பரீக்ஷித்து பெற்ற சாபம்
ஒரு சமயம் மன்னன் பரீக்ஷித்து வேட்டையாடச் சென்றான். காட்டில் களைப்புற்ற அவர் அருகிலிருந்த ஆசிரமத்தில் நுழைந்தான். அங்கு மெய்மறந்து தவமியற்றி வந்த சமீக முனிவரைக் கண்டான். அவர் உண்மையில் நிஷ்டையிலிருக்கிறாரா என்று அறிய புறத்தே கிடந்த பாம்பை வில்லால் எடுத்து அவர் கழுத்தில் போட்டுவிட்டு தன் நகரத்தை அடைந்தான். ஆசிரமம் அடைந்த சமீக முனிவரின் புத்திரன் தந்தை நிஷ்டையிலிருப்பதையும், அவர் கழுத்தில் ஓர் உயிரற்ற பாம்பு கிடப்பதையும் கொண்டு கோபம் கொண்ட அவன் கண்கள் சிவக்க கவுசீக நதியில் இறங்கி ஆசமனம் செய்து தந்தையை அவமதித்த அரசன் இன்றையிலிருந்து ஏழாவது நாளில் என்னால் தூண்டப்பட்ட தக்ஷகன் என்ற, கொடிய சர்ப்பம் தீண்டி இறக்கட்டும் எனச் சாபமிட்டான். பிறகு பாம்புடை கழுத்தைக் கண்டு துக்கத்துடன் கதறி அழுதான்.
சப்தம் கேட்டுக் கண் விழித்த சமீக முனிவர் பாம்பை எடுத்து எறிந்துவிட்டு, தனது புத்திரன் மூலம் நிகழ்ந்தவற்றை எல்லாம் அறிந்து புத்திரனைக் கொண்டாடாமல், அரசர் வந்தபோது உபசரியாமல் இருந்ததற்கும், தன் புத்திரன் அவருக்கு இட்ட சாபத்திற்காகவும் மிக்க வருத்தமுற்றார். மன்னனுக்காகப் பச்சாதாபப்பட்டார். அரசன் செய்த தவறை மறந்தும் விட்டார். மன்னன் பரீக்ஷித்து தன் பிழைக்காக வருந்தி, தவறு செய்த அவனுக்கு ஏற்படக்கூடிய விபத்தைப் பற்றியும் அவனது ராஜ்யம், செல்வம் எல்லாம் அழிந்து விடும் என்றும் எண்ணிச் சிந்தித்தான். மேலும் ரிஷி சாபம் தனக்கு அனுகூலமானதே. உலகில் பற்று கொண்டு உழலும் தனக்கு விரக்தி ஏற்பட தக்ஷகன் விஷச்சுவாலை தேவையே. அந்த அக்கினியால் தனது பாபங்கள் தொலையும் என எண்ணி மகிழ்ச்சியுற்றான். பின்னர் இகபரசுகங்கள் அநித்யம். எனவே அவற்றிலிருந்து விடுபட்டு ஸ்ரீகிருஷ்ண சரணங்களைத் தியானித்துக் கொண்டே, கங்கைக் கரையில் பிராயோபவேசம் செய்ய நிச்சயித்தான் பரீக்ஷித்து.
புறப்படும் நேரத்தில் அத்திரி, வசிஷ்டர், ப்ருகு, ஆங்கீரசர், பரத்வாஜர், தேவலர், மைத்ரேயர், நாரதர் ஆகிய ரிஷிகள் அங்கு வந்தனர். அவர்களைத் தக்க வகையில் உபசரித்து கீழ்க்கண்டவாறு கூறினான். தங்கள் தரிசனம் கிடைத்தது என் பாக்கியம். வைராக்கியம் ஏற்படவே பிராம்மண சாபத்தைப் பகவான் அருளினார். தங்களையும் கங்காதேவியையும் வணங்குகிறேன். தக்ஷகன் என்னைக் கடிக்கட்டும். முனிவர்களிடம் ஹரிநாம கீர்த்தனை செய்யுமாறும், தனக்கு எப்பிறவியிலும் கிருஷ்ண பக்தி குறையாமல் இருக்கவும் பிரார்த்தித்தான். அரசை புத்திரன் ஜனமேஜயனிடம் ஒப்படைத்து கங்கையைக் கரையில் வடக்கு நோக்கி தர்ப்பாசனத்தில் அமர்ந்தான். சியாமள வர்ண மேனியுடன், புன்சிரிப்பு தவழ ஸ்ரீமகா விஷ்ணுவைப் போல் ஒளிரும் சுகப்பிரம்மத்தை எல்லோரும் எழுந்து வரவேற்று ஆசனத்தில் இருக்கச் செய்தனர்.
பின்னர் பரீக்ஷித் அவரை நோக்கி, ஆத்ம சொரூபியான அவர் அதிதியாக வந்து அனைவரையும் தூய்மையாக்கி விட்டதாகக் கூறினான். மரண சமயத்தில் அவர் தரிசனம் கிடைத்தது கிருஷ்ணன் அருளால்தான் என்றான்.
மேலும் பரீக்ஷித்து அவரைத் தனக்கு குருவாக இருந்து அந்த மரணத்தருவாயில் உபதேசம் செய்ய வேண்டினான். “மரணத்தருவாயில் இருப்பவன் எதைச் செய்ய வேண்டும்? எதைக் கேட்க வேண்டும்? எதை ஜபிக்க வேண்டும்? யாரை பஜனை செய்து உபாசனை செய்ய வேண்டும்? என்றும் செய்யத் தகாதவை பற்றியும் கூறி அருளுக” சுகப்பிரம்மத்தினிடம் வேண்டிக் கொண்டான். மிக்க மகிழ்ச்சி கொண்ட அவரும் பதில் கூறலானார் என்று சூத பவுரானிகர் சனகாதி ரிஷிகளுக்குக் கூறினார்.
(இத்துடன் முதல் ஸ்கந்தம் முடிவுற இரண்டாவது ஸ்கந்தம் சுகப்பிரம்மத்தின் பதிலுடன் ஆரம்பிக்கிறது.)
தொடரும்…
ஓம் க்ரிஷ்ணாய நமஹ!
