வராஹ புராணம் பகுதி நாளையுடன் நிறைவடைகிறது
மகாவிஷ்ணுவுக்குப் பிரியமான புனிதத் தீர்த்தமும், தலமும் வடமதுரையே. வடமதுரையின் பெருமையை விரிவாக வராக புராணம் காட்டுகிறது. வடமதுரை மைந்தன் கிருஷ்ணன் அவதரித்த இடம். இது நைமிசாரணியத்தை விடச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. வடமதுரையில் உள்ள பிரயாகை, புஷ்கரம், வாரணாசி, விந்துகா, விச்ராந்தி, காம்பில்யா என்பவையும் முக்கிய தலங்களாகும். ஓர் அம்பட்டன் காம்பில்யாவில் யமுனை நதியில் நீராடி மறுபிறவியில் பிராமணாய் பிறந்தான். கொடூரமான வேடன் ஒருவன் நைமிசாரணியத்தில் வசித்து வந்தான். அவன் வடமதுரை சென்று சதுர்த்தசி திதி அன்று யமுனையில் நீராடினான். அதில் மூழ்கி விட்ட அவன் அடுத்த பிறவியில் சவுராஷ்டிராவில் ஒரு க்ஷத்திரியனாக யக்ஷமதனன் என்ற பெயரில் அரசனானான். அவன் எழுபது ஆண்டுகள் அரசாண்டான். அவனுக்கப் பல ராணிகள். ஏழு புத்திரர்களும், ஐந்து பெண்களும் பிறந்தனர்.
ஓர் இரவில் அவன் உறங்கிக் கொண்டிருக்கும்போது அவனுடைய பிரிய மனைவி பிவாரி அவன் பெருமூச்சு விட்டுக் கொண்டு, முனகி புலம்புதலைக் கேட்டாள். அவனை எழுப்பி வற்புறுத்தி அவனுடைய செய்கைக்குக் காரணம் கேட்டாள். அப்போது அவன், அவள் தன் அரசை மூத்த இளவரசனிடம் அளித்து விட்டு, ராஜபோக வாழ்க்கையைத் துறந்து விட மதுரைக்கு இருவரும் செல்ல அனுமதித்தால் மட்டுமே காரணம் கூறுவதாகக் கூறினான். அவ்வாறே செய்து விட்டு, வடமதுரையை அடைந்து கடவுளைப் பயபக்தியுடன் வழிபட்டு சமயச் சடங்குகளைத் தவறாமல் செய்து வந்தாள். சிலநாட்கள் கழிந்தவுடன் பிவாரி மன்னனிடம் காரணத்தைக் கேட்டாள். அப்போது அவள் தன் முற்பிறவி வரலாற்றைக் கூறினான். அவன் யமுனையைக் கடக்கும்போது ஆற்றில் விழுந்து இறந்ததாகவும், அந்த புண்ணிய நதியினால் அவன் காசிமன்னனின் இளவரசியாய் பிறந்து யக்ஷமதனனை மணந்ததாகவும் கூறினான். அவன் தன் முற்பிறவியிலேயே வடமதுரையை நினைத்துச் செல்ல விரும்பியதே தன் முக்கல் முனகலுக்குக் காரணம் எனக் கூறினான். இருவரும் வடமதுரை அடைந்து அங்கேயே மரித்து விண்ணுலகேகினர். வடமதுரையில் மேலும் பல முக்கிய தலங்கள் உள்ளன. அவை மதுவனம், குந்தவனம், காம்யகவனம், மகாவனம், பிருந்தாவனம், விமலகுண்டம், நாக தீர்த்தம், மானசம், கண்டாபரணம் ஆகியவை.
அக்ரூர தீர்த்தம்: விஷ்ணுவின் விருப்பமான உறைவிடம் இது. அதில் நீராடுவோர் ராஜசூய யாகம் செய்த பலன் பெறுவர். அங்கு நீத்தார்கடன் ஆற்றின் முன்னோர்கள் உடனே விமுக்தி அடைவர். அங்கு சுதானு என்ற வைசியன் வசித்தான். அவன் பக்கத்து வீட்டில் இருந்த அக்னிதத்தா என்ற ஒரு திருடன் இறந்து பேயானான். சுதானு என்னும் அந்த விஷ்ணுபக்தன் ஒரு கோயிலில் விஷ்ணு விக்கிரகத்தின் முன் ஆடிப்பாடிக் கொண்டிருப்பது வழக்கம். ஒரு நாள் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த சுதானுவை அப்பேய் பற்றிக் கொண்டு அவனைத் தின்று விடுவதாகக் கூறியது. சுதானு தான் கோயிலுக்குச் சென்று விஷ்ணுவைப் பூசித்துத் திரும்புவதாக உறுதியாகக்கூற அதுவும் அவனைத் திரும்பிப் போக வேண்டாம் என்று கூறியும் அவன் சொன்ன சொல் தவறமாட்டேன் என்று கூறி கோயிலிருந்து திரும்பிவர, சொன்ன சொல்படி வந்த சுதானுவிடம் பேய், சுதானு தான் பெற்ற புண்ணியத்தை எல்லாம் அவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தால், விட்டு விடுவதாகக் கூறிற்று. அவ்வாறே தானம் செய்ய, பேய் தன் அவல நிலை நீங்கப்பெற்றது.
