சுந்தர காண்டம் பகுதி-13

462

நேற்றைய தொடர்ச்சி…

அவர்கள் சீதையிடம், சீதா! நீ இவனைக் கண்டு கலங்க வேண்டாம். இவன் ஒரு அற்பன், என்றனர். இதனால், தைரியமடைந்த சீதா, ராவணனிடம் வீரத்துடன் பேசினாள். பெண்கள் கஷ்ட காலத்தில் மிகுந்த தைரியத்துடன் இருக்க வேண்டும் என்பதை சுந்தரகாண்டத்தின் இந்த வரிகள் எடுத்துச் சொல்லப் போகின்றன.

ராவணா! என் கணவர் மதயானைக்கு சமமா னவர், நீயோ சாதாரண முயல். இந்த இரண்டும் சண்டை போட்டால் முயலின் கதி என்னவாகும் என்பதை யோசி. நீ ஒரு கணம் அவர் கண்ணில் பட்டால் போதும். உன் விதி முடிந்து போகும்.

உன் பார்வை என் மீது கொடிய நோக்கத்துடன் படும்போதே குருடாகியிருக்க வேண்டுமே! என்னை உன் இஷ்டத்துக்கு அழைக்கும் போதே உன் நாக்கு அறுந்து விழுந்திருக்க வேண்டுமே! இந்திராணிக்கு சமமான என்னுடன் பேசுவதற்கு கூட உனக்கு தகுதி கிடையாதே. கொடியவனே.

நான் நினைத்தால் உன்னை ஒரு நொடியில் சாம்பலாக்கி விடுவேன். அத்தகைய சக்தி எனக்கு இருக்கிறது. ஆனால், உன்னைக் கொல்ல வேண்டும் என்ற ஆணை இதுவரை என் கணவரால் எனக்கு பிறப்பிக்கப்படவி ல்லை. நான் கணவனுக்கு கட்டுப்பட்டவள். பதியை தெய்வமெனக் கருதுபவள். அவரது உத்தரவை என்றும் மீறாதவள்.

பாவம் நீ என்ன செய்வாய் உன் விதி என்னால் தான் முடிய வேண்டுமென்று எழுதப்பட்டிரு க்கும் போது, அதை மாற்ற யாரால் இயலும்? நீயெல்லாம் ஒரு வீரனா? கேவலமானவனே! நீ குபேரனுக்கு சகோதரன், அளவற்ற படைபலம் உடையவன். பல யுத்தங்கள் புரிந்து தேவலோ கத்தையே கைப்பற்றியவன்.

அப்படிப்பட்ட சூராதி சூரனான நீ, என் கணவரு க்கும், என் மைத்துனன் லட்சுமணனுக்கும் பயந்து தானே என்னை அவர்கள் அறியாமல் தூக்கி வந்தாய்? இப்போது சொல் நீ சுத்தமான வீரனா? என்றாள்.

பார்த்தீர்களா! ஒரு பெண்மணிக்கு இருக்கும் தைரியத்தை! உயிருக்கு பாதுகாப்பில்லை என்ற நிலையிலும், தன் கற்பைப் பாதுகாக்க வும், கணவன் மீது கொண்ட பக்தியின் மீது கொண்ட நம்பிக்கையும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

தன்னை ஆண்மகனா என்று கேட்டுவிட்டாளே இந்தப் பெண் என்று வெட்கி போன ராவணன் அதிபயங்கர கோபத்துடன் பாம்பைப் போல் சீறினான்.

ராமனாம் ராமன், நீதிநெறி என்பது அவனிடம் உண்டா? எல்லாவற்றையும் இழந்து திரியும் அவன் எனக்கு ஈடா? அவன் மீது உனக்கு இன்னுமா பிரியம்? அவனைக் கொன்று விட்டு தான் எனக்கு மறுவேலை, என்று கர்ஜித்தான்.

பின்னர் சீதையைச் சுற்றியிருந்த காதில்லாத, மூக்கில்லாத, ஒற்றைக் கண்ணுடைய குரூர ரூபம் கொண்ட அரக்கிகளிடம், இவள் மனதை மாற்றப் பாருங்கள். அப்படியும் மாறாவிட்டால் சித்ரவதை செய்யுங்கள் என ஆணையிட்டான்.

அப்போது, ராவணனின் இஷ்ட நாயகியான தான்யமாலினி என்பவள், பேரரசரே! இந்த மானிட ஜென்மத்திடம் தங்களுடைய தாபத்தை தீர்த்துக் கொள்ள இயலுமோ? மேலும், இவளுக்கு உங்களது செல்வத்தை அனுபவிக்க வேண்டும் என்று பிரம்மா எழுதி வைக்கவில்லை. வாருங்கள்! தங்களை நான் மகிழ்விக்கிறேன், என்று சொல்லி, அவனது கரம் பற்றி இழுத்தாள்.

