சீற வேண்டிய நேரத்தில் சீறு என்று பாம்பிற்கு உபதேசித்த குரு!
ஒரு ஊரில் ஒரு நாக பாம்பு ஒன்று இருந்தது. அந்த வழியிலேயே யாரைக் கண்டாலும் கடித்து விடும். அந்த ஊரில் உள்ளவர்கள் அந்த வழியை பயன்படுத்தவே தயங்கினர். ஒரு நாள் அந்த வழியாக குரு ஒருவர் வந்தார். அவர், அந்த வழியை கடக்க முயற்சித்த போது எல்லோரும் அவரை தடுத்தனர். ஆனால், அந்த குரு அந்த வழியைத் தான் பயன்படுத்தி சென்றார். அப்போது அவரை தீண்ட அந்த நாக பாம்பு வந்தது. ஆனால், அவரது தன்மை அந்த நாகத்தை அமைதியடையச் செய்தது.
அந்த நாக பாம்பிடம் குரு ஏன் நாசம் செய்கிறாய், கொலையாளி ஆகி என்ன அடையப் போகிறாய், என்ன பயன் என கூறி அதற்கு தியானம் கற்றுக் கொடுத்தார், அன்றிலிருந்து அந்த நாகம் தியானம் செய்ய தொடங்கியது. இதையடுத்து, அந்த ஊர்க்காரர்கள் அந்த நாக பாம்பை கல்லெறிந்தும் குச்சி வைத்து அடித்தும் துன்புறுத்தி சித்திரவதை செய்தனர்.
வலி தாங்க முடியாமலும், உணவின்றியும் தவித்து வந்த நாக பாம்பு புற்றுக்குள் ஒளிந்து கொண்டது. அப்படியிருந்தும் அதனை துன்புறுத்தி வந்தார்கள். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து அந்த பக்கமாக குரு வந்தார். அவர் வருவதை அறிந்து கொண்ட நாக பாம்பு, அவர் பாதத்தில் வந்து பணிந்து நின்றது.
உனக்கு என்ன நடந்தது என்று கேட்டார். ஆனால், நாகமோ யார் மீதும் குற்றம் சாற்றாமல் இருந்ததால், நான் சாப்பிடாமல் பலவீனமாகிவிட்டேன் என்றது. இதையடுத்து, உடலில் என்ன தழும்பு என்று குரு கேட்டார். இங்கு இருக்கும் மக்கள் என்னை கொடுமைப்படுத்துகிறார்கள். அதற்கு குருவோ, உன்னை யாரையும் தீண்ட வேண்டாம் என்று தான் சொன்னேன் தவிர, சீற வேண்டாம் என்று சொல்லவே இல்லையே…
சீறாமல் இருப்பதுதான் ஆன்மீகம் என்றல்ல. நான் சொன்னதை நீ தவறாக புரிந்து கொண்டுவிட்டாய். நீ சீற வேண்டிய நேரத்தில் சீறாவிட்டால் உன்னை பாம்பு என்பதையே மறந்து விடுவார்கள் என்று கூறினார். இந்த உலகத்தில் நாமும் சில நேரங்களில் சீற வேண்டியது இருக்கிறது. ஆனால், அதில் விருப்பு வெறுப்பற்ற தன்மையில் சீற வேண்டும். அப்படியில்லை என்றால் நாம் மனிதர்கள் என்பதையே மறந்து விடுவார்கள்.
