பஞ்சபாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலியின் உயிர்பிரிதல்

481

வேடன் ஒருவன் ஹஸ்தினாபுரத்தில் வந்து கிருஷ்ணன் இறக்கும் தருவாயில் இருக்கிறார். பஞ்ச பாண்டவர்களான தங்களைக் காண விழைகிறார் என்றான்

தர்மர் பணி நிமித்தமாக இருந்ததால் கிருஷ்ணனைக் காண செல்ல வில்லை.  கிருஷ்ணனைக் கண்டால் தொட்டுப் பேச வேண்டாம் என தம்பிகளிடம் தர்மர் கூறினார்.

கிருஷ்ணனைக் கண்ட பார்த்தன் கண்ணீரை அருவி போலக் கொட்டிக் கதறி அழுதான்.அனைத்துமாய் உள்ள பரமாத்மாவான உனக்கே இந்தக் கதியா பரந்தாமா என்றான் அர்ஜீனன். என்னைக் கை தூக்கி உட்கார வையுங்கள் குந்தியின் புதல்வர்களே என்றார் மாயக் கள்வன் கிருஷ்ணன்.

அண்ணன் சொன்னது நினைவுக்கு வரவே யாரும் அவரைத் தீண்டவில்லை. எழுந்து உட்கார வேண்டும் என்பதற்காக அவரவர் ஆயுதங்களை நீட்டினர். அதைப் பிடித்து அதன் வழியாக அனைவரிடமும் இருந்த சக்திகளையும் பெற்று விட்டு உயிரைப் பிரித்துக் கொள்கிறார்.சக்தி அனைத்தும் பறிபோனதால், பராக்கிரமசாலியாக இருந்த அவர்கள் காட்டில் இருக்கும் சிங்கம் புலி மிருகங்களைக் கண்டு அஞ்சுகின்றனர்.

ஹஸ்தினாபுரம் வந்து நடந்ததை எல்லாம் தர்மரிடம் சொல்கின்றனர். அவர் இவர்கள் அனைத்து சக்தியையும் இழந்ததை அறிந்து கொள்கிறார். “எனது ஆட்சி போதும் நான் கானகம் செல்ல விழைகிறேன். அதனால் அனைவரும் பரீட்சித்துக்குத் துணை இருங்கள்” எனக் கூறிப் புறப்படுகிறார். நாங்களும் வருகிறோம் என பாஞ்சாலியோடு ஐவரும் புறப்படுகின்றனர்.

பரீட்சித்துக்கு முடிசூட்டி விட்டு கால் போன போக்கில் நடந்து செல்கின்றனர். அப்போது அவர்களுடன் ஒரு சீழ்  பிடித்து புழு வைத்த ஒரு நாயும் செல்கிறது. இவர்கள் உயிர் துறக்கும் நேரமும் நெருங்கியது. கிருஷ்ணணே சென்ற பிறகு நமக்கென்ன இங்கு வேலை என போய்க் கொண்டிருந்தனர்.

அப்போது முதலில் உயிர் பிரிந்து விழுந்தாள் திரௌபதி. அண்ணா திரௌபதி இறந்துவிட்டாள். கற்புக்கரசியாய் இருந்து, உலகிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய, குல விளக்கு அணைந்துவிட்டதே! ஏன் எனக் கேட்டனர். ஐவரை மணந்து பத்தினியாக இருந்தாலும், அர்ஜீனன் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தாள். அதனால் அவள் இறந்துவிட்டாள் என்றார் தர்மர்.

தர்மர் நிற்காமல் நடந்து கொண்டே இருந்தார். மற்றவர்கள் திரௌபதியை அடக்கம் செய்துவிட்டு நடக்க ஆரம்பித்தனர்.

