சுயம்பு சரஸ்வதி கோவிலின் புராணக் கதை!
புகழ்பெற்ற சுயம்பு சரஸ்வதி கோயில் கேரள மாநிலம் கோட்டயம், பனச்சிக்காட்டில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் புராணக் கதை பற்றி பார்ப்போம்…
புராணக் கதை:
கிழுப்புரம் தாமோதரன் நம்பூதிரி என்பவரின் கனவில் தோன்றி அம்பிகை ஆணையிட்டபடி தனக்குக் குழந்தை பிறக்க வேண்டி மூகாம்பிகையை தரிசிக்கச் சென்றார். தற்போது கருவறை உள்ள இடத்தில் தான் எடுத்துச் சென்ற தாழங்குடையை வைத்தார். நீராடிவிட்டு வந்தபின் அந்த குடையை எடுக்க முயன்ற போது அது இயலாததாக இருந்தது. அப்போது, ‘‘தாமோதரா, குழந்தை பாக்கியம் கிடைக்காதது பற்றி வருந்தாதே.
ஆதிசங்கரர் இங்கிருந்து மூகாம்பிகையை கொல்லூருக்கு கொண்டு சென்று பிரதிஷ்டை செய்தார். இப்போது அவளது அம்சமான சரஸ்வதி, உனது குடையில் அமர்ந்து உன்னுடன் இங்கே வந்திருக்கிறாள். நீ இங்குள்ள காட்டிற்குள் போ. உனக்கு குழந்தை வடிவ சரஸ்வதி சிலை ஒன்று கிடைக்கும். அதை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து, குடையிலிருக்கும் சரஸ்வதியை அதில் எழுந்தருளச் செய்து பூஜித்து வா!’’ என்று அசரீரி சொன்னது. அதன்படி சரஸ்வதி சிலையை கண்டெடுத்த அவர், இந்த ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
தாமோதரன் நம்பூதிரிக்கு வாரிசு இல்லை என்பதால், அவரது உறவினர்கள், அவர் பூஜித்த சரஸ்வதிக்கு எதிரில் மேற்கு நோக்கி ஒரு கல்லை பிரதிஷ்டை செய்து அதை சரஸ்வதியாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். அதை மட்டுமே நாம் பார்க்க முடியும். தாமோதரன் பூஜித்த சரஸ்வதியைச் சுற்றிலும் வெற்றிலை கொடிகள் சூழ்ந்துவிட்டது. இதற்கு அடியில் மூகாம்பிகை கோயிலில் இருந்து, சரஸ்வதி எழுந்தருளிய குடை இருக்கிறது. இதை பக்தர்கள் தரிசிக்கலாம். ஆனால், குழந்தை சரஸ்வதியைப் பார்க்க முடியாது. ‘சரஸ்’ என்றால் தண்ணீர் என்றும் ‘வதி’ என்றால் ‘தேவி’ என்றும் பொருள். இதனடிப்படையில் கோயிலை ஒரு குளம் சூழ்ந்துள்ளது. சரஸ்வதி கோயில் அருகில் நம்பூதிரிகள் பூஜித்த பெருமாள் கோயிலும் உள்ளது.
ஆலயத்தின் சிறப்பு:
பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும் அவர்களது பிறந்த நாளின் போதும் பஞ்சாமிர்தம், பால் பாயசம் படைத்து சிறப்பு பூஜை செய்து வழிபடுகிறார்கள். நவராத்திரியின்போது சரஸ்வதியை குழந்தை வடிவில் அலங்காரம் செய்து பூஜிக்கின்றனர் இந்த பூஜைகள் இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
