சுந்தரகாண்டம் பகுதி-2

356

எல்லோருமாக பிரம்மாவை அணுகி தங்கள் சிரமத்தைச் சொல்ல, அவர் வாயுவை சமாதானப்படுத்தும்படி சொல்லியனுப்பினார். அனைவரும் வாயுவிடம் ஓடிவந்து நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கவே, அவர்கள் மீது இரக்கம் கொண்ட வாயு பகவான் மீண்டும் சஞ்சரிக்கலானார்.

தேவேந்திரன் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, வாயு, உன் புத்திரன் மாருதி சிரஞ்சீவியாய் (என்றும் நிலைத்திருப்பவர்) இருப்பான். என் வஜ்ராயுதம் யார் மீதாவது பட்டால் அவர்கள் மரணமடைந்து விடுவார்கள். இவனுக்கு அவ்வாறு ஏதும் ஆகவில்லை.

எனவே, இவன் நினைக்கும் போது மட்டுமே மரணமடைவான். அதுவரை இவனுக்கு அழி வில்லை, என்று அன்பு பொங்க கூறினான். தன் மைந்தனுக்கு கிடைத்த பேறு குறித்து வாயு மிகவும் மகிழ்ந்தான். குழந்தைகள் பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இளமையிலேயே நடந்து கொள்ள வேண்டும்.

மாருதியால் சூரியனைப் பிடிக்க முடியாமல் போனாலும், அவனது திறமைக்கு கிடைத்த அரிய பரிசு கண்டு, கேஸரியும், அஞ்சனையும் மகிழ்ந்தார்கள். ஆஞ்சநேயரைப் பற்றிய இந்த அறிமுகம் கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது.

நாம் படித்துக் கொண்டிருப்பது சுந்தரகாண்டம் என்றாலும் அதன் கதாநாயகன் ஆஞ்சநேயரை பற்றிய அறிமுகம் அந்தக் காண்டத்தில் கிடைக்கிறது என்பதால் தான், இவ்வளவு நேரமும் கிஷ்கிந்தையில் நாம் இருந்தோம்.

இனி, போகிற உயிரைத் தடுத்து நிறுத்தும் சுந்தரகாண்டத்திற்குள் நுழைவோம். இந்த காண்டத்தின் சிறப்பை சொற்களால் விளக்க முடியாது.

ஒரு பெண், அதிலும் திருமணமான வள், மாற்றானிடம் சிக்கியிருக்கிறாள் என்றால், அவளது மனநிலை எந்தளவுக்கு இருக்கும். அவளது கண்ணீர் இலங்கையின் கடலில் கிடக்கும் பெரு நீரையும் தாண்டி விடாதா என்ன! அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவள் என்ன நினைப்பாள். ஐயோ.. இந்த உயிர் இப்படியே போய் விடாதா என்று தானே சிந்திப்பாள்.

இப்படி அந்த உயிர் பிரிய இருந்த வேளையில், ஆஞ்சநேயப் பெருமான் சீதாவின் முன்னால் போய் நிற்கிறார். ராம ராம ராம என்கிறார். உயிர் திரும்பியது. தன் மணாளனின் பெயரை யாரோ உச்சரிக்கிறார்களே! சரி, இங்கே வந்தி ருக்கும் வானரன் யார்? ஒருவேளை அவனும் ராவணனால் அனுப்பப்பட்ட ராட்சஷனோ? என சீதையின் மனம் தடுமாறுகிறது.

மீண்டும் உயிர் போகும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது கணையாழியை எடுத்துக் காட்டுகிறார் ஸ்ரீ ஆஞ்சநேயன். ஆஹா, கண்டேன் என் ராமனை என்று சீதை அகமகிழ்ந்தாள்.
இந்த கணையாழிக்கு ஒரு பெரிய சிறப்பு உண்டு.இதை ஜனகமகராஜா ராமனுக்கு சீதனமாக அளித்திருந்தார். ஒருநாள், ராமனுக் கும், சீதைக்கும் ஊடல். கடவுளாக இருந்தால் என்ன, மனிதனாகப் பிறந்து விட்டார்களே இருவரும்! பிறகு ஊடல் வராமல் போகுமா. சிறிது நேரத்தில் இருவருக்குமே கோபம் தணிகிறது.

