27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரம் வழங்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் முருகபெருமான்!

356

சுயம்பு முருகனை காண்பது அரிது. அப்படியொரு சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியத்தை வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி, நட்சத்திரக் குன்று என்றெல்லாம் அழைக்கப்படும் நட்சத்திரக் கோயிலில் நாம் பெறலாம்.

வில்வாரணி நட்சத்திரகிரியில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தனிச்சிறப்பு பெற்றது.

முருகப்பெருமானின் கருணையால் உருவான இத்திருத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சிதரும் சிறப்பு இங்கு மட்டுமே காண இயலும்.

27 நட்சத்திரங்களும், சிவ சர்பமும் முருகப் பெருமா னை வழிபடும் சிறப்பு, இந்த கோயிலை தவிர உலகில் வேறெங்கும் இல்லை.

வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதரராக முருகப்பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க கோயில் எனும் பெருமையும் இத்திருதலத்துக்கு உண்டு.

27 நட்சத்திரங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் இக்கோயில் அமைந்திருக்கிறது. எனவேதான், நட்சத்திர கோயில் எனும் சிறப்புடன் பக்தர்கள் அழைக்கின்றனர்.

இக்கோயில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந் தது. காஞ்சிபுராணம், அருணாச்சல புராணம் வாயி லாக அறியும் இக்கோயில் தொடர்பான ஆன்மிக வரலாறு மிகவும் சுவையானது.

வேல் விளையாட்டில் வல்லவனாம் வேலவன், வாழைப்பந்தலில் இருந்து எய்த அம்பு, பருவதமலை மீது பாய்ந்தது. அப்போது அங்கு தவமிருந்த சப்த ரிஷிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன.

அதனால் பெருக்கெடுத்த உதிரம் ஆறாக பெருக்கெடு த்து மலையில் இருந்து வழிந்தோடியது. உதிரம் பெருக்கெடுத்து ஆறாக பாய்ந்ததால் இன்றைய செய்யாற்றுக்கு சிவப்பு நதி, செய்நதி எனும் பெயரும் உண்டு.

சப்த ரிஷிகளின் தலைகளை கொய்ததால் முருகப் பெருமானுக்கு பிரம்ம கத்திதோஷம் பிடித்தது.
எனவே செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் பூஜித்தால் முருகப்பெருமானுக்கு தோஷம் நிவர்த்தியாகும் என பார்வதிதேவி உபதேசித்தார்.

அதேபோல் முருகப்பெருமான், செய்நதியின் வலதுகரையில் வில்வாரணி மலையில் குடிகொண்டு காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், குருவிமலை, பூண்டி ஆகிய இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடதுகரையில் தேவகிரி மலையில் குடிகொண்டு வாசுதேவன்பட்டு, ஓரந்தவாடி, நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, மோட்டுப்பாளையம், பழங்கோயில், மண்டகொளத் தூர் ஆகிய இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

இன்றளவும் இந்த 14 இடங்களிலும் முருகன் வழிபட்ட சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன.

முருகப்பெருமான் வழிபட்ட இந்த 14 சிவாலயங்களை யும் இரண்டு சிவாச்சாரியார்கள் வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவ்விருவரும் ஆடிக்கிருத்திகை நாளில் திருத்தணி சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம்.

ஒரு வருடம் ஆடிக்கிருத்திகைக்கு திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. அதனால், மனம் வருந்தினர். இருவரின் கனவிலும் தோன்றிய முருகன், திருத்தணிக்கு செல்லவில்லை என வருந்தவேண்டாம், நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுமலையில் சுயம்பு ரூபமாக சிவசுப்ரமணிய ஐக்கியத்தில் குடியிருக்கிறேன். சூரியன், சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும், நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கின்றன.

எனவே, நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட என்னை வந்து சேருங்கள் என இருவர் கனவிலும் முருகர் அருள்புரிந்தார்.

திடுக்கிட்டு விழித்த சிவாச்சாரியார்கள், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் புறப்பட்டு, நட்சத்திரகிரியில் நாகம் வழிகாட்டிய இடத்துக்கு சென்றனர். அப்போது, சப்பாத்திகள்ளி புதரில் சுயம்பு வடிவாக முருகப்பெருமான் காட்சியளித்தார்.

முருகனே அருள்காட்சியளித்த நட்சத்திரகிரி கோயிலில், சித்திரை பிறப்பு பால்குட அபிஷேகம், ஆடிக்கிருத்திகை பெருவிழா, கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம், தைக்கிருத்திகை, பங்குனி உத்திர பிரம்மோற்சவம், மாதாந்திர கிருத்திகை விஷேசமானவை.

கிருத்திகைதோறும் நட்சத்திரகிரியை வலம் வருவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

இவ்வாலயத்தில் கிருத்திகைகளில் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து,செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபடுபவர்க ளின் நாகதோஷம் புத்திர தோஷம், திருமண தோஷங்கள் அகலும்; புதுவாழ்வு பிறக்கும்.

பாலபிஷேகம் செய்து, சிவந்த விருட்சி புஷ்பங்களால் அர்ச்சித்து, மாதுளைக் கனி படைத்து வழிபடுவோரின் நட்சத்திர தோஷங்கள் யாவும் விலகும்; நல்லருள் கிட்டும் என்பது நம்பிக்கை!

ஆலய அமைவிடம் :

திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. இதேபோல் வேலூரில் இருந்து போளூரில் இறங்கி அங்கிருந்து 16 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. பஸ், ஆட்டோ வசதி அதிகளவு உள்ளது.