சுந்தர காண்டம் பகுதி-17

397

நேற்றைய தொடர்ச்சி…

வானரனே! மக்களுக்கு ஏதாவது கஷ்டமும், பிரச்னையும் ஏற்படும் சமயத்தில் ராமனுக்கு உற்சாகமும், சந்தோஷமும் அதிகரிக்கும், என்பதே அந்த வார்த்தை.
இதைப் படித்தவுடன் சற்று அதிரத்தோன்றும். ஏனெனில், இன்றைய உலகத்தின் மனநிலை அப்படிப்பட்டது. பக்கத்து வீட்டில் நன்றாக இருந்த ஒருவருக்கு கஷ்டம் வந்துவிட்டால் அடுத்த வீட்டுக்காரனுக்கு சந்தோஷம் வந்து விடுகிறது. மாட்டிக்கிட்டானா, இவ்வளவு நாளும் என்ன கர்வமா இருந்தான்! இப்போ என்ன செய்யப்போறான் என்று கைகொட்டி சிரிப்பவர்களே ஏராளம்.

பிறர் துன்பத்தில் இவர்கள் சந்தோஷம் காண் கிறார்கள். ஆனால், ராமபிரான் பிறருக்கு துன்பம் வந்து விட்டால், அவர்களுக்கு உதவி செய்ய சரியான சந்தர்ப்பம் வந்துவிட்டதே என்று சந்தோஷப்படுவாராம்.

தன் தந்தைக்கு கைகேயியால் கஷ்டம் வந்த போது, இவர் ராஜ்யமே வேண் டாம் என்று தம்பியிடம் அரசாங்கத்தைக் கொடுத்து விட்டு காட்டிற்கும் போய்விட்டார். எவ்வளவு பெரிய மனம் இதற்கு வேண்டும்!

தந்தையின் கஷ்டத்தைப் போக்க தன் சுகவாழ் வையே இழந்தவர் அவர். இந்த நிகழ்ச்சியை ஆஞ்சநேயரிடம் வெளிப்படுத்தி தன் கணவரைப் பற்றி உயர்த்திச் சொன்னாள் அன்னை சீதா.பெண்கள் எக்காரணம் கொண்டும் தன் கணவரை உதாசீனப்படுத்தக் கூடாது. அது பெரிய பாவம்.

ராமன் சீதாவுக்கு சுகமான வாழ்வைத் தந்தார். ஒரு கட்டத்தில் அது பறிபோனது. ஆனால், சீதா தன் கணவனே பெரிதெனக் கருதி அவருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்று காட்டையே தன் வீடாகக் கொண்டாள் அந்த மகாதேவி.

கணவனும், மனைவியும் ஒற்றுமை பேண வேண்டும். இருவரும் ஈருடல் ஓருயிர் என வாழ வேண்டும். சுந்தரகாண்டம் உணர்த்தும் மிகப்பெரிய தத்துவம் இது. பிரிந்திருக்கும் தம்பதியர் இதைப்படித்த பிறகாவது தங்கள் பிணக்குகளை கைவிட வேண்டும்.

இருதரப்புக்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பா ன்மை நிறையவே வேண்டும். சீதாதேவி தங்கள் வரலாற்றைச் சொல்லச் சொல்ல ஆஞ்சநேயரும் அவள் அருகில் நெருங்கி வந்து கொண்டே இருந்தார்.

சீதாவுக்கு இப்போது சந்தேகம். இவன் அருகில் நெருங்கி வருவதைப் பார்த்தால் ஒருவேளை ராவணன் அனுப்பிய ஆளாக இருப்பானோ என்று. சற்று விலகி நின்று, இவனிடம் போய் நம்முடைய கதையைச் சொல்லிவிட்டோமே!

முன்பின் தெரியாதவர்களிடம் வீட்டுப்பிரச் னையை சொல்லியிருக்கக் கூடாதே என்ற மனோபாவம் வேறு அவளை வருத்தியது. அவளது முகக்குறிப்பை உணர்ந்து கொண்ட ஆஞ்சநேயர், அன்னையே! கலக்கம் வேண்டா ம், என்றவர் ஸ்ரீராமனின் நற்குணங்களை எல்லாம் பட்டியலிட்டார்.