ஆனாலும், யார் முதலில் பேசுவது என்ற அகங்காரம். பொதுவாக, பெண்களிடம் வைராக்கியம் அதிகம். நம் சீதாபிராட்டியும் அதற்கு விதிவிலக்கா என்ன அவள் ராமனிடம் பேசவில்லை.அந்த மனுஷன் தானே வீண் வம்பிழுத்தார். அவரே வந்து பேசட்டுமே, என தன் செந்தாமரைக் கண்ணின் ஓரத்தால் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.அவள் நம் மனைவிதானே! இவளுக்கெல்லாம் ரொம்ப இடம் கொடுத்தால் தலைமேல் ஏறி உட்கார்ந்து கொள்வாள். இருக்கட்டும், இருக்கட்டும், என்று எந்நேரமும் அவளை மார்பில் சுமந்து கொண்டிருக்கும் நாராயணனின் அம்சமான ராமன்,

மனிதனாகிப் போனதால் கோபப்படுவது போல் நடித்துக் கொண்டிருக்கிறான். ஒரு முக்கிய விஷயம் ஆண்களுக்கு வைராக்கியம் பெண்களை விட குறைவென்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

ராமபிரானால் அவளிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. நேரடியாக பேச தயக்கம். எனவே, மாமனார் போட்ட மோதிரத்தை கழ ற்றி, சீதாவுக்கு தெரியாமல், ஒரு பலகையில் வைத்து விட்டு, என் மோதிரத்தை எங்கே? யாராவது பார்த்தீர்களா, அம்மா கோசலா நீ பார்த்தாயா? சுமித்ராதேவி நீ பார்த்தாயா? அம்மா கைகேயி நீ கண்டாயா? அடேய் தம்பிக ளே! நீங்கள் கண்டீர்களா? என வீட்டையே இரண்டுபடுத்திக் கொண்டிருந்தார்.

ராமன் அதிகாரம் பண்ணிக் கொண்டிருந்தார். சீதாதேவியும் அவர்களோடு சேர்ந்து தேடினாள். பலகையில் இருந்த மோதிரம் அவள் கண்ணில் பட்டு விட்டது. எடுத்தாள். அப்பா போட்ட மோதிரமாச்சே, அந்த கரிசனை வேறு நம் சீதாபிராட்டிக்கு இருக்காதா என்ன.
எடுத்த மோதிரத்தை ராமனிடம் கொண்டு வந்தாள். இந்த சண்டைக்கார மனுஷனிடம் பேசுவதாவது. மோதிரத்தை மட்டும் அவனிடம் நீட்டினாள். இப்போது, ராமபிரான் சீதையிடம் சரணடைந்து விட்டார்.

ஆமாம்! மோதிரத்தை எடுத்தாய் அல்லவா! கையில் போட்டு விட வேண்டியது தானே, என்று பேச்சுக் கொடுத்தார். கணவர் முதலில் பேசியதில் சீதாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. அவரருகே வந்தாள். பேசாமலே மோதிரத்தைப் போட்டாள். பேசாவிட்டாலும், மோதிரத்தை போட்டுவிட்டாளே! இப்போது கோபம் தீர்ந்து விட்டதா? என்று சொல்லி, அவளை அப்படியே ஆலிங்கனம் (தழுவுதல்) செய்து கொண்டார்.

இப்போது அதே மோதிரத்தை ஆஞ்சநேயர் காட்டுகிறார். அதைப் பார்த்து சீதை சொன்னா ளாம், ஏ மோதிரமே, அன்று ஊடலின் போதும் நீ தான் எங்களைச் சேர்த்து வைத்தாய். இன்று பிரிந்திருக்கும் போதும் நீ தான் எங்களைச் சேர்த்து வைக்க வந்திருக்கிறாய் என்று.

ஸ்ரீ ராம.. ஜெய ராம.. ஜெயஜெய ராமா..

நாளை தொடரும்..