யுகமுடிவில் அண்டம் அழியும் போது பூலோகத்தில் மக்களும், புவர் லோகத்தில் பறவைகளும், சுவர்லோகத்தில் நெறிமிக்கவர்களும், மெச்சத் தக்கவர்களும், மஹர் லோகத்தில் பெரிய ரிஷிகளும் இருந்தனர். பூமியில் வைஷ்ணவிதேவி மணம் செய்து கொள்ளாமல், மந்தர மலையில் தியானத்தை (தவத்தை) ஆரம்பித்தாள். ஒருநாள் அவளது ஒன்றிய மனவமைதி குலைந்தது. இதனால் லக்ஷக்கணக்கான பெண்கள் தோன்றினர். அவர்களுக்காக தேவி ஓர் அரண்மனையை அமைத்திட அதிலிருந்து, நட்சத்திரங்களிடையே சந்திரன் ஆண்டு வந்தாள். பிரம்மலோகம் சென்று கொண்டிருந்த நாரதன் அழகிய அரண்மனையையும், வைஷ்ணவிதேவி, மற்ற பரிவாரங்களையும் கண்டு நின்றார். அவர் மனதில் மகிஷாசுரன் நினைவு வந்தது. அவனை அழிக்கும் வழியும் தோன்றியது.
நாரதன் மகிஷாசுரன் வசிக்கும் பெருநகர்க்குச் சென்று, அவனைக் கண்டு வைஷ்ணவி தேவியின் அழகைப் பற்றி விவரித்தார். அதுகேட்ட அசுரன் அவளே தனக்கேற்ற மனைவி என்று அவன் அவளை மணக்க விரும்புவதாகக் கூறி சம்மதம் பெற்றுவர, ஒரு தூதுவனை அனுப்பினான். அவனுடன் ஒரு சேனையையும் அனுப்பிவைத்தான். சேனைத்தலைவன் விரூபாஷன். தேவர்களும் வைஷ்ணவி தேவிக்கு உதவியாக வந்தனர். எனினும், அரக்கனே வென்றான். அடுத்து, வித்யுத் பிரமா என்னும் தூதுவன் வைஷ்ணவியிடம் சென்று அரக்கனின் எண்ணத்தைக் கூறினார். அத்துடன் மகிஷாசுரன் வரலாற்றையும் எடுத்துரைத்தான். பயங்கர அசுரன் விப்ரசித்தியின் மகள் மஹிஷ்மதி என்ற அழகி. அவள் ஒரு நாள் ஓர் அழகிய பள்ளத்தாக்கில் உலாவச் சென்றாள். அங்கு ஓர் ஆசிரமத்தைக் கண்டாள். அதைத் தான் பெற எண்ணி அதிலுள்ளவரை வெருளச் செய்து அகற்ற எண்ணி பெண் எருமை வடிவில் அதனுள் நுழைய, உண்மையை அறிந்த முனிவர் அவளை நூறாண்டுகாலம் எருமையாக இருக்கச் சபித்தார்.
மஹிஷ்மதி தன் தவறுக்கு மனம் வருந்தி முனிவரிடம் மன்னிப்புக் கேட்டுச் சாபத்தை நீக்க அருள வேண்டினாள். ஆனால், முனிவர் சாபத்தின் கடுமையைக் குறைத்து அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும் வரையில் பெண் எருமையாக இருக்குமாறு செய்தார். இந்தப் பெண் எருமை நர்மதைக் கரையில் வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகள் கழிய அந்நதி நீர் சிந்துத்தீப முனிவரால் சக்தி வாய்ந்ததாயிற்று. இந்தப் பெண் எருமை அந்நதியின் புண்ணிய நீரில் குளித்தது. அதற்கு ஓர் மகன் பிறந்தான். அவனே மகிஷாசுரன்.
இந்த மகிஷாசுரனே இப்போது வைஷ்ணவி தேவியை அடைய தூது அனுப்பினான். ஆனால், வைஷ்ணவி தேவியோ தானோ, மற்றும் தன் தோழியர்களில் எவருமோ, மஹிஷாசுரனை மணக்கும் பேச்சுக்கு இடமே இல்லை என்றாள். இதனால் வைஷ்ணவி தேவியும் அவள் தோழியரும் அரக்கரின் சேனையை எதிர்க்க மாபெரும் போர் நடந்தது. தேவி பத்து காளிகளும், அவற்றில் ஆயுதங்களும் கொண்டு போரிட்டாள்.
மகிஷாசுரன் தானே போரில் போர் புரியவர, நெடுநாட்கள் வரை போர் நிகழ இறுதியில் மகிஷாசுரன் தோற்று ஓடலாயினான். அத்தேவியும் அவனைத் தொடர்ந்து சென்று ஷதஸ்சிருங்க மலையில் மகிஷாசுரனைப் பணியச் செய்து அவன் தலையை ஈட்டியால் வெட்டினாள். அரக்கன் அருள்மிகு வைஷ்ணவி தேவியால் கொல்லப்பட்டதால் சொர்க்கவாசம் பெற்றான். தேவர்கள் துயர் நீங்கிட தேவியின் புகழைப் பலபடப் பாடித் துதித்தனர். இது தேவி மகிமை கூறும் ஸ்தோத்திரம் அதாவது துதியாகும். இதை தினமும் படித்தால் பாவங்கள் நீங்கி வெற்றி உண்டாகும். இந்த மகிஷாசுரமர்த்தன வரலாறு மார்க்கண்டேய புராணம் போன்றவற்றிலும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி மகிஷாசுரனைக் கொன்ற தேவி துர்க்கை எனப்படுகிறாள்.
சகல செல்வங்களை அள்ளித்தரும் வைஷ்ணவி தேவி மந்திரம்
மகாவிஷ்ணுவின் சக்தி சொரூபமாக ஆவிர்ப்பவித்த அருள்தான் வைஷ்ணவி தேவி. வைஷ்ணவி தேவிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து, வைஷ்ணவியை வழிபாடு செய்து வந்தால், சகல ஐஸ்வரியங்களும் உங்கள் இல்லத்தில் குடிகொள்ளும். செல்வ வளம் தரும் அன்னையாக வைஷ்ணவி தேவி பார்க்கப்படுகிறாள். சகல சவுபாக்கியங்களுடன், செல்வ வளம் பெற விரும்புபவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் இவள். குறிப்பாக தங்கத்தை அளவின்றி கிடைக்கச் செய்பவள். அம்பாளின் கைகளில் இருந்து பிறந்தவள்.
#மந்திரம்:
ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்
தொடரும்…
ஓம் நமோ வராஹாய!
