எமதர்மனை தனது காலால் எட்டி உதைத்தார்.
இதனால், எமதர்மனே சாதாரண மனிதனாக பூலோகத்திற்கு சென்றார். அதன் பிறகு மீண்டும் தனக்கு எமபதவி கிடைக்க வேண்டி கவுசிகபுரி தலத்திற்கு சென்று அங்குள்ள நதியில் நீராடி சிவபூஜை செய்ய நினைத்தான். ஆனால், பூஜை செய்வதற்கு தேவையான கல், ருத்ராடம், விபூதி, வில்வம் என்று எதுவும் கிடைக்கவில்லை.
அதன் பிறகு அங்கு இருந்த குச்சியை எடுத்து ஒரு இடத்தில் குத்தினான். அவன் குத்திய இடத்திலிருந்து நுரை வந்தது. இதையடுத்து மணலோடு சேர்த்து சிவலிங்கம் வடித்தான். அருகிலேயே கவுசிக முனிவர் (விஸ்வாமித்திரர்) தவம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான். அப்போது எமதர்மனைக் கண்ட விஸ்வாமித்திரர், நீ செய்த சிவ பூஜையின் பலனாக உனது சாபம் நீங்கியது.
இதனால், நீ எமலோகம் செல் என்று கூறினார். எமதர்மன் விட்டுச் சென்ற சிவலிங்கத்தை விஸ்வாமித்திரர் அங்கேயே பிரதிஷ்டை செய்தார். காலப்போக்கில் அங்கு கோயில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