அடுத்து சகாதேவன் இறந்தான். பீமன் அவன் இறந்த காரணத்தைக் கேட்டான். தன்னை ஜோதிட சாஸ்திரத்தில் மிஞ்ச யாரும் இல்லை, கலியுகத்தைக் கட்டி வைக்கும் திறமையே நம்மிடம் இருக்கிறது எனக் கர்வம் கொண்டான். அதனால் இறந்தான் எனக் கூறினார் தர்மர்.

அடுத்ததாக நகுலன் இறந்தான். நகுலன் இறந்ததற்கான காரணம் கேட்டான் பீமன். அழகில் தான் மட்டுமே சிறந்தவன், அனைவரையும் வசீகரிக்கும் முகம் நம்முடையது மட்டுமே எனக் கர்வம் கொண்டான். அதனால் இறந்தான் என்றார் தர்மர்.

அடுத்ததாக அர்ஜீனன் இறந்தான். தர்மரிடம் காரணம் கேட்டான் பீமன். வில் வித்தையில் தான் மட்டுமே சிறந்தவன் என்ற கர்வம் கொண்டான் அதனால் இறந்தான் என்றார்.

அண்ணா எப்படியும் அடுத்து நான் மாண்டு போவேன், அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள் என்றான். பீமா நீ தனக்குப் போலவே, மற்றவர்களுக்கும் பசிக்கும் என்றெண்ணி ரிஷிமுனிவர்களை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தித் தண்டனை கொடுத்தாய். அதனால் நீ இறந்து விடுவாய் என்றார் தர்மர். அது காதில் விழுந்ததோ இல்லையோ பீமனும் இறந்து போனான்.

தர்மரோடு அந்த சீழ்  பிடித்த நாய் மட்டும் வந்து கொண்டே இருந்தது அமைதியாக. ஒரு ஆற்றைக் கடந்து மறுபுறம் செல்ல வேண்டும். ஆனால் ஆற்றிலோ தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. நம்மை நம்பி வந்த நாயை ஏமாற்றக் கூடாது என்றெண்ணி அதைத் தூக்கி தலை மேல் வைத்துக் கொண்டு ஆற்றைக் கடந்தார். அதிலிருந்து சீழ்  வடிந்து கொண்டிருந்தது. நாயின் உடம்பிலிருந்த புழுவெல்லாம் தர்மர் மேனியில் விழுந்தது. அதெல்லாம் பார்க்காது அதைத் தூக்கிக் கொண்டு நடந்தார்.

ஆற்றைக் கடந்ததும் இறக்கி விட்டார். தொடர்ந்து நடக்கத் தொடங்கினார். அப்போது விண்ணுலகில் இருந்து ஒரு ரதம் வந்திறங்கியது. அதில் இருந்த தேவர்களில் ஒருவர் தர்மா உனக்காக ரதம் காத்துக் கொண்டிருக்கிறது என்றார். தர்மரோ என்னுடன் இந்த நாயும் சொர்க்கத்திற்கு வரட்டும் என்றார். ஆனால் தேவரோ நாய்க்கெல்லாம் சொர்க்கம் கிடையாது. நீ மட்டும் வந்து ஏறு என்றார். என்னை நம்பி வந்த நாய்க்கே சொர்க்கம் இல்லை என்றால், எனக்கு அந்த சொர்க்கம் தேவையில்லை என்றான் தர்மன்.

உடனே அந்த நாய் உருமாறி கலகலவெனச் சிரித்தது. நான் தான் தர்ம தேவதை. நீ மட்டும் ரதத்தில் ஏறி இருந்தால் நீயும் மாண்டு போயிருப்பாய். என்னை நம்பி வந்த நாய்க்கே சொர்க்கம் இல்லை என்றால், எனக்கும் அந்த சொர்க்கம் தேவையில்லை என்று சொன்ன காரணத்தால் நீ பூத உடலோடே சொர்க்கம் போவாய் என்றது தர்ம தேவதை. தர்மர் பூத உடலுடன் சொர்க்கம் போனார்.