கீருஷ்ணரையே கட்டிப்போட்ட சகாதேவன்

620

கண்ணன் சகாதேவனிடம் சொன்னான்…

சகாதேவா, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, நான் நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன். அதற்காக எல்லா உபாயங்களையும் கையாளப் போகிறேன். நீ சாஸ்திர வல்லுநன்; சிறந்த அறிவாளி. அமைதியை விரும்புபவன். போரைத் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா, சொல்… அதையும் முயன்று பார்க்கிறேன்” என்றான் கண்ண பிரான்.

 

சகாதேவன் சிரித்தான்.

”போர் வராமல் தடுக்கத்தானே உபாயம் தேடுகிறாய்! நல்லதொரு உபாயம் உண்டு. சொல்கிறேன். செய்ய முடியுமா, பார்?” என்று ஆரம்பித்தான் சகாதேவன்.
தர்மத்தை நிலைநாட்ட ஒரு குருக்ஷேத்திரப் போரை உருவாக்கவே, கண்ணன் தூது செல்கிறான் என்பதை, அவனது ஆரூட சாஸ்திர அறிவால் ஊகிக்க முடிந்தது.

அதனால், அவன் வேடிக்கையான வழி ஒன்றைச் சொன்னான்.

”கண்ணா, கேள்…பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து,
பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்கு தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டால், போரை நிச்சயம் தடுக்கலாம்” என்றான் ஸஹதேவன்.
கண்ணன் உரக்கச் சிரித்தான்.
”என்னைக் கட்டுவதா? எப்படி முடியும் சகாதேவா?” என்றான்.
”ஏன் முடியாது?” என்று எதிர் சவால் விட்டான் சகாதேவன்.
அந்தக் கணமே, பல்லாயிரம் கண்ணனாக வடிவெடுத்து மண்டபம் எங்கும் வியாபித்தான் ஸ்ரீகிருஷ்ணன். பார்த்த பரவெளியெல்லாம் கிருஷ்ணனாகத் தோன்றியது.
இத்தனைப் பரிமாணங்களையும் எப்படிக் கட்டுவது?
சகாதேவன் கலங்கவில்லை. பத்மாசனத்தில் அமர்ந்தான். கண்களை மூடினான்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் ரூப, குண, நாமங்களை மனதில் தீவிரமாகத் தியானித்தான்.
பக்திப் பரவச நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது. அப்போது பிறந்தது ஸஹதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்.

‘ஓம் நமோ விஸ்வரூபாய விஸ்வ சித்யந்த ஹேதவே
விஸ்வேஸ்வராய விஸ்வாய கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய பரமானந்த ரூபினே
கிருஷ்ணாய கோபிநாதாய கோவிந்தாய நமோ நமஹ!’

என்பதே அந்த மந்திரம்.

சகாதேவன் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க, கண்ணன் எடுத்த வடிவங்கள் ஒவ்வொன்றாய்க் கலந்து, ஒன்றோடொன்று இணைந்து ஒரே கண்ணனாகி, அவனும் சகாதேவனின் இதயத்துக்குள்ளே கட்டுண்டான்.

“சகாதேவா, நீ வென்றுவிட்டாய்! என் தாய் என்னை உரலில் கட்டினாள். பிருந்தாவன கோபியர், கட்டுத்தறியில் கட்டினார்கள். நீயோ இதயத்தில் கட்டிவிட்டாய். பக்தியினால் கடவுளையும் கட்ட முடியும் என்று காட்டிவிட்டாய். போதும்! என் கட்டுக்களை அவிழ்த்து, என்னைப் போக விடு!” என்று கூறினான் கண்ணன்.