வடமதுரையில் நீத்தார் கடன், சிரார்த்தம் செய்தாலும், வடமதுரையைப் பிரதக்ஷிணம் செய்தாலும் பெரும் புண்ணியம் சேரும். பிரதக்ஷணம் கால் நடையாகச் செய்ய வேண்டும். ஒரு சமயம் ஓர் இளவரசன் குதிரைச் சவாரி செய்து பிரதக்ஷினம் செய்தான். வழியில் மூவரும் மரணமெய்தினர். குதிரையும், சேவகனும் உடனே மோக்ஷம் அடைந்தனர். ஆனால் இளவரசனுக்கு அந்தப் பாக்கியம் கிட்டவில்லை. (ஹய = குதிரை, முக்தி = மோக்ஷம்) எனவே அவ்விடம் ஹயாமுக்தி எனப்பெயர் பெற்றது.
கோவர்த்தனம்: வடமதுரைக்கு மேற்கில் கோவர்த்தனம் உள்ளது. அங்கு வராகாவதார விக்கிரகம் உள்ளது. அது கபில வராகம் எனப்படுகிறது. இதை முதல் முதலில் கபிலர் உருவாக்கினார். அது இந்திரனுக்கு கை மாறியது. இராவணன் அதனை அபகரித்தான். அடுத்து ராமன் கைக்கு மாறியது. வடமதுரைக்கு இன்னல் விளைந்தது. இராமன், லவணன் என்னும் அரக்கனை ஒழிக்க சத்துருக்கனனை அனுப்பினான். லவணனை வென்றதற்குப் பரிசாக கபிலவராகத்தைப் பெற்றான். மற்றவற்றைவிட வடமதுரையில் உள்ள கபிலவராகத்தினைப் பூசித்தல் சிறப்புடையது.
சக்கர தீர்த்தம்: இது கோவர்த்தனத்துக்கு அருகில் உள்ளது. இது இந்திரனுடைய கர்வத்தைக் கிருஷ்ணன் அடக்கினான் என்பதுடன் தொடர்புடையது. பகவான் கிருஷ்ணன் இந்திரபூசையை நிறுத்தி கோவர்த்தன பூசை செய்ய, இந்திரன் பெருமழை பெய்விக்க கிருஷ்ணன் அனைத்தையும் காப்பாற்ற கோவர்த்தனகிரியைக் குடையாய் எடுக்க இந்திரன் அவர் மகிமை அறிந்து அடிபணிந்தான். வட மதுரையின் சிறப்பு பற்றி மற்றொரு வரலாறும் உண்டு. சுபாதன் என்னும் வைசியன் நற்கருமம் ஏதும் செய்யாததால் இறந்து பிரேத வடிவில் திரிந்து வந்தான். ஒரு மரப்பொந்தில் இருந்து வந்த அந்த பிரேதம் அங்கு வந்த விபாதன் என்ற மற்றொரு வைசியனைப் பற்றிக் கொண்டது. விபாதன் பெற்றோர்களுக்குச் சேவை செய்து, தானங்கள் அளித்து, முன்னோர்களுக்கான சமயச்சடங்குகள் போன்ற நற்காரியங்களைச் செய்து வந்த புண்ணியவான். அந்தப் பிரேதம் விபாதனை தனக்கும் சிராத்தம் முதலிய காரியங்களைச் செய்து முடிக்குமாறு வேண்டிட, அவனும் அவ்வாறே செய்திட அப்பிரேதம் விமுக்தி பெற்றது. வடமதுரையில் செய்யப்படும் எந்த சிராத்தமும் பலன் அளிக்காமல் பொய்த்ததில்லை.
அஸி குண்டம்: சுமதி என்னும் மன்னன் எல்லாத் தீர்த்தங்களையும் தரிசிக்க விரும்பினான். ஆனால், அதுமுடியுமுன்பே இறந்து விட்டான். அடுத்து அவன் மகன் விமதி மன்னனானான். அவன் தந்தை விட்ட தீர்த்தயாத்திரையைச் செய்து முடித்து அவன் தந்தைக்குப் புண்ணியம் சேர்க்குமாறு நாரதர் அறிவுரை கூறினார். அவ்வாறு செய்வதை விட வடமதுரையிலேயே இருப்பதே சாலச்சிறந்தது என அவன் எண்ணினான். மற்ற தீர்த்தங்கள் அச்சமுற்று விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு விமதியின் தலையை வாள் கொண்டு வெட்டினார். (அசி = வாள்) எனவே அவ்விடம் அசி குண்டம் என்றாயிற்று. வடமதுரையில் விஷ்ணுவின் (கிருஷ்ணனின்) பாதம்படாத இடமே இல்லை. எங்கும் எதிலும் அவனே உள்ளான். ஒரு சமயம் வடமதுரை வந்த கருடனுக்கு எங்கும் விஷ்ணுவே காணப்பட்டார். அந்த மாயையை நீக்க வேண்டிய கருடனுக்கு மகாவிஷ்ணு வடமதுரையில் எல்லாமே அவரது கண்ணாடி பிம்பங்களே என்று கூறினார். மற்றும் பல, வடமதுரை பற்றி இப்புராணத்தில் காணப்படுகின்றன.
தொடரும்…
ஓம் நமோ வராஹாய