அதைக் கேட்டு உருகிப்போனாள் சீதா.பின்னர் தான் யார் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டார்.தாயே! என் பெயர் அனுமான். நீங்கள் சந்தேகப்படுவது போல் ராவணன் அல்ல. நான் ராமதூதன் என்பதை நம்புங்கள், என்று பணிவாகவும், கனிவாகவும் சொன்னார்.
பின்னர் சீதா அனுமானிடம், அனுமானே… உனக்கும் என் கணவருக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்று கேட்க அவர் அந்த வரலாற்றைச் சொன்னார். பின்னர் சீதையைப் பிரிந்த
ராமனின் நிலை பற்றி உருக்கமாக எடுத்துச் சொன்னார்.

அம்மா! ராவணன் தங்களை அபகரித்த பிறகு, ஸ்ரீராமன் துக்கத்தால் வாடுகிறார். தாங்கள் ராவணனால் கடத்தப்பட்ட போது கழற்றி எறிந்த ஆபரணங்களைக் கண்டெடுத்து சுக்ரீவனிடம் ஒப்படைத்தேன்.

அவர் அவற்றை ராமனிடம் கொடுத்தார். அதை பார்த்து அவர் புலம்பியதை நினைத்தால் சோகம் நெஞ்சை அடைக்கிறது. தங்களை பார்க்காமல் வேதனை யால் தவிக்கிறார். நித்திரையின்றி புலம்புகிறார்.

மரங்களையும், செடிகளையும் பார்த்து நீங்கள் அவளைக் கண்டீர்களா என்று கேட்கும்போது ஏற்படும் துக்கத்தை என்ன வார்த்தைகளால் வடிப்பேன்! ஆயினும், இனி உங்களுக்கு கவலை வேண்டாம். இந்த ராவணனை அழித்து உங்களை அவர் மீட்டுச்செல்வார், என்றார்.
இத்தனையும் கேட்டபிறகு அனுமான் ராமனின் தூதர் என்பதை உறுதியாக நம்பினாள் சீதா. இந்த நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகை யில், தாயே! ஸ்ரீராமபிரான் தங்களுக்கு அடை யாளம் காட்டும் வகையில் ஒரு மோதிரத்தை என்னிடம் தந்தார். இதோ! அந்தக் கணையாழி, என்று அவளிடம் நீட்டினார்.

அதைப் பார்த்ததும் கிரகணத்தில் இருந்து விடுபட்ட சந்திரன் போல் அவளது முகம் பிரகாசித்தது. இவன் உயிர்களை வாழ வைப்பவன் என்று முன்னர் கருதினோமோ அது நூற்றுக்கு நூறு உண்மை என்று வாய் விட்டுச் சொன்னாள்.

அந்த சந்தோஷத்துடன், வானரனே! இந்த இலங்கைக்குள் நுழைவது என்பது நடக்காத காரியம். ஆனால், மகாபுத்திமானான நீ இங்கே நுழைந்ததில் இருந்தே உன் புத்தியும், சக்தியும், பலமும் அளவிடற்கரியது என்று சொல்வேன்.

அது மட்டுமா? நூறு யோஜனை தூரமுள்ள கடலை பசுவின் குளம்படியைப் போல மிகச்சாதாரணமாக தாண்டி வந்தாயே! அந்த பராக்கிரமத்தை என்ன சொல்வது? என்று ஆஞ்சநேயரைப் புகழ்ந்தவள், ராம லட்சுமணர் நலம் பற்றி விசாரித்தாள்.

என் ராமன் எப்படியிருக்கிறார்? என் கொழுந்த ன் லட்சுமணன் எப்படியிருக்கிறான்? ராகவன் நலமாயிருந்தால் என்னைக் கடத்திய குற்றத் திற்காக இதற்குள் இந்த பூமியை எரித்திரு ப்பாரே? அவருக்கு ஒருவேளை ஏதாவது ஆகி விட்டதா? என்னைப் பிரிந்த வருத்தத்தில் இளைத்து விட்டாரா? சக்தியிழந்து போனாரா? இப்போதும் நல்ல நண்பர்களைத் தான் தேர்ந்தெடுக்கிறாரா? என்று நிறுத்தினாள்.

மனைவி போய்விட்டாள். அதிலும் இன்னொ ருவன் தூக்கிக்கொண்டு போய்விட்டான். அவள் சுத்தமாக இருப்பாள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? நீ இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளப்பா என்று தானே சாதாரண உலகம் தன் நண்பர்களுக்கு கற்றுத்தரும்.

அப்படிப்பட்ட கெட்ட போதனை தரும் நண்பர்களாக இல்லாமல், ராமனுக்கு உத்தம நண்பர்கள் கிடைத்துள்ளார்களா என்பதே சீதாவின் கவலை..

ஸ்ரீ ராம.. ஜெய ராம.. ஜெயஜெய ராமா…

நாளை தொடரும்…