ராகு ஸ்தலமாகிய திருநாகேஸ்வரம் ஆலயத்தின் வரலாறு!
நவக்கிரகத்தில் ஒருவரான ராகு பகவான் தெரியாமலே ஒரு தவறை இழைத்து அதனால் தன் சக்திகளை இழந்த அவர் தனது வலிமையை மீண்டும் பெற்ற ஸ்தலம், “திருநாகேஸ்வரம். ஸ்ரீ நாகநாதர் திருக்கோவிலை” பற்றி இப்பதிவில் பார்ப்போம்…
திருநாகேஸ்வரம் பெயர் காரணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருநாகேஸ்வரம். இங்கு நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, சிவபெருமானை பூஜித்த நாகநாதர் கோவில் உள்ளது. நாக அரசராகிய ராகு பூஜித்த காரணத்தால், இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டது.
திருநாகேஸ்வரம் நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேஷ தலம் என்ற பெருமையும் உடையதாகும். பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார்.
சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார்.
பிராத்தனை:
இந்த ஸ்தலத்தில் ஞாயிறு மலை 4.30 மணி முதல் 6.00 க்குள் ராகுகால வேளையில் பூஜை செய்வதினால் சகல தோஷமும் நீங்கும். இறுதி காலத்தில் உண்டாகும் மரண துன்பங்கள் அறவே இல்லாமல் போகும். ரிஷபத்தின் முன்நிற்கும் உமையொரு பாகனை ஞாயிறு, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் இறைவனை வழிபட்டு வந்தால் பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேர்வார்கள்.
ஆலயத்தின் அதிசயம்:
திருநாகேஸ்வரம் கோவில் சிறப்பு – இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார், இத்தலத்தில் சித்திரை மாதத்தில் சூரியன் ஒளி 11,12,13 தேதிகளில் லிங்கத்தின் மீது படும். இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல்கள் பெற்ற 274 சிவத்தலங்களில் 90 வது தேவாரதலமாகும்.
இறைவனின் நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம்.
இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. அதை எடுத்து பத்திரப் படுத்திக் கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருக்கின்றனர். இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருக்கின்றது.
திருநாகேஸ்வரம் வரலாறு:
ஒரு காலத்தில் பூமியை நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் பூமியை தாங்கிக்கொண்டிருந்தார், அப்பொழுது மனிதர்கள் சேர்த்த பாவங்களினால் அவரால் பூமியை சுமக்க முடியவில்லை. அவர் மிகவும் உடல் சோர்வடைந்தார், எனவே உடனே திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை வேண்டி நின்றார். உலகை தாங்குவதற்கு உரிய சக்தியை தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டார்.
ஆதிசேஷனின் வேண்டுதலுக்கு மனம் இறங்கிய சிவபெருமான், எவ்வளவு காலமானாலும் ஒரே தலையில் தாங்கும் சக்தியை தருவதாக சிவபெருமான் உறுதியளித்தார். பரிபூரண சக்தி பெற ஆதிசேஷன் அமுத கும்பத்தில் இருந்து வில்வம் விழுந்த இடமான கும்பகோணத்தின் ஒரு பகுதிக்கு வந்தான், அங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தான்.
நாகராஜன் பூஜித்ததால் நாகேஸ்வரன் என பெயர் பெற்றார். ஓரு காலத்தில் வெள்ளத்தில் மிதந்து வந்த அமுத கும்பத்தின் உச்சியில் இருந்து வில்வம் தவறி விழுந்து. அந்த இடம் வில்வவனம் என்று பெயர் பெற்றது. இவ்விடத்தில் கோயில் அமைந்ததால் சுவாமிக்கு வில்வனேசர் மற்றும் பாதாள பீஜனாதர் ஆகிய பெயர்களும் வழங்கப்பட்டது. மடந்தை பாகர், செல்வபிரான் போன்ற பெயர்களும் சுவாமிக்கு உண்டு.
அம்பாள் சன்னதி:
அம்பாளுக்கு இத்தலத்தில் இரண்டு சந்நிதிகள் உள்ளன. சுவாமி சந்நிதிக்கு அருகில் பிறையணிவாள் நுதல் அம்மை தரிசனம் தருகிறாள். பிறை என்றால் சந்திரன்.
அம்பாளின் பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி அன்று மாலை வேளையில் சந்திரனின் ஒளி அம்பாள் மேல் விழுகின்றது. கார்த்திகை மாதத்து பெளர்ணமி நாளில் அன்னையை தரிசிக்க பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.
இது தவிரத் தனிக்கோயிலில் மற்றொரு இறைவியாக “கிரி குசாம்பிகை” சந்நிதியும் உள்ளது. இங்கு அன்னை தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். இவள் உருவம் சுதையால் ஆனதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள்.
ராகு கேது தோஷம் நீங்க:
ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தோஷம் நீங்கும். மேலும் திருமணம் தாமதமாதல், இல்லறத்தில் நிம்மதியின்மை, ஜாதகத்தில் புத்திர தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்க இராகு தசை, இராகு புக்திகளில் இராகு பகவானுக்கு பாலாபிஷேகம், அர்ச்சனை, ஹோமம் செய்து வழிபட்டுப் பேறு பெறலாம்.
