வராஹ புராணம் – பகுதி 25 – மாயை

328

மாயையின் மர்மங்கள் அறிதற்கு எளிதல்ல. விஷ்ணுவைத் தவிர மற்ற எதுவும் மாயையே. அதன் உண்மை நிலையை அறிய இயலாது. இந்த மாயையின் தன்மையை விளக்க வராகம் ஒரு வரலாற்றைக் கூறுகிறது. சோமசர்மா என்ற அந்தணன் விஷ்ணு பக்தன். அவன் உண்ணா நோன்பு, விரதங்கள், தவம் ஆகியவற்றை ஹரித்வாரம் என்ற இடத்தில் இயற்றி வந்தான். பகவான் விஷ்ணு தோன்ற அவரிடம் அவன் மாயையின் உண்மை தன்மையைக் கூறுமாறு வேண்டிட, விஷ்ணு அவனை அருகிலுள்ள ஆற்றில் நீராடி வருமாறு பணித்தார். அவன் உடைகளையும், கமண்டலம், தண்டம் ஆகியவற்றையும் கரையில் வைத்து விட்டு நீராடச் சென்றான். அவன் ஒரு நிஷாதனின் (கீழ் சாதி) மகளாகப் பிறந்து, அதே சாதி ஆண் ஒருவனை மணந்து மூன்று மகன்களையும், நான்கு பெண்களையும் பெற்றான். இவ்வாறு ஐம்பது ஆண்டுகள் தன்னைப் பற்றி அறியாமலேயே வாழ்ந்தாகி விட்டது. முற்பிறவி சோமசர்மா என்பதை உணரவே இல்லை.

ஒருநாள் விஷ்ணு அவளை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று அதில் நீராடி வரச்சொன்னார். அவன் ஆடைகளைக் களைந்து ஆற்றங்கரையில் வைத்து விட்டு நீரில் மூழ்கி எழுந்தாள். அப்போது அவன் தன் முன்வடிவ சோமசர்மாவாக வெளிவந்தான். இவ்வாறு சோமசர்மா நீரிலிருந்து வெளிவர அங்கிருந்த ரிஷிகள், முனிவர்கள் அவனை இவ்வளவு நேரமா குளித்து வர? இம்மாதிரி நீண்ட நேரம் எப்போதும் ஆனதில்லையே என்றனர். அவன் தன் நிஷாத பெண்மணியின் வாழ்க்கையை எண்ணி மனவருத்தம் கொண்டான். அந்நிலையில் தான் செய்த காரியங்கள் பற்றி எண்ணிப்பார்த்தான். குழம்பிய மனத்துடன் ஆற்றங்கரையில் அமர்ந்து தன் துக்க நிலையை எண்ணி வருத்தம் கொண்டான்.

நிஷாதன் (சோமசந்தரனின் நிஷாத கணவன்) ஆற்றுக்கு நீராடச் சென்ற மனைவியைத் தேடி வந்து கரையில் அவள் ஆடைகளைப் பார்த்த அவன் அவள் ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டாள் என்று எண்ணி வெகு வருத்தம் கொண்டான். இதைக் கண்ட சோமசர்மா அவனுக்கு ஆறுதல்கள் கூறி அவனை வீட்டுக்குத் திரும்பிச் சென்று குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளுமாறும், அவர்களுக்காகத் துன்பத்தை அடக்கிக் கொள்ளுமாறும் கூறினான். சோமசர்மா நடந்ததனைத்தையும் நிஷாதனுக்குச் சொல்ல நினைத்தான். ஆனால் அப்போது அங்கு நிஷாதனோ, அங்கிருந்த கிராமமோ எல்லாம் மறைந்துவிட்டன. அப்போது விஷ்ணு அவன் முன் தோன்றி மாயையில் மூழ்கி இருப்பதைச் சுட்டிக் காட்டினார். மாயை ஆழங்காண முடியாதது. அது மனித அறிவுக்குப் புலப்படாதது. மாயை அறியச் செய்த முயற்சியில் சோமசர்மா துயரங்களை அனுபவிக்க நேர்ந்தது.

இதற்கெல்லாம் காரணம் அவன் முற்பிறவியில் ஒரு நெறிமுறை தவறாத பிரமாணனுக்கு மரியாதையும், வணக்கமும் செலுத்தத் தவறினான். விஷ்ணு மறைந்தவுடன், சோமசர்மா குப்ஜாம்ரக மெனும் தீர்த்தத்தை அடைந்து தவம் செய்ய ஆரம்பித்தான்.

தொடரும்…

ஓம் நமோ வராஹாய!