ராவணனும் அங்கிருந்து சென்று விட்டான். பின்னர் ராட்சஷிகள் சீதையிடம் பலவாறாக ராவணனின் பெருமையை உரைத்தனர். ஒரு அரக்கி சீதையிடம், ஏ சீதா! எங்கள் ராவணன் சாமான்யமானவனா? புலஸ்திய முனிவரின் பேரனல்லவா அவன், அவருக்கு மனைவியா வது உனக்கு கிடைக்கும் பெரும் பேறல்லவா? என்றாள்.

ஏகஜடை என்ற அரக்கி கோபத்துடன், மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர், புலஹர், கிரது ஆகிய ஆறு பிரஜாபதிகளை நீ அறிவாய். அவர்களில் நான்காவதான புலஸ்தியர் பிரம்மாவின் புத்திரர். அவரது புத்திரர் விச்வரஸ். அந்த விச்வரஸ் ரிஷியின் மகனே எங்கள் ராவணேஸ்வரன்.

இப்படிப்பட்ட புகழுடையவனுக்கு வாழ்க்கைப் பட என்ன தயக்கம்? என்றாள்.பிரகஸை என்ற அரக்கி, உன் மீது கொண்ட காதலால், எங்கள் குல திலகம் மண்டோதரியை விட்டே விலகி விட்டான் ராவணன்.

பிற பெண்களாலும் அவன் மனதைக் கவர முடியவில்லை. எனவே, நீ அவனுக்கு மனைவி யாகி விட்டால், உனக்கு சக்களத்திகளே இருக்கமாட்டார்கள். சகல போகத்துடனும் நீ வாழலாம், என ஆசை காட்டினாள்.

இப்படியாக ஹரிஜடை, விகடை போன்ற அரக்கிகளெல்லாம் அவளுக்கு பல வழிகளிலு ம் ராவணனின் பெருமையை சொன்னார்கள். உன் புருஷன் ராஜ்யத்தை இழந்து பஞ்சப்பரா ரியாய் காட்டில் திரிந்து கொண்டிருக்கிறான். மனைவியைக் காப்பாற்ற தெரியாத அவனுட ன் வாழ்ந்து என்ன செய்யப் போகிறாய்? என்றார்கள்.

எதற்கும் மசியாத சீதையை தின்று விடுவோம் என பயமுறுத்தவும் செய்தார்கள்..இல்லானை இல்லாளும் வேண்டாள் என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். கணவனிடம் செல்வம் இல்லாத பட்சத்தில், அவனுக்கு கிடைக்கும் மரியாதையை இந்த கலியுகத்தில் காணத்தான் செய்கிறோம்!

ஏன் பெற்றவள் கூட வேலை இல்லாத பிள்ளையை வெறுக்கத்தான் செய்கிறாள். சீதையும் இவ்வாறே நினைத்திருந்தால், அவளும் ராவணனின் அரண்மனையில் சுகவாழ்வை அனுபவித்திருக்கலாம்.

ஆனால், அவள் என்ன சொன்னாள் தெரியுமா என் கணவர் தரித்திரராக இருக்கலாம்; ராஜ்யம் இல்லாதவராக இருக்கலாம். ஆனால், அவர் எனக்கு மாங்கல்யம் தந்தவர். அவரே எனக்கு தலைவர். கஷ்டப்படும் அவர் பின்னாலேயே நான் செல்வேன். அதிலேயே ஆனந்தத்தைக் காண்கிறேன்.

சூரியனை சுவர்ச்சலாதேவியும், இந்திரனை இந்திராணியும், வசிஷ்டரை அருந்ததியும், சந்திரனை ரோகிணியும், அகத்தியரை லோபாமுத்திரையும், ச்யவனரை சுகன்யாவும், சத்யவானை சாவித்திரியும், சவுதாசனை மதயந்தியும், கபிலரை ஸ்ரீமதியும், சகரனை கேசினியும், நளனை தமயந்தியும், அஜனை இந்துமதியும் பின்தொடர்வது போலவும், மனமொத்த தம்பதிகளுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுவது போலவும், நானும் என் கணவனுடன் வாழ்ந்து காட்டுவேன், என்றாள்.

எவ்வளவு பெரிய உத்தம ஆத்மாக்களின் பெயர்களையெல்லாம் படிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது பாருங்கள்! இவர்க ளது பெயரை சொன்னாலே மகா புண்ணியம். குடும்ப ஒற்றுமைக்கு சுந்தரகாண்டத்தை தவிர மாமருந்து வேறு ஏதுமில்லை.

ஆஞ்சநேயர் இதையெல்லாம் மரத்தில் ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.

ஸ்ரீ ராம.. ஜெய ராம.. ஜெயஜெய ராமா…

நாளை தொடரும